பொற்கொடி

ஆழி.. நீ அடைகாக்கிற முட்டை, பொறிஞ்சுடும் வேளை நெருங்கிருச்சுனு நினைக்கிறேன்
பொற்கொடி



காட்சி : 1 

இடம் : கோழிப் பண்ணை 
நேரம் : மாலை 5.30
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி

(ஆழி கண்களை மூடி அமர்ந்திருக்கிறது.)
மலர்மாரி: ஆழி.. நீ அடைகாக்கிற முட்டை, பொறிஞ்சுடும் வேளை நெருங்கிருச்சுனு நினைக்கிறேன்..
ஆழி: ஆமா.. நாளைக்குப் பொறிஞ்சிரும்னு தோனுது..  குழந்தைக்குப் பேர்கூட யோசிச்சு வெச்சிருக்கேன்..
மலர்மாரி:  என்ன பேரு..?
ஆழி: பொற்கொடி!
மலர்மாரி: பொ..ற்..கொ..டி.. நல்லாருக்கு,  ஆழி..  அருமையான பேர்..
(ஆழியின் முகம் மாறுகிறது. )
மலர்மாரி: ( புரியாமல்)  என்னாச்சு..  ஏன் சோகமாயிட்டே..?
ஆழி: எப்டியாவது அந்த மோசமான கழுகுங்க பொற்கொடியை நெருங்காத மாதிரி பாத்துக்கணும்..  எப்டியாவது..
(மலர்மாரி  அமைதியாகப் பார்க்கிறது. )


காட்சி : 2
இடம் : கோழிப் பண்ணை 
நேரம் : காலை 7.10
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி

(முட்டை பொறிந்து கோழிக்குஞ்சு 
வெளியே வருகிறது.)
மலர்மாரி: ஓ.. அற்புதம்..  அழகா இருக்கு..!
ஆழி: நம்ம முதலாளி அய்யா பார்த்தாருன்னா  ரொம்ப சந்தோஷப்படுவார்..
மலர்மாரி: இப்டி ஒரு சமர்த்துச் செல்லத்தைப் பார்த்தா யார்தான் சந்தோஷப்படாம இருப்பாங்க..
ஆழி: ( சோகமாக)  கழுகு..  அதை நெனைச்சாத்தான்..  கொஞ்சம்..
மலர்மாரி: ( இடைமறித்து)  வாயை மூடு..  இந்த நேரத்துல போய்... பல்பொடிய  எடுத்துக் கொஞ்சுவியா.. அத விட்டுட்டு..
ஆழி: அது பல்பொடி இல்லடி..  பொற்கொடி..
மலர்மாரி: ஏதோ ஒன்னு..!

காட்சி : 3
இடம் : கோழிப் பண்ணை 
நேரம் : வெவ்வேறு நேரங்கள் 
பாத்திரங்கள் : ஆழி ,பொற்கொடி ,மலர்மாரி

முதல் வாரம்: மலர்மாரி பொற்கொடிக்கு நடை பழக்குகிறது. 
இரண்டாம் வாரம்:  ஆழி பொற்கொடிக்கு உணவு தேடப் பழக்குகிறது.
மூன்றாம் வாரம்: பொற்கொடி மலர்மாரியைக் கொத்தத் துரத்துகிறது. ஆழி சிரிக்கிறது. --

காட்சி : 4
இடம் : கோழிப் பண்ணை 
நேரம் : மாலை 6.05
பாத்திரங்கள் : ஆழி ,பொற்கொடி ,மலர்மாரி, கழுகு

(பொற்கொடி சிமென்ட் தொட்டியின்
விளிம்பில் நிற்கிறது. )
பொற்கொடி: அம்மா..  நான் இங்கிருந்து குதிச்சு கொஞ்சதூரம் வரை பறக்கப் போறேன் ..
ஆழி:  வேண்டாம்..  சொன்னா கேளு..  நீ இன்னும் பறக்கத் தயாராகல..
பொற்கொடி: ம்மா.. மாரி அக்கா முட்டையிலிருந்து வந்த அடுத்த நாளே பறந்து வானத்துக்கே போனங்களாம்..  அதுமாதிரி நானும் பண்ணிப் பாக்கறேன்..
(ஆழி  மலர்மாரியைப் பார்க்கிறது. )

மலர்மாரி: ( தடுமாறிக்கொண்டே)  பொற்கொடி..  அப்பெல்லாம் உங்கம்மா பொறக்கவே இல்ல..  அவளுக்கு..  அதெல்லாம்..  தெரியாது..
(வானத்திலிருந்து அவர்கள் மீது நிழல் விழுகிறது. )
பொற்கொடி: ம்மா..  நான் பறக்கப் போறேன்..
(பொற்கொடி  கீழே  குதிக்கிறது. )
மலர்மாரி: (மேலே நிழல் வரும் திசையைப் பார்த்து)  அய்யோ..!
(பொற்கொடி  நிலத்தைத் தொடும்முன் கழுகு அதைக் கால்களால் கவர்ந்துகொண்டு செல்கிறது. )
ஆழி: பொற்கொடீ........!
(ஆழி வேதனையில் ஆர்ப்பரிக்கிறது. )

காட்சி : 5
இடம் : மழைக்காடு / மரம்
நேரம் : மாலை 6.35
பாத்திரங்கள் : கழுகு,  கழுகு குஞ்சு,  பொற்கொடி

(கழுகு பொற்கொடியைக் கூட்டுக்குள் வைக்கிறது. )
கழுகுக் குஞ்சு: யாரும்மா இது..?  
கழுகு: இது ஒரு கோழியின் குஞ்சு!........  பண்ணையிலிருந்து கொண்டுவர்றேன்..
கழுகுக்குஞ்சு: எதுக்கு..?
கழுகு: (அதிர்ந்து)  எதுக்கா..? உனக்கு..  உனக்குத்தான்!...  பசிக்கலியா..?
(கழுகுக் குஞ்சு பொற்கொடியைப் பார்க்கிறது. )
கழுகுக் குஞ்சு: இதப் பார்க்கவே பாவமா இல்லியா..?  ஏம்மா இங்க பிடிச்சிட்டு வந்தீங்க..?
கழுகு: ( தடுமாறி ) அது..  நம்மல மாதிரி கழுகுங்க..  அந்தப் பண்ணைக் கோழிகளை..  அதுதான் நானும் ஒரு
தடவை..
கழுகுக் குஞ்சு: ( பொற்கொடியைப் பார்த்தபடி ) வேணாம்மா..  இதக் கொண்டுபோய் அங்கேயே விட்ருங்க!.....
கழுகு: (அதிர்ந்து) மறுபடியும் அங்கேயா..?  இதைத் தூக்கிட்டு வந்ததால என் மேல பயங்கரக் கோபத்துல இருப்பாங்க..  வேணும்னா நம்ம காட்டுக்குள்ளியே எங்காவது விட்டுடலாம்.. 
(கழுகு குஞ்சு பொற்கொடியை 
அமைதியாகப் பார்க்கிறது. )
கழுகுக் குஞ்சு: அப்படினா ஒன்னு பண்ணலாம்.. 

காட்சி : 6
இடம் : மழைக்காடு 
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
பாத்திரங்கள் : கழுகு,  கழுகு குஞ்சு,  பொற்கொடி

முதல் வாரம்:  கழுகுக் குஞ்சும் பொற்கொடியும் இணைந்து இரை உண்கிறார்கள்.
இரண்டாம் வாரம்:  ஆழி கூண்டுக்குள் சோகமாக அமர்ந்திருக்கிறது.
மூன்றாம் வாரம்: கழுகு பொற்கொடியுடன் மகிழ்ச்சியாக  விளையாடுகிறது. 

காட்சி : 7
இடம் : மழைக்காடு / மரம்
நேரம் : மாலை 5.35
பாத்திரங்கள் : கழுகு,  கழுகு குஞ்சு,   பொற்கொடி 

கழுகுக்  குஞ்சு:  (சோகமாக)  வேற வழி இல்லியா,  ம்மா..?
கழுகு: (சோகமாக)  பொற்கொடி வளர்ந்துட்டா..  இனியும் நம்ம கூட்டுக்குள்ள இருக்க முடியாது..
(கழுகுக்  குஞ்சு அமைதியாக இருக்கிறது. )

பொற்கொடி: அப்போ.. என்னை இந்தக் காட்டுக்குள்ள இறக்கி விட்ருவீங்களா.. ?
கழுகு:  இல்ல,  கொடி.. அப்படி மட்டும் செய்யவே மாட்டேன்..  அது ரொம்ப ஆபத்தானது..
கழுகுக்  குஞ்சு: அப்டினா..?
கழுகு: அப்டினா,  மறுபடியும் கோழிப் பண்ணையிலியே கொண்டுபோய் சேர்த்துரணும்..  அதான் எல்லாருக்கும் நல்லது..
(கழுகுக்  குஞ்சு அதிர்ச்சியாகிறது. )
பொற்கொடி: அய்யோ..  கழுகம்மா..  நீங்க ஏற்கெனவே சொன்ன மாதிரி அங்க யாராவது உங்களப் பார்த்துட்டாங்கனா..? 
கழுகு: ம்ம்ம்.. கையில கெடச்ச எதையாவது தூக்கி எறிவாங்க..  அடிபடும்.. நான் பண்ண தப்புக்கு எனக்கு அது தேவைதான்.. 
கழுகுக்  குஞ்சு: (பதறி)   அய்யோ..  எல்லாம் என்னால்தான்...
கழுகு: இல்ல.. நீ எந்தத் தப்பும் செய்யல செல்லம்..  கவலைப்படாத..
(கழுகு பொற்கொடியைத்
தூக்கிக்கொண்டு பறக்கிறது. )
கழுகுக்  குஞ்சு: ( அழுதபடி)  உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா..

காட்சி : 8
இடம் : கோழிப் பண்ணை 
நேரம் : மாலை 6.45
பாத்திரங்கள் : ஆழி , மலர்மாரி, கழுகு, பொற்கொடி, முதலாளி

(ஆழி ஒரு மரத்தடியில் 
சோகமாக அமர்ந்திருக்கிறது. )
மலர்மாரி: ஆழி..  இன்னும் எவ்ளோ நாளைக்கு அதையே நெனைச்சிட்டிருப்பே..? கொஞ்சம்  மறக்க முயற்சி பண்ணு..
ஆழி: (அழுகிறது) என்னால..  என்னால முடியல,  மாரி..
(திடீரென இறக்கைகள் 
படபடக்கும் சத்தம் கேட்கிறது. )
மலர்மாரி:  ( பதறி )  என்னது..
(கழுகு பொற்கொடியைக் 
கீழே இறக்கிவிட்டு விரைவாகப் பறக்கிறது. )
ஆழி: ( உரக்க)  பொற்கொடி..
பொற்கொடி: ( உரக்க)  அம்மா..
(கழுகு கீழே பார்த்துக்கொண்டே பறக்கையில் 
சடாரென ஒரு வலைக்குள் மாட்டுகிறது. )
மலர்மாரி: ( உரக்க)  ஆழி..  அதே கழுகுதான்..  நம்ம முதலாளி வெச்சிருந்த பொறிக்குள்ள  மாட்டிருச்சு..  நான் போய் அவரைக் கூட்டிட்டுவரேன்..
(பொற்கொடி நடந்தவற்றைச் சொல்கிறது. ) 

பொற்கொடி: அம்மா,  எப்படியாவது கழுகம்மாவக் காப்பாத்துங்க.. அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது..
(ஆழி வலைக்குள் சோகமாக 
இருக்கும் கழுகைப் பார்க்கிறது. )
மலர்மாரி: வாங்க முதலாளி..  இங்கதான்..  அந்தக் கழுகை விட்ராதீங்க.. 
(முதாலாளி , பிடிபட்ட கழுகை நோக்கி நடக்கிறார். ) 

ஆழி: ( வழிமறித்து)  ஐயா..  அந்தக் கழுகைத் துன்புறுத்த வேண்டாம்..  அது நம்ம பொற்கொடியை நல்லபடியாத்தான் காப்பாத்தியிருக்கு..
மலர்மாரி: ( அதிர்ந்து)  ஆனா,  அது..  அந்தக் கழுகு தப்புப் பண்ணியிருக்கே.. 
ஆழி: ஆமா..  ஆனா,  அப்பவே அது திருந்தவும் செஞ்சிருக்கு..  அப்படிப்பட்ட கழுகை தண்டிக்கிறது நியாயமா..?
(முதலாளி கழுகை விடுவித்து பறக்க விடுகிறார். )

-  கோழிகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பறிக்கின்றன. --
(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com