எளியாரும் வலியாரும்

ஒரு காட்டில் இருந்த சிங்கத்தின் குகைக்குப் அருகில் ஒரு குளம் இருந்தது. சிங்கத்தின் குகை இருப்பதால் அங்கு மிருகங்கள் வர பயப்பட்டன.
எளியாரும் வலியாரும்

ஒரு காட்டில் இருந்த சிங்கத்தின் குகைக்குப் அருகில் ஒரு குளம் இருந்தது. சிங்கத்தின் குகை இருப்பதால் அங்கு மிருகங்கள் வர பயப்பட்டன.

குளத்தில் இருந்த சில தவளைகள் தாவித் தாவி கரைக்கு வரும். சிங்கத்தின் குட்டி ஒன்று தரைக்கு வரும் தவளைகளை தன் காலால் உருட்டியும், நசுக்கியும், விளையாடி மகிழும். இதனால் சில தவளைகள் இறந்தன.

ஆனால் துணிச்சலாக அடிக்கடி ஒரு யானை தண்ணீர் குடிக்க வரும். தாய் சிங்கம் குகையை விட்டு வெளியே வந்தால், யானையைப் பார்த்து கர்ஜிக்கும்.... உடனே யானை பயங்கரமாகப் பிளிறும்... அதைக் கேட்டு சிங்கம் குகைக்குள் ஓடிவிடும்.

ஒரு நாள் யானை வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது, ""என்னைக் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..'' என்று ஓலமிடும் குரல் கேட்டது.

யானை குரல் வந்த திசையைப் பார்த்தது. அங்கு சிங்கக்குட்டி காலால் எதையோ உதைத்து விளையாவது தெரிந்தது. உடனே யானை அங்கு சென்றது. சிங்கக்குட்டியிடம் மாட்டிக் கொண்டு தவித்த தவளை, ""என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை.. என்னைக் கொன்றுவிடாதே...விட்டுவிடு'' என்று கெஞ்சியது.

அதைப் பார்த்த யானை, ""அதை விட்டுவிடு'' என்றது.

""அதைச் சொல்ல நீ யார்? நீரில் வாழும் இது ஏன் தரைக்கு வந்தது? அதனால்தான் இந்த தண்டனை...'' என்று கூறி சிரித்தது.

யானை உடனே, ""உனக்கு நீந்தத் தெரியுமா...?'' என்றது.
""தெரியாதே...'' என்றது சிங்கக்குட்டி. ""சரி... சரி.... உன்னால் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்க முடியுமா?'' என்றது யானை.
""முடியுமே...'' என்று கூறிய சிங்கக்குட்டி நான்கு கால்களையும் தூக்க முயன்று அப்படியே மல்லாக்க விழுந்தது. சிங்கக் குட்டியின் காலடியில் சிக்கியிருந்த தவளை இதுதான் சரியான நேரம் என்று பட்டென்று எழுந்து, குளத்துக்குள் பாய்ந்தது.
சிங்கக்குட்டி, ""ஏன் இப்படி செய்தாய்? உன்னால்தான் அந்தத் தவளை தப்பிவிட்டது. நாளைக்கு என்னிடம் சிக்காமலா போகும்?'' என்றது ஆவேசமாக.
உடனே யானை, ""கவலைப்படாதே... எனக்கு ஒரு வித்தைத் தெரியும்... நாளைக்கு அதைப் பயன்படுத்தி அந்தத் தவளையை உனக்குப் பிடித்துத் தருகிறேன்.
""அப்படியா?''
""ஆமாம்... அந்த குளக்கரை மரத்தடிக்கு நாளை இதே நேரத்துக்கு வந்துவிடு...'''' என்றது யானை.
""சரி'' என்று சொல்லிவிட்டு குகைக்குள் சென்றுவிட்டது.
மறுநாள் குளக்கரை மரத்தடியில் சிங்கக்குட்டி காத்திருந்தது. யானையும் அங்கு வந்தது.
""என் தும்பிக்கையில் ஏறிக்கொள். நான் உன்னை மரத்தில் ஏற்றி விடுகிறேன். என் வித்தையைப் பயன்படுத்தி அங்கிருந்து அந்தத் தவளையை சுலபமாகப் பிடித்துவிடலாம்...''
""சரி...'' என்ற சிங்கக்குட்டியைத் தன் தும்பிகையால் உயரமான மரக்களையில் உட்காரவைத்தது, பிறகு மரத்தை வேகமாக உலுக்கத் தொடங்கியது. மரம் பலமாக ஆடியது. பிடி நழுவி, அலறியபடியே சிங்கக்குட்டி குளத்தில் ""பொத்'' தென்று விழுந்தது.
தண்ணீரில் தத்தளித்தபடியே ... ""என்னைக் காப்பாற்று!''என்று கதறியது.
சிங்கக் குட்டியின் குரல் கேட்டு, ஓடிவந்த தாய் சிங்கம் "" என் பிள்ளையைக் காப்பாற்று... பார்த்துக் கொண்டிருக்கிறாயே...'' என்று யானையைப் பார்த்துக் கதறியது.
அதைக் கேட்ட யானை , ""நேற்று உன் பிள்ளையிடம் இப்படித்தான் ஒரு தவளைக் குட்டியும் கதறியது... அதுவும் அதன் அம்மாவுக்கு ஒரே பிள்ளைதான். ஆனால் உன் பிள்ளை,
"தண்ணீரில் வாழ வேண்டியவர்கள் தரைக்கு வந்தால் அப்படித்தான் துன்புறுத்துவேன்!' என்றது. இன்று தரையில் வாழ வேண்டிய உன் பிள்ளை ஏன் தண்ணீருக்குப் போனது...? அதைக் கேள்!...'' என்றது.
""அப்படிக் கூறியது தவறுதான்... மன்னித்துவிடு... என்னைக் காப்பாற்று... இனிமேல் சிறிய உயிரினங்களை நான் எதுவும் செய்ய மாட்டேன்...'' தண்ணீரில் தத்தளித்துக்கொண்டே அலறியது சிங்கக்குட்டி.
உடனே குளத்தில் இறங்கிய யானை தன் தும்பிக்கையால் சிங்கக் குட்டியைத் தூக்கி கரையில் போட்டது. உயிர் பிழைத்த சிங்கக்குட்டி யானையிடம் மன்னிப்பு கேட்டது.
""என்னிடம் ஏன் கேட்கிறாய்... அதோ அவைகளிடம் மன்னிப்பு கேளு'' என்று தும்பிக்கையைத் தூக்கிக் காட்டியது. அங்கு தவளைக் குட்டியும் அதன் தாயும் இருந்தன.
அப்போது தாய் தவளை, சிங்கக் குட்டியைப் பார்த்து, ""எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்'' என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா? எங்களைக் காப்பாற்ற வந்த இந்த யானைதான் எங்கள் தெய்வம் என்று யானைக்கு தன் நன்றியைத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com