ஜேம்ஸ் பாண்டு! (18/01/2020)

 மாந்தர் - புலன் விசாரணை காவல் உயர் அதிகாரி பரமசிவம், இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, கான்ஸ்டபிள்கள் 501 பண்டரிநாதன், 303 விட்டல்,
ஜேம்ஸ் பாண்டு! (18/01/2020)

அரங்கம்
 காட்சி :1

 இடம் - காவல் நிலையம்,
 மாந்தர் - புலன் விசாரணை காவல் உயர் அதிகாரி பரமசிவம், இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, கான்ஸ்டபிள்கள் 501 பண்டரிநாதன், 303 விட்டல், மற்றும் கான்ஸ்டபிள் 707 பாண்டுரெங்கன்,
 
 இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி : ம்.. இந்த சுவரில் ஓட்டை போட்டு திருடற கும்பல் அட்டகாசம் வர வர தாங்கலே.. போன வாரம் நகைக் கடை, இந்த வாரம் நகை அடகுக் கடையில் கொள்ளை. என் கையில் சிக்கினால் சின்னாபின்னம் தான் அவனுங்க....
 கான்ஸ்டபிள் விட்டல் : (மனதுக்குள்) "சிக்கினாத் தானே"
 டி . எஸ் . பி . பரமசிவம் : "இரண்டு கொள்ளைகளையும் நடத்தியது ஒரே கோஷ்டிதான்னு தெரியுது. கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்ததில் மூணு பேர் ஈடுபட்டிருக்காங்கன்னு நல்லாவே புரியுது."
 ஞானசிகாமணி : முக அடையாளம் தெரியாம குழந்தைகள் போடும் பூனை முக அட்டை முக மூடியை மாட்டி இருக்கானுங்களே அந்த கேடிப் பசங்க!...."
 பண்டரிநாதன் : "என்னய்யா பாண்டு, நீ தான் ஜேம்ஸ்பாண்டு ஆச்சே! என்ன யோசனை பண்றே ஏதாவது புலப்படுதா..?"
 பாண்டுரெங்கன் : ஐயா! எனக்கு சில தகவல்கள் அந்த சிசிடிவி பதிவுகளில் கண்ணுக்குப் படுது....!"
 டி.எஸ்.பி. பரமசிவம் - "மனதில் பட்டதைச் சொல்லுங்க மிஸ்டர் பாண்டுரெங்கன்!"
 பாண்டுரெங்கன் : ஐயா, எனக்காக ஒருதரம் அந்தக் கொள்ளையர்கள் நடமாட்டப் பதிவை கம்ப்யூட்டரில் கொஞ்சம் குவித்து ஜூம் பண்ண முடியுமா....?"
 ஞானசிகாமணி : என் கண்ணுக்குத் தெரியாததையா நீங்க பார்க்கப் போறீங்க?.... நூறு தரம் திருப்பித் திருப்பி போட்டுப் பார்த்தேன்."
 பரமசிவம் :"ம் சிலபேருக்கு சில விஷயங்கள் கண்ணில் படும்.. மிஸ்டர் ஞானம் கொஞ்சம் ஸும் பண்ணி அவர் சொல்ற இடங்களைக் கணினியில் குவித்துக் காட்டுங்க"
 (ஞானசிகாமணி பாண்டு சொல்லும் சில பகுதிகளைக் குவித்து பெரிது படுத்திக் காட்டி நிறுத்தி நிறுத்தி மெல்ல மெல்ல காட்சிகளை நகர்த்துகிறார்.)
 பாண்டு :"சார் ஒரு நிமிஷம் இந்த இடத்தை மறுபடி பின்னோக்கி ஓடவிடுங்க. (ஒரு பேப்பரில் சில குறிப்புகளை எழுதுகிறார் பாண்டு.) போதும் சார். சில விஷயங்களைச் சொல்றேன். ஐயா அதிகப் பிரசங்கின்னு சொல்லக் கூடாது."
 பரமசிவம் : தைரியமா சொல்லுங்க மிஸ்டர் பாண்டு!....
 குற்றவாளிகளைப் பிடிப்பது தான் இலக்கு. டிஜிபி விரட்டறார் என்ன பண்றீங்கன்னு....
 பாண்டு : சார், இந்த பதிவுகளில் ஒரு இடத்தில் கொள்ளைக்காரர்கள் அணிந்துள்ள பூனை அட்டை முகமூடியில் அடியில் சில எழுத்துக்கள் தெரிகின்றன. குவித்து பெரிதாக்கியதில் ""மொறு மொறு அப்பளம்! பூனை மார்க் அப்பளம்!'"ன்னு தெரியுது பொடிசாக....ஒருத்தன் குனியும் போது அவன் கழுத்தில் மாட்டி இருக்கிற மைனர் செயினில் ஒரு டாலர் தொங்கி ஆடுது. அதில் சின்னா என எழுத்துக்கள் தங்க எழுத்துகளில் டாலராக செதுக்கி இருக்கு. இவன் சின்னதறிப்பேட்டை பழைய இரும்பு வியாபாரி சின்னையன் ஆக இருக்கலாம்..."
 ஞானம் : என்னது?... என் கண்ணுக்குத் தெரியலையே!.... (மறுபடி குவித்துப் பார்க்க).... ஆமாம்! டாலர் பக்கவாட்டில் ஆடுது. அந்த எழுத்துக்களை எப்படி பாண்டு படிச்சார்?
 பரமசிவம் : விட்டல், ஒரு ஃபைல் கொண்டு வாங்க. பாண்டு சொல்ற விஷயங்களை குறிச்சுக்கறேன்."
 பாண்டு :"மூன்று பேரில் ஒருத்தனுக்கு முழங்கையில் சின்ன படை மாதிரி இருக்கு.. அதை அடிக்கடி அவன் தடவி சொறிஞ்சுக்கறான் பல முறை. பதிவுகளில் அவன் கை மேனரிசம். அரிப்பெடுத்து சொறிவது தெளிவா இருக்கு! புது மோட்டார் சைக்கிள்களை திருடும் மூக்கன் எனும் மூக்கையனாக இருக்கலாம். "
 பரமசிவம் : பலே! வெரிகுட்!.... மூணாவது ஆளுக்கு எதுவும் அடையாளக் க்ளூ இருக்கா?"
 பாண்டு : இருக்கு சார்!..... மூணாவது முகமூடிக்காரன் ஒரு காது மடல் கொஞ்சம் மடங்கி வித்தியாசமா இருக்கு!.... அந்த மடலை அடிக்கடி நீவி விடுவது அவன் பாடி லேங்குவேஜ் எனும் சைகை மொழி!......இவன் செல்போன்களை மட்டும் திருடும் நாகு எனும் நாகராஜ் மாதிரி இருக்கு."
 பரமசிவம் : இது போதுமே கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டரை உடனே வரச் சொல்லுங்க இந்த தகவலை வச்சு பிடிக்க முயற்சி செய்யட்டும்!"
 பாண்டு : சார், ஒரு சிறு விண்ணப்பம்..... இந்த வழக்கை நானும் ஒரு பக்கம் ஆராய்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யலாமா?"
 டி எஸ் பி பரமசிவம் : நமக்கு காரியம் சீக்கிரம் முடியணும். பேஷாக உங்க நோக்கப்படி துப்பு துலக்குங்க.. எதுவும் உதவி வேணும் என்றால் தயங்காமல் கேளுங்க...."
 பாண்டு : சார், எனக்குத் துணையாக பூக்காரி மாறு வேடத்தில், எஸ் ஐ திலகா அம்மா வந்தா உதவியா இருக்கும். உங்க அனுமதி வேணும்."
 பரமசிவம் : ஓ. கே!... அழைச்சுப் போங்க.டிஜிபியிடம் ஒரு வார்த்தை சொல்லிடறேன்..திலகா திறமையானவங்க.... சீக்கிரம் பதவி உயர்வு வரப் போவுது. இந்த கேஸில் உங்க பங்களிப்பு நிச்சயம் இருக்கும்!
 
 காட்சி:2
 இடம் கடைவீதி, மாந்தர் - பூக்காரி வேடத்தில்
 சப் இன்ஸ்பெக்டர் திலகா, பாண்டு, வாலிபன்.
 (பழைய இரும்பு வியாபாரி வேடத்தில் ஒரு சைக்கிள் ஒரு பெட்டி அதில் ஓட்டை உடைசல் பிளாஸ்டிக் இரும்பு சாமான்கள் சகிதமாக பாண்டு)
 பாண்டு : (கூவுகிறார்) ஓட்டை உடைசல் இரும்பு பிளாஸ்டிக் வாங்கறது....
 (பூக்காரி ஸ்டூலில் அமர்ந்து முன்னால் ஒரு வாழை இலை வைத்த மேஜையில் பூச் சரப் பந்துகள்) - "அம்மா வாங்கிப் போங்க…. முழம் முப்பது ரூபா! முல்லை மல்லிகை கனகாம்பரம்..!"
 ஒரு பெண் : சரி முப்பது ரூபாக்கு பூ கொடு.
 (அப்போது ஒரு வாலிபன் புது டூவீலரை பூக்காரி அருகில் நிறுத்தி அம்மா வண்டிக்கு பூ போடணும் தாங்க.. ஐம்பது ரூபாய்க்கு மல்லிகைப் பூ போட்டு விட்டு)
 வாலிபன் : எலுமிச்சம் பழம் வாங்கி வரேன்... வண்டி இங்கே இருக்கட்டும்!
 பூக்காரி : பூட்டிவிட்டு போங்க..நான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்
 (அப்போது புது வண்டியை நோட்டமிட்டு அருகே வரும் மூக்கன் கள்ளச் சாவியை போட்டு வண்டியைத் திறந்து ஸ்டார்ட் செய்து அமருகிறான் --எதிரில் பூக்காரி வழி மறிக்கிறார்--)
 மூக்கன் : ஏய் யாரு நீ.. உனக்கு என்னா வேணும்..எங்கே கூப்பிடறே?
 பூக்காரி : நீ தான் வேணும்,....நட என் கூட!...
 ( கூடையில் இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்ட மறைந்திருக்கும் காவலர்கள் அவனைப் பிடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர்.)
 
 காட்சி : 3
 இடம் : கடை வீதி செல் ஃபோன் கடை, மாந்தர் : கான்ஸ்டபிள் விட்டல், பாண்டு, இன்ஸ்பெக்டர் திலகா, திருடன் நாகராஜ்
 
 திலகா : (கூவுகிறார்) கீரை அம்மா கீரை.. முளைக்கீரை பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பசலை கீரை...கீரை!...
 (செல் போன் கடையில் இருந்து புத்தம் புதிய
 பதினைந்தாயிரம் பெறுமானம் உள்ள ஃபோனுடன்
 வருகிறார் விவசாயி விட்டல். போனை தள்ளு வண்டி மேல் வைத்து விட்டு, பேரம் பேசுகிறார்)
 விட்டல் : இந்தாம்மா.. கீரைக் கட்டு எப்படி?"
 திலகா : பத்து ரூபாக்கு இரண்டு"
 விட்டல் : விலை அதிகமா இருக்கே, சரி, கட்டு ஒரு கட்டு அஞ்சு ரூபாக்கு தருவியா ?"
 திலகா : நானும் அதைத் தான் சொன்னேன்
 (அப்போது தள்ளு வண்டி அருகில் நெருங்கும் நாகராஜ் கர்ச்சீஃபில் செல்போனை மறைத்து எடுத்து விட்டு
 நழுவுகிறான்.
 சைக்கிளை நிறுத்தி விட்டு பாண்டு தன் பெட்டியில் இருந்து விலங்கை அவன் கையில் மாட்டி)
 பாண்டுரெங்கன் : வாடா நாகு மாட்டினியா,..... கொண்டா செல் போனை!....
 (அவன் பையில் கைவிட்டு எடுத்து விட்டலிடம் தர கான்ஸ்டபிள் விட்டல், நாகராஜ் முதுகில் ரெண்டு போட்டு இழுத்துச் செல்கிறார்.)
 
 காட்சி : 4
 இடம் - சின்னா எனும் சின்னையன் பழைய இரும்பு கடை, மாந்தர் - பழைய இரும்பு சில்லறை வியாபாரி வேடத்தில் பாண்டு, கடையில் சின்னா, ஞானசிகாமணி, கான்ஸ்டபிள்கள்.
 
 பாண்டு : ஐயா பழைய இரும்பு தெருக்களில் வாங்கி வந்திருக்கேன் எடுக்கலாமா?
 சின்னா : ஆள் புதுசா இருக்கே.. எப்போதிருந்து வியாபாரம் பண்றே ?
 பாண்டு : ஒரு வாரமா தாங்க. வெங்காயம் வித்துக்கிட்டு இருந்தேன். விலை ஏறிடுச்சா.. வாங்கி வித்தால் லாபம் கிடைக்கலே.
 சின்னா : கொண்டு வந்து மேடைத் தராசில் வை
 (பாண்டு சிறு கம்பிகள் உடைந்த தகர டப்பாக்கள் இரும்பு வாளி சாமான்களை வைக்கிறார்.)
 சின்னா : இரும்பு கிலோ இருபது.. தகரம் கிலோ பத்து சம்மதமா"
 பாண்டு : சரிங்க.. கொஞ்சம் பித்தளை வெண்கலம் வச்சிருக்கேன் எடுக்கலாமா.".
 சின்னா : பாத்திரமா..?"
 பாண்டு : எங்க ஊர் குளம் காய்ஞ்சு போனப்போ வெளியே நீட்டிக்கிட்டிருந்ததை இழுத்தேன். பார்த்தால் சாமி சிலை....சின்னதா நாலு இருக்கு!...."
 சின்னா : (சுற்றும் முற்றும் பார்த்து ) "இந்தா இந்த சாக்கில் மூடி எடுத்து வா"
 (பாண்டு எடுத்து வர - சின்னா ஆராய்கிறான்..)
 சின்னா : யோவ்! இதெல்லாம் கோயிலில் திருடு போனதுய்யா!..... உன் கிட்டே எப்படி வந்துச்சி?..... சரி, வெளியே சொல்லாதே!... சிலை ஒண்ணு ஆயிரம் வீதம் எடுத்துக்கறேன். பிடி, மொத்தம் நாலாயிரம்.. மத்த பழைய இரும்புக்கு முன்னூறு தனியா வச்சுக்கோ!
 பாண்டு : (பணம் எண்ணியபடி) ஐயா, அந்த கல்லா பெட்டி ஓரமா அடியில் முகமூடி இருக்கே தர்றீங்களா குழந்தைங்க விளையாட!
 சின்னா : ஏய்!... ஏன் அதை இழுத்துப் பார்க்கறே....உன் வேலையைப் பாரு!"
 (பாண்டு அந்த முக மூடிகளில் மொறு மொறு அப்பளம் பூனை மார்க் அப்பளம் என பொடி எழுத்தில் இருப்பதைக் கவனிக்கிறார். அதே முகமூடிகள் தான்....பாண்டு விசில் அடிக்க....ஞானசிகாமணியும் மற்ற கான்ஸ்டபிள்களும் ஓடிவந்து சின்னாவைக் கைது செய்கிறார்கள்)
 சின்னா : ஐயா சிலைகளை இந்த ஆள் தான் கொண்டுவந்தார்.. இவரைப் பிடிங்க."
 ஞானசிகாமணி : பிடிக்கிறோம். பாண்டு அந்தப் பழங்கால சிலைகளை எடுத்துக்கிட்டு வாங்க ஜீப்புக்குப் போகலாம்".
 
 காட்சி : 5
 இடம் - காவல் நிலையம், மாந்தர் - உயரதிகாரி பரமசிவம் ஞானசிகாமணி, விட்டல், பண்டரிநாதன்
 
 (மூவர் முகத்திலும் பாண்டு முகமூடியை அணிவித்து படம் எடுக்கிறார்---சிசிடிவி பதிவு முகங்களிடம் ஒத்துப் போக---
 பரமசிவம் விசாரணையை மேற்கொள்கிறார் பிரம்புடன். நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டதை சின்னா, நாகு, மூக்கன் மூவரும் ஒப்புக் கொள்கிறார்கள்)
 மறு நாள் செய்தித் தாள்கள் டிவி சேனல்களில் செய்தி வெளியாகிறது
 "பிரபல நகைக் கடை கொள்ளையில் மூவர் கைது. கொள்ளை போன பத்து கிலோ நகைகள் மீட்பு.. கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து பழைய கேடிகளை அடையாளம் கண்ட ஏட்டு பாண்டுரெங்கனின் திறமை!
 (திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com