பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: அக்காவின் பிறந்த நாள்

ரோஜா அபார்ட்மெண்ட்ஸ் பகுதி முழுவதும் காலையிலிருந்தே பரபரப்பு. ""பார்வதி பையன் முகேஷைக் காணோமாம்... யாராவது பாத்தீங்களா?'' என்று ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: அக்காவின் பிறந்த நாள்

ரோஜா அபார்ட்மெண்ட்ஸ் பகுதி முழுவதும் காலையிலிருந்தே பரபரப்பு. ""பார்வதி பையன் முகேஷைக் காணோமாம்... யாராவது பாத்தீங்களா?'' என்று ஒவ்வொரு வீட்டிலும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். 

""உமா... முகேஷ் இங்கே வந்தானா?'' , ""மாலாம்மா... முகேஷைப் பாத்தீங்களா?'', ""எல்லா எடத்திலேயும் தேடியாச்சு... குழந்தை எங்கே போனான்னு தெரியலையே...?'' காலை ஆறரை மணியில் இருந்து தாய் பார்வதி முகேஷைத் தேடிக்கொண்டிருக்கிறாள். இதோ மணி எட்டு அடிக்கப்போகிறது.  சுமார் இரண்டு மணி நேரமாக குழந்தையைக் காணவில்லை என்றால் தாயின் மனம் எப்படித் துடிக்கும்? 

முகேஷுக்கு மூன்று வயதுதான் ஆகிறது. துறு துறுவென்று இருப்பான். அவன் அக்கா ஷீபாவுக்கு ஆறு வயது. எப்போதும் அக்காவுடன்தான் விளையாடுவான். இதுவரை வீட்டை விட்டு எங்கேயும் அவன் தனியாகப் போனதில்லை. 

ரோஜா அபார்ட்மெண்ட்ஸ் மூன்று மாடிகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு. ஒவ்வொரு தளத்திலும் எட்டு வீடுகள் வீதம் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. எல்லா வீட்டிலும் தேடியாகிவிட்டது. 

அந்தத் தெருவில் உள்ள எல்லா குடியிருப்புகளும் மல்லிகை, முல்லை, சாமந்தி, சம்பங்கி, சூரியகாந்தி என்று பூக்களின் பெயராலேயே அமைந்திருந்தன. எல்லா குடியிருப்புகளின் காவலாளிகளிடமும் சென்று ""குழந்தை முகேஷ் வந்தானா?'' என்று மோகன் விசாரித்தார். 

காலையிலிருந்து யாருமே முகேஷை பார்க்கவில்லை என்று கூறியதால் மோகன் முகத்தில் சோகம் படிந்தது. பக்கத்துத் தெருவுக்கு சென்று தேடிப் பார்க்கலாம் என்று எண்ணியபடி மோகன் நடந்தார். 

அப்போது... ""அப்பா...'' என்று முகேஷின் குரல் சத்தமாக ஒலித்தது. மோகன் திரும்பிப் பார்த்தார். குல்மோஹர் அபார்ட்மெண்டிலிருந்து கையில் ஒரு பெரிய பூவை காம்புடன் பறித்து எடுத்துக் கொண்டு முகேஷ் சிரித்தபடி ஓடிவந்தான். 

அவன் முகத்தைக் கண்டதும் மோகன் மனதில் இதுவரை காணாத புது வித ஆனந்தம் அலைமோதியது. ஓடிச் சென்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டார்.

""கண்ணா... நாங்கெல்லாம் காலைலேருந்து உன்னைத் தேடிக்கிட்டிருக்கோம்... ஏண்டா கண்ணா... சொல்லாம கொள்ளாம நீ எங்கே போயிருந்தே? இவ்வளவு பெரிய பூவை எப்படி பறிச்சே? எங்கே கிடைச்சது?''

""அப்பா...இன்னைக்கு ஜூலை 4. அக்காவுக்கு பிறந்தநாள். அக்காவுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க அம்மா இனிப்பு செஞ்சிருக்காங்க. நீங்க புது டிரஸ், பழம் எல்லாம் வாங்கி வந்திருக்கீங்க. அக்காவுக்கு ரொம்பப் பிடிச்சது பூக்கள்தான். ஆனா, லாக்டவுன் ஆனதால பூக்கார அம்மாவும் வரல. அப்போதான் எனக்கு பக்கத்து வீட்டு மாடித் தோட்டம் ஞாபகம் வந்துச்சு. அதான் சர்ப்பிரைஸா இருக்கட்டுமேன்னு  குல்மோஹர் அபார்ட்மெண்ட் மாடித்தோட்டத்துக்கு போயி, ரொம்ப நேரம் தேடி இந்த பூவைக் கொண்டு வந்தேன். அழகா இருக்கா...?''-என்று சிரித்தான். 

அதற்குள் அம்மா பார்வதியும், அக்கா ஷீபாவும், அக்கம் பக்கம் இருப்பவர்களும் அங்கே வந்து விட்டார்கள். முகேஷைக் கண்டதும் அவர்கள் முகத்தில் ஆனந்தம் பொங்கியது.

""ஜூலை 4ஆம் தேதியை மறக்கவே முடியாது... முகேஷால ஷீபாவோட பிறந்தநாளும் இந்த ஏரியா முழுக்க பாப்புலர் ஆயிடுச்சு...'' என்று மோகன் சொல்ல அந்த குடியிருப்பில் இருந்த எல்லோரும் தன் அக்கா மீது முகேஷ் வைத்திருந்த அன்பைப் பாராட்டினார்கள்! 

எம்.சிவதாரகை யாழினி, 
4 - ஆம் வகுப்பு, ராஜபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com