கருவூலம்: தமிழ் மொழியின் வரலாறு!

இந்தச் சிறு கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றையும், அதன் சிறப்புகளையும், எழுதுவது என்பது இயலாத ஒன்று! எனினும் சற்று சுருக்கமாகத் தமிழ்மொழியின் வரலாற்றை நாம் இந்தக் கட்டுரையில் காண்போம்!
கருவூலம்: தமிழ் மொழியின் வரலாறு!

தமிழ் மொழி மிகப் பழமை வாய்ந்த மொழியாகும்!

இந்தச் சிறு கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றையும், அதன் சிறப்புகளையும், எழுதுவது என்பது இயலாத ஒன்று! எனினும் சற்று சுருக்கமாகத் தமிழ்மொழியின் வரலாற்றை நாம் இந்தக் கட்டுரையில் காண்போம்!

தமிழ் மொழிக்கு வரி வடிவம், அதாவது எழுத்து வடிவம் எப்பொழுது உருவானது? என்ற வினாவிற்கு சரியான விடை இன்றுவரை கிடைக்கவில்லை.
தற்சமயம் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு சில உண்மைகளை அறிகிறோம்.

தமிழின் பெருமைகள்

தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்று. தமிழ் ஒரு செம்மொழி. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, ரியூனியன், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், பிஜி, டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997 - ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி மக்களால் தமிழ் பேசப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 - ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00, 000 தொல்லியல் கல்வெட்டுப் பதிவுகளில் 60,000 -க்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் ஏறத்தாழ 95 சதவீதம் தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் சேர்ந்து5 சதவீதத்திற்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

தமிழின் பழமை!

2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி தற்போது வழக்கில் உள்ள ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் ஒலி, வரி வடிவம் மற்றும் சொல்லமைப்பு
களில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளன. எனவே பண்டைய இலக்கியங்கள் இன்றும் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளன.

எடுத்துக்காட்டாக, ஆத்திசூடி சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. இவற்றின் கருத்துகள் இன்றும் புரிந்து கொள்ளப்படுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. இவை "பிராமி' எழுத்துக்களால் எழுதப்பட்டவை ஆகும்.

பல இலக்கியப் படைப்புகள் பனையோலைகளில் எழுதப்பட்டு, திரும்பத் திரும்ப பிரதி எடுக்கப்பட்டதன் மூலமும், வாய்மொழி மூலமும் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால் மிகப் பழைமையான படைப்புகளில் காலங்களைக் கணிப்பது கடினமாக உள்ளது.

மிகப் பழைய நூல் தொல்காப்பியமாகும். இது தமிழ் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி.மு. 400 - ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. 2005 - இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சில சான்றுகள் தமிழ் மொழி எழுத்தை கி.மு. 600 - க்கும் முந்தையதாகக் காட்டுகின்றன.

இறையனார் அகப்பொருள் உரை என்ற நூலில் கூறியுள்ளது உண்மையாக இருந்தால் தமிழர்களின் இலக்கியக் காலம் சுமார் கி.மு. 10,500 ஆண்டுகள் வரை செல்லும். ஆனால் இதற்கு வலுவான பிற ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மொழியை நிலை நிறுத்த எழுத்து மிக அவசியம். எழுத்தற்ற மொழிகள் நிலைப்பது கடினம்.

தமிழ் பிராமி

தமிழ் பிராமி என்பது பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட எழுத்து முறையாகும். இவை கி.மு. 5 - ஆம் நூற்றாண்டு முதல் கிட்டத்தட்ட கி.பி. 3 - ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தன.

இது அக்காலத்தில் தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து முறைகளான அசோக பிராமி, தென் பிராமி, மற்றும் "பட்டபிரோலு' போன்றவற்றில் இருந்து வேறுபட்டது.

பிராமி என்பது இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு "அபுகிடா' வகை எழுத்து முறையாகும்.

தமிழ் பிராமி எழுத்துகள் குகைப்படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுகள், ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் கி.மு. 500 காலத்துக்குரிய ஆரம்ப தமிழ் பிராமி எழுத்துகள் ஈரோடுக்கு அருகில் உள்ள கொடுமணலிலும் பழனிக்கு அருகில் உள்ள பொருந்தலிலும், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரிலும், மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது.

அண்மையில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு. 6 - ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே பிராமி எழுத்து முறை இன்னும் பழைமையானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ அரேபிய எண் முறையும் பிராமி எண் முறையிலிருந்தே தோன்றின.

வட்டெழுத்து

வட்டெழுத்து என்பது கி.பி. 3 - ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுதப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும். வட்டெழுத்துகள் பிராமி எழுத்து முறையிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. பிராமி எழுத்துகள் கோடுகளாக இருப்பதால் ஓலைச் சுவடியில் எழுதினால் சுவடி கிழிந்து விடும் என்பதால் வட்டெழுத்து உருவானதாக சொல்வதுண்டு. வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தமிழகத்தின் பல கோயில்களில் வட்டெழித்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

பல்லவர் கால எழுத்து முறை

கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து, தமிழ்நாட்டில் வழக்கொழிந்து தற்காலத் தமிழ் எழுத்தை ஒத்த ஓர் எழுத்து முறை பயன்படுத்தப்பட்டது.

தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 - ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்து முறையை பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை.

கிரந்த எழுத்துகள் என்பது சமஸ்கிருத வார்த்தைகளை எழுதுவதற்காக தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள் ஆகும். 8 - ஆம் நூற்றாண்டு அளவில் தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும், இப்புதிய எழுத்து முறை வட்டெழுத்துக்கு பதிலாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11 - ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன்பின் பாண்டிய நாடு சோழர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ, பல்லவ எழுத்து முறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது. பல்லவ எழுத்து முûறை கல்வெட்டுகள், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளன. இக்கோயில் பல்லவப் பேரரசர் ராஜசிம்மனால் கட்டப்பட்டது.

நம்முடைய தற்காலத் தமிழ் எழுத்துகள் இந்த பல்லவ எழுத்து முறையிலிருந்து தோன்றியதே ஆகும். பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாடு என்பது ஏட்டளவிலேயே இருந்தது. ஓலைச்சுவடிகளிலேயோ, கல்வெட்டுகளிலேயோ புள்ளியைக் காண இயலாது. மேலும் "எ' என்ற எழுத்துக்கும், "ஏ' என்ற எழுத்துக்கும் மாறுபாடு இருக்காது. அது போலவே "ஒ' என்ற எழுத்துக்கும், "ஓ' என்ற எழுத்துக்கும் வேறுபாடு இருக்காது. உயிரெழுத்துகளில் குறில், நெடில் என இரு எழுத்துகள் இல்லாமல், ஒரே எழுத்து மட்டுமே இருந்தது. அதனால் இடத்திற்கு ஏற்றாற்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

வீரமாமுனிவருக்கு முற்பட்ட தமிழ்

சுமார் 15 - ஆம் நூற்றாண்டு அளவில் தமிழ் எழுத்துகளுக்கு மிக நெருங்கிய வடிவினை பல்லவ தமிழ் எழுத்துகள் பெற ஆரம்பித்தன. அதே நேரத்தில் பல்லவ தமிழின் குறைபாடுகள் அப்படியே தொடர்ந்த வண்ணம் இருந்தன.

16 - ஆம் நூற்றாண்டின் இறுதியில்கூட எழுத்துத் தமிழில் "ர' கரத்திற்கும், காலிற்கும் ( "ô' ) வித்தியாசம் இல்லை. அதே போல் புள்ளி இருக்காது. "எ' கர, "ஏ' கார வேறுபாடும், "ஒ' கர, "ஓ' கார வேறுபாடும் இருக்காது.

வீரமாமுனிவரின் தமிழ்

வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட "கான்ஸ்டன்úஸா பெஸ்கி' 18 - ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். அவர் பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் மொழியில் புகுத்தினார். புள்ளியின் பயன்பாட்டைக் கொண்டுவந்தார். புள்ளியற்ற குறில் எழுத்துக்கள் நெடிலாகவும், புள்ளியுடன் கூடிய குறில் எழுத்துகள் குறிலாகவும் உச்சரிக்கப்பட்டன.

உதாரணம்.

வீரமாமுனிவர், "எ', "ஒ' ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களைச் செய்து, "ஏ'.... "ஓ' எனப் புது நெடில் உருவங்களைப் படைத்தார். அதே போல் ஒற்றைக் கொம்பை மாற்றி நெடிலுக்கு இரட்டைக் கொம்பை உருவாக்கினார். இந்த மாற்றத்தின் மூலம் குறில் எழுத்துகளில் புள்ளி வைக்கும் பழக்கம் தவிர்க்கப்பட்டது.

குறில் - கெ, கொ
நெடில் - கே, கோ

வீரமாமுனிவரின் சீர்திருத்தப்படி இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும். ஆனால் நாம் இப்பொழுது மேலிருந்து கீழாகவே எழுதுகிறோம். இவ்வாறுதான் காலப்போக்கில் எழுத்துகள் பல மாறுபாடுகளை அடைகின்றன.

"ô' போல் இருந்த கால் எழுத்துக்குக் கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது "ர' கரமாகிவிட்டது.

பெரியார் தமிழ்

பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமியால் தமிழ் எழுத்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக, தமிழ் பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் கால எழுத்து, என பல்வேறு வடிவங்களைப் பெற்று, வீரமாமுனிவரின் சீர்திருத்தம், பெரியாரின் சீர்திருத்தம், என மாற்றங்களைப் பெற்ற எழுத்துகளிலேயே இன்று தமிழ் எழுதப்பட்டு வருகிறது.

"அபுகிடா' எழுத்து முறையைச் சேர்ந்த தமிழில் தற்போது 12 உயிரெழுத்துகள், 18 மெய்யெழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகள் ஓர் ஆயுத எழுத்து என மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.

இவ்வாறாக பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து பெற்று வந்தாலும் கடந்த 2500 வருடங்களாக தமிழ் பல்வேறு எழுத்து முறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய செய்தியாகும்.

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com