சுரங்கம்!

அரண்மனை உப்பரிகை, மாந்தர் - மரகத நாட்டு மன்னர் விஜயதேவர், அரசி யாழ்தேவி, அமைச்சர் குணசீலன்
சுரங்கம்!

 அரங்கம்
 காட்சி - 1

 இடம் - அரண்மனை உப்பரிகை, மாந்தர் - மரகத நாட்டு மன்னர் விஜயதேவர், அரசி யாழ்தேவி, அமைச்சர் குணசீலன்
 விஜயதேவர் - (கண்ணில் நீர் தளும்ப) அமைச்சரே, அதோ பாருங்கள்!.... மக்கள் வண்டிகளிலும், கால் நடையாகவும் பயணம் செய்வதை!.... நாட்டைக் காலி செய்து போகிறார்கள். நம் நாட்டு நிலைமை இப்படி ஆகிவிட்டதே?....
 அமைச்சர் குணசீலன் - மன்னா,... நான்கு வருடங்களாக மழை இல்லை. வானம் பொய்த்து விட்டது. ஏரிகளிலும் குளங்களிலும் நீரின்றி வறண்டுவிட்டன.... நதிகள் காய்ந்து விட்டன.... குடி நீருக்கே மக்கள் வெகு
 தொலைவு நாக நாடு எல்லை வரை போக வேண்டியுள்ளது.... கால் நடைகள் தீவனம் நீர் இன்றி மாண்டு கிடக்கின்றன. இங்கு பிழைப்புக்கோ வழி இல்லை. பஞ்சம் பிழைக்க பக்கத்து நாக நாடு, பச்சை மலை, முல்லை நாடு போன்ற தேசங்களுக்குச் செல்கின்றனர்.
 மன்னர் - தேவி, எனக்கு இந்த சேடிப் பெண்கள் காவலர்கள் குடும்பத்தைப் பிரித்து இங்கே அவர்களைப் பணி செய்விக்க விருப்பமில்லை. நீ உன் தந்தை நாட்டுக்குச் சென்று சில காலம் தங்கி இரேன்... நிலைமை சரியானதும். நான் அழைத்துக் கொள்கிறேன்.
 அரசி - வேண்டாம் பிரபோ!..... கஷ்டமோ நஷ்டமோ நான் தங்களுடனேயே இருக்கிறேன்.
 அமைச்சர் - பக்கத்து நாக நாட்டுக்கு உதவி கோரியனுப்பிய செய்திக்குப் பதில் வந்துள்ளது மன்னா!
 மன்னர் - என்ன?..... தானியங்கள் ஆயிரம் மூட்டை கேட்டிருந்தேனே.
 அமைச்சர் - வெறும் நூறு மூட்டைகளை அனுப்பி இரண்டு வருடங்களாக உதவி செய்ய முடிந்தது..... இப்போது எங்கள் நாட்டு வெள்ளிச் சுரங்கத்தில் வெள்ளி இருப்பு குறைந்து வருகிறது. விளைச்சலும் இம்முறை சரியில்லை. எப்படியாவது சமாளித்துக் கொள்ளுங்கள்.... என எழுதியுள்ளார்.
 மன்னர் - அவரும் எத்தனை காலம் தான் நமக்கு உதவுவார். என் மாமனார் மத்தியதேசம் தொலைவில் இருப்பதால் உதவிகளை, ஒரு நாட்டின் முழுத் தேவைக்கும் அவரால் அனுப்ப இயலாது. சரி...வாருங்கள் அமைச்சரே காலார சற்று நடப்போம்.
 
 காட்சி - 2
 இடம் - மரகத நாட்டின் காய்ந்து விட்ட ஆறு பகுதி, மாந்தர் - மன்னர். அமைச்சர்
 
 (இருவரும் ஆற்றுமணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மன்னர் கையால் மணலை
 அளைந்து தன் அங்க வஸ்திரத்தில் மூட்டை
 போலக் கட்டி கொட்டுகிறார்.)
 மன்னர் - இந்த ஆற்றில் நீர் நிரம்ப ஓடி எத்தனை வருடங்கள் இருக்கும் ?
 அமைச்சர் - ஆறு வருடங்கள் இருக்கும்
 மன்னர் - கையால் தோண்டினால் எட்டியமட்டும் மணல் தான் உள்ளது . ஈரப் பசை இருக்கும் சுவடே இல்லை.
 அமைச்சர் - கோடை காலத்தில் ஊற்று நீரை மக்கள் குளிக்கவும் குடிக்கவும் பயன்படுத்திய காலம் இனி வருமா..
 (அமைச்சரும் மணலைக் கையால் அளைகிறார்.)
 மன்னர் - அரண்மனைக் கிணற்றிலும் நீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது! அண்டை நாடான நாக நாட்டு மன்னர் சிம்மேந்திரன் என் குருகுல தோழர். அவர் நாட்டில் ஓடும் நாக நதியில் வெள்ளம் வருடா வருடம் நாட்டைத் தாக்குகிறது! மக்கள் சிரமப் படுகிறார்கள். கடலுக்கு வீணே நீர் செல்கிறது. அவரிடம் கேட்டு, அதை நம் நாட்டுக்குள் திருப்பி விடலாம்! அவரும் தயார்!
 ஆனால், ஒரு பெரும் மலைத் தொடர் ஒரு காத தூரம் இடையில் வழி மறிக்கிறது. அதை வெட்டி கால்வாய் கொண்டுவர மிகுந்த பொருட்செலவாகும். அங்குள்ள பாறை உடைக்கும் சுரங்கத்தொழிலாளிகள் கூலியை நெல்லாக இல்லாமல் தங்கக் காசுகளாகக் கேட்கிறார்கள்.
 அமைச்சர் - எவ்வளவு ஆகும் மன்னா?
 மன்னர் - லட்சம் பொன்னாவது வேண்டும்!
 அமைச்சர் - நம் நாட்டில் இருக்கும் மொத்த தங்கம் அளவே தற்சமயம் சில ஆயிரம் பொன் தானே. மூன்று வருடங்களாக கஞ்சித் தொட்டி செலவே மூன்று லட்சம் பொன்னைத் தாண்டி விட்டதே.. தங்கம் என்ன நம் நாட்டு ஆற்று மணலிலா கொட்டிக் கிடக்கு?
 மன்னர் - சரி, கிளம்புவோமா?... இருட்டத் தொடங்கி விட்ட து. நம் குல தெய்வம் காளி நம்மைக் கைவிடமாட்டாள் ஏதேனும் வழி காட்டுவாள்.
 (இருவரும் கிளம்புகின்றனர். மன்னர் விளையாட்டாக துண்டில் கட்டிய மணல் முடிச்சைத் தோளில் போட்ட படி நடக்கிறார். அமைச்சர் மன்னரின் குறும்பைப் பார்த்து நகைக்கிறார்.)
 
 காட்சி - 3
 இடம் - அரண்மனை, மாந்தர் - ஆஸ்தான பொற்கொல்லர் பரமசிவம், அமைச்சர், மன்னர், அரசியார்.
 
 அரசி - பிரபோ, நமது ஆஸ்தான பொற்கொல்லர் பரமசிவம் வெகு நேரமாகக் காத்திருக்கார் தங்களைச் சந்திக்க.
 மன்னர் - அப்படியா.. வரச்சொல்.
 (பரமசிவம் வருகிறார்)
 
 அமைச்சர் - என்னப்பா பரமசிவம்!.... என்ன விஷயம்?
 பரமசிவம் - ஒரு வருடமாக தொழில் சரியில்லை. நகை செய்வார் யாருமில்லை. நான் நாக நாட்டில் மைத்துனன் வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். அவன் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறான் அடிக்கடி வந்து தாய் தந்தையரைக் கவனிப்பேன். எனக்கு விடை கொடுங்கள் வேந்தே. காலில் விழுகிறான்
 (மன்னர் தன் தோளில் இருக்க்கும் முடிச்சை கை
 நழுவிட்டு அவனைத் தூக்கி )
 
 மன்னர் - பரமசிவம் கலங்காதே.. கடவுள் துணை இருப்பார். நல்ல காலம் பிறக்கும் என என் உள்ளுணர்வு சொல்கிறது...
 (பரமசிவம் அருகில் மன்னர் நழுவ விட்ட மணல் கொட்டிக் கிடக்க பரமசிவம் தீவர்த்தி வெளிச்சத்தில் உற்று நோக்குகிறான். அந்த மணலில் பள பள என சில துகள்கள் தீவர்த்தி வெளிச்சத்தில் மினுக்குகின்றன. --பரமசிவம் அந்தத் துகள்களை வாரிக் குவித்து தன் மடியில் இருக்கும் உறை கல்லால் தேய்த்துப் பார்க்கிறான்-- )
 
 பரமசிவம் - வேந்தே இந்த துகள்கள் ஏது ?
 மன்னர் - ஆற்றில் மணலில் கையைக் குழி பறித்து சும்மா தோண்டி அள்ளி வந்தேன்.. என்னப்பா அதில் இருக்கு ?
 பரமசிவம் - மன்னா.. அத்தனையும் தூய கலப்பில்லா சொக்கத் தங்கத் துகள்கள் மணலோடு கலந்து உள்ளன. தங்கம் விளைகிறது நம் நாட்டில்!....
 அமைச்சர் - அரசே! நம் அருகே உள்ள நாக நாட்டில் வெள்ளி வெட்டி எடுக்கப் படுகிறது. வெள்ளிச் சுரங்கங்களில் பல்லாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். உலோக சாஸ்திரப் படி வெள்ளி, வெள்ளீயம் தங்கம் மூன்றும் கலந்தே விளையும். அதில் தங்கம் அதிகம் கலந்த கலவை விளையும் பகுதி நம் நாட்டில் இருக்கலாம்!
 மன்னர் - (கோவில் திசை நோக்கி) அம்மா காளி மாதா!.... இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எங்கள் நாடு விமோசனம் அடையும்!....
 பரமசிவம் - மன்னா சந்தேகமில்லை. நான் உடனே நாக நாட்டுக்குச் சென்று என் மைத்துனன் அவன் வெள்ளிச் சுரங்க ஆட்களுடன் வருகிறேன்.
 (மன்னரும் அரசியும் மெய் மறந்து கண்ணீர் வழிய செயல் மறந்து நிற்க...)
 
 அமைச்சர் -சரி பரம சிவம், உடனே செல். போகும் பாதையில் இடம் பெயரும் மக்களின் கூடாரங்களைக் கண்டால் நமக்கு விடிவு வந்து விடும் எனச் சொல்லிச் செல்.. உடனே நாடு திரும்பச் சொல்!
 காட்சி - 4
 இடம் ஆற்றுப் படுகை, மாந்தர் - நாக நாட்டு சுரங்கத் தொழிலாளர்கள், பரமசிவம், அவன் மைத்துனன் அஞ்சாப் புலி, மன்னர், அரசி, அமைச்சர்
 
 (சுரங்கம் ஆழத் தோண்டப் படுகிறது.....மணல் மணலாகத் தங்கத் தாதுவை மூட்டைகளில் அள்ளுகிறார்கள்....அருகில் கூடாரம் அமைத்து பரமசிவமும் அஞ்சாப் புலியும் உலைக் களத்தில் பெரும் சல்லடைகளால் சலித்து தங்கத் தாதுவைப் பிரித்து உருக்கி அச்சில் வார்க்கிறார்கள். முப்பது பாளங்கள் வார்த்ததும்...)
 
 மன்னர் - முதல் முப்பது பாளங்களை காளிகோயிலில் வைத்து பூஜை செய்வோம்.
 (செய்தி தீயாகப் பரவ புலம் பெயர்ந்த மக்கள் நாடு திரும்புகின்றனர்.....நாக நாடு, அருகில் இருக்கும் மஞ்சள்மலை நாடு பச்சைப்பாறை நாடுகளில் இருந்து மக்களுக்கு தானியம், கால்நடைகள் பெரும் பீப்பாய்களில் குடிநீர் இவற்றைத் தங்கம் தந்து மன்னர் வாங்கி வரச் சொல்லி தன் மரகத நாட்டு மக்களுக்கு விநியோகிக்கிறார். ---சுரங்கம் ஆழம் தோண்டத் தோண்ட தங்கப் படிமம் மிகவும் அதிகமாக பல காத தூரம் செல்கிறது--- )
 
 அமைச்சர் - மன்னா தங்கப் படிவின் வளைய இருப்பின் ஆரம்பம் இங்கிருந்து தான் செல்கிறது. சுரங்கத்தை விரிவு படுத்தலாம்
 மன்னர் - நன்றாய்ச் செய்யுங்கள். என் தோழர் மன்னர் சிம்மேந்திரன் நாக நதியின் ஓட்டத்தை திசை திருப்ப ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி அமர்த்தி உள்ளார். ஆறு மாத காலத்தில் நதி நம் ஆறுகளுடன் இணையும். வீணாய்க் கடலில் கலக்கும் நீர் நம்மைக் காக்கும். நாக நாடும் வெள்ள அபாயம் இன்றி வாழமுடியும்.
 (காலம் வேகமாகச் சுழல்கிறது. மலைப் பாறை அடைப்பு நீக்கப்பட்டு, சுரங்கத்துக்கு வெகு தொலைவில் நாக நதி மரகத நாட்டில் பிரவேசிக்கிறது வெள்ளம் கரை புரண்டு செல்கிறது!.....விவசாயிகள் பயிர்கள் நடவை ஆரம்பிக்கிறார்கள். சுபிட்சம் மீண்டும் ஆரம்பமாகிறது மரகத நாட்டில்!...)
 
 காட்சி - 5
 மாந்தர் - மன்னர், அரசி, அமைச்சர் பொற்கொல்லர்
 பரமசிவம்.
 மன்னர் - நிதி பொறுப்பு தனாதிகாரிஅமைச்சராக பரமசிவம் பொறுப்பேற்றவுடன் நம் தங்க ஏற்றுமதி நன்றாய் நடக்கிறது
 அமைச்சர் - மன்னா! நமது தங்கத்தின் தூய்மை மிகவும் துல்லியமாக மாசு மருவற்று சுத்தமாக மாற்றுக் குறையாமல் இருப்பதால் கிராக்கி அதிகமாக உள்ளது. ஒரு கப்பலில் மூன்று பெட்டிகள் நிறைய தங்கத்தை ரோமானிய வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள்.
 பரமசிவம் - பதிலுக்கு அரேபிய குதிரைகள், அந் நாட்டு அணிகலன்கள், பெரும் தேக்கு மரங்கள், ஆடைகள் மருந்துப் பொருட்கள் வந்து இறங்கியுள்ளன. நாக நாட்டு மன்னர் நம் மரகத நாட்டுத் துறைமுகம் மூலமே இறக்குமதி செய்கிறார். இதனால் நம் துறைமுகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 மன்னர் - தங்கப் பாளங்களை பத்திரமாக சேமிக்க ஒரு பாதாள பொக்கிஷ அறை கட்டும் பணி நடக்கிறதே அது எந்த அளவில் உள்ளது?
 அமைச்சர் - முடியும் தருவாயில் உள்ளது.. ஒரு நல்ல நாளில் அரண்மனை பொக்கிஷங்களை அங்கு மாற்றி விடலாம்.
 அரசி - பிரபோ! எனக்குக் கொஞ்சம் தங்கம் வேண்டும்....
 மன்னர் - எவ்வளவு வேண்டும்?
 அரசி - சேடிப் பெண்ணின் குழந்தைக்கு முடி இறக்கி காது குத்துகிறாள். ஒரு தோடு தொங்கட்டான் செய்து தரலாம் என இருக்கிறேன்.
 (மன்னர் யோசிக்க....)
 
 அமைச்சர் - வேந்தே, அரசிக்கு வருடத்துக்கு ஒரு தங்கப் பாளம் தருவதாய் ஒப்புக் கொண்டீர்கள்...... அந்தக் கணக்கில் கழித்துக் கொள்ளலாம். பஞ்ச காலத்தில் அவர்களின் நகைகளை அப்படியே கழற்றித் தந்தார்களே தானியம் வாங்க! அதனை நாம் திருப்பித் தருவோம் என்ற கணக்கில்.....
 அரசி - அப்படியே செய்யுங்கள்!..... இனாமாக வேண்டாம்....
 மன்னர் - தேவி!.... கிடைப்பது அத்தனையும் இந்த மொத்த மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் உரிமையானது!... இதில் ஒவ்வொரு குண்டுமணி தங்கத்துக்கும் நான் கணக்கு சொல்லியாக வேண்டும்..... சரி, அமைச்சர் சொல்வது போல் நீ முன்பு அளித்த தங்கத்துக்கு வட்டியாக ஒரு தோடு தொங்கட்டான் செய்ய எத்தனை தங்கம் வேண்டுமோ அதை நிதி அமைச்சர் பரமசிவம் தருவார்.
 அரசி - (பொய்க் கோபத்தோடு) முகத்தைத் திருப்பி தோளில் இடித்த பாவத்தில் உள்ளே செல்ல அமைச்சர்,தனாதிகாரி பரமசிவம், மன்னர் ஆகியோர் முகத்தில் புன்னகை தவழ்கிறது
 (திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com