ஈ!

அது ஓர் அழகான காளை மாடு. நன்கு கொழுத்த உடம்புடன் திமிலை உயர்த்திக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அந்தக் காளையின்
ஈ!


அது ஓர் அழகான காளை மாடு. நன்கு கொழுத்த உடம்புடன் திமிலை உயர்த்திக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அந்தக் காளையின் கழுத்தில் ஒரு மணி அணிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காளை மாட்டின் உரிமையாளர்தான் அதன் கழுத்தில் மணியை அணிவித்து இருந்தார். அது தன் கழுத்தை அசைக்கும் போதெல்லாம் மணி அடிக்கும். அது அதன் உரிமையாளரின் காதில் விழும். அதன் மூலம் அந்தக் காளை அங்கேதான் இருக்கிறது என்பதை அவர் உறுதி செய்து கொள்வார்.

 அன்று காளை மிகவும் குஷியாக இருந்தது. எனவே அடிக்கடி தன் கழுத்தை அசைத்தபடி இருந்தது. "கிணிங்... கிணிங்...' என்று மணியோசையும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்போது அங்கே ஒரு ஈ பறந்து வந்தது. அது வெகுநேரமாக பறந்து வந்ததால் காளை மாட்டின் மீது அமர்ந்து ஓய்வெடுக்கத் திட்டமிட்டது. காளை மாடு எழுப்பிய மணியோசையால் கவரப்பட்டது அந்த ஈ. மெல்ல இறங்கி வந்து காளை மாட்டின் மீது அமர்ந்தது! அவ்வளவுதான்!

காளை மாடு கழுத்தை அசைப்பதை நிறுத்திவிட்டது!  எனவே மணியோசையும் நின்று விட்டது! 

அதைக் கவனித்த ஈ, “"இந்தக் காளை மாட்டுக்கு உடம்புதான் கொழுத்துப் போய் இருக்கிறது!  ஆனால் சரியான பயந்தாங்கொள்ளி. நான் வந்து அமர்ந்ததும், பயந்துபோய் மணி அடிப்பதை நிறுத்திவிட்டது பாரேன்'” என எண்ணி இறுமாந்தது! 

கர்வத்தோடு  அந்த ஈ வெகுநேரம் அந்தக் காளை மீது அமர்ந்திருந்தது!  மணியோசை வரவே இல்லை!

"சரிதான், நமக்குப் பயந்துதான் இந்த மாடு மணி அடிப்பதை நிறுத்திவிட்டது' என உறுதி செய்து கொண்டது!

"ஓய்வு எடுத்தது போதும், கிளம்பலாம்' என நினைத்த ஈ, காளையிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என முடிவெடுத்து பறந்து காளையின் முகத்தின் முன் வந்து பறந்தபடி சொன்னது.

“""அட பயந்தாங்கொள்ளி காளையே!  நான் செல்கிறேன்... இனிமே  நீ தைரியமாக மணியை அடித்துக் கொள்ளலாம்''” என்றது.

அதற்கு அந்த கொழுத்த காளை அமைதியாகப் பதில் சொன்னது.

“""அன்புக்குரிய ஈயே... நீ எனது கழுத்து மணியில்தான் அமர்ந்து இருந்தாய். நான் கழுத்தை சிறிது அசைத்து இருந்தாலும், மணியின் சுவரில் மோதி நீ 
நசுங்கி செத்திருப்பாய்.

உனக்காகத்தான் நான் மணியை அடிக்காமல் இருந்தேன்!.... சரி, சென்று வா!''” என்றது.

அப்போதுதான் அந்தச் சின்னஞ்சிறிய ஈக்கு புத்தி வந்தது.

"அடடா.. நம் மீது கருணைகொண்ட காளையை நாம் தூசாகக் கருதிவிட்டோமே... என்னே மடத்தனம்!'  என எண்ணி வருந்தியது. காளையிடம் மன்னிப்பும் கேட்டது!

- வசீகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com