அரங்கம்: பசி!

அய்! எவ்வளவு பெரிய மண்டபம். இந்த மண்டபத்துக்கு நான் வந்ததே இல்லப்பா!
அரங்கம்: பசி!

காட்சி 1
இடம்: திருமண மண்டபம்
நேரம்: மாலை ஏழுமணி
பாத்திரங்கள்: திவாகர், ஷியாம்,  திவாகர் 
(ஷியாமின் அப்பா),  ரேணுகா (ஷியாமின்அம்மா)
(டூவீலரில் இருந்து இறங்குகிறான் ஷியாம்)


ஷியாம்: அய்! எவ்வளவு பெரிய மண்டபம். இந்த மண்டபத்துக்கு நான் வந்ததே இல்லப்பா!
திவாகர்: உன்னோட ஸ்கூல் பக்கத்துலதானே இருக்கு. நீ இங்க வந்ததே இல்லையா?
ஷியாம்: ஸ்கூல் பஸ்சுல இந்த வழியா போகும்போது பார்த்திருக்கேன். ஆனா உள்ளே வந்ததில்லை. வெளியே பார்த்ததைவிட உள்ளே ரொம்ப பெருசா இருக்குப்பா!
(மண்டபத்துக்குள் நிறைய பேர் அமர்ந்திருக்கின்றனர்)
ஷியாம்: (வியப்புடன்) இந்த ஹாலுக்குள்ள எத்தனை பேரு இருப்பாங்கப்பா?
திவாகர்: ஆயிரம் பேராவது இருப்பாங்கள்ல ரேணு?
ரேணு: இருப்பாங்க. வாய்ப்பிருக்கு! 
ஷியாம்: (அண்ணாந்து பார்த்து) அய்! ஹெலிகாப்டரு!
திவாகர்: அது ஹெலிகாப்டர் இல்ல. ட்ரோன்!
ஷியாம்: அப்படின்னா?
திவாகர்: அதுல கேமரா இருக்கு. நம்ம எல்லோரையும் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கு!
ஷியாம்: அப்படியா? 
(ஸ்டைலாக போஸ் கொடுத்து நிற்கிறான் ஷியாம். ட்ரோன் சிறிது நேரம் அவனுக்கு மேலே நின்று 
படமெடுக்கிறது. உற்சாகத்துடன் டான்ஸ் ஆடுகிறான்)
திவாகர்: டான்ஸ் ஆடுனது போதும். முதல்ல நமக்கு உட்கார இடம் கிடைக்குதான்னு பார்ப்போம்
(மூவரும் நாற்காலிகளில் அமர்கிறார்கள்)
ஷியாம்: ரொம்ப ஜில்லுன்னு இருக்குப்பா!
(புரோகிதர் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்)
ஷியாம்: கல்யாணமாப்பா?
திவாகர்: இல்ல,.... நிச்சயதார்த்தம்! (ரேணுவிடம் திரும்பி) நிச்சயதார்த்தத்தை ரொம்ப கிராண்டா செஞ்சிருக்காங்கள்ல!...
ரேணு: (பெருமூச்சுடன்) இருக்கப்பட்ட குடும்பம். பணத்தைத் தண்ணியா செலவழிக்கிறாங்க. இந்தக் காசுல ரெண்டு கல்யாணத்தை முடிச்சுடலாம்.
(பொண்ணு அலங்காரத்துடன் கைகூப்புகிறாள்)
ரேணு: பொண்ணு நல்லாத்தான் இருக்கா. சின்னவயசுல பார்த்தது!
(நிச்சயதார்த்தம் நிறைவுபெறுகிறது. அனைவரும் கீழ் தளத்தைநோக்கி உணவருந்த விரைகின்றனர்)

காட்சி 2
இடம்: திருமண மண்டபத்தின் கீழ்தளம்
பாத்திரங்கள்: திவாகர், ஷியாம், ரேணு, 
உணவு பரிமாறுபவர்
(மூவரும் வரிசையாகப் பந்தியில் அமர்ந்திருக்கின்றனர்)


ஷியாம்: (வியப்புடன்) என்னப்பா,.... இவ்வளவு பெரிய இலை போட்டுருக்காங்க. அதுல நிறையப் பலகாரம் வச்சிருக்காங்க!
திவாகர்: உன்னோட இலையில என்னென்ன இருக்கு சொல்லு பார்க்கலாம்?
ஷியாம்: எனக்குத் தெரியாதாக்கும்! சொல்லவா?.... அல்வா, இனிப்புக் கவுனிஅரிசி, உக்ரா, உளுந்துவடை, இனிப்புப் பணியாரம், காரப் பணியாரம்,, இடியாப்பம், பூரி, சென்னா மசாலா, உருளைக்கிழங்கு மசாலா, இட்லி, ஊத்தாப்பம், விஜிடெபிள் பிரியாணி, மூணுவகைச் சட்னி, சாம்பார்!  (கண்களை அகலவிரித்து) பார்த்ததுக்கே பாதிவயிறு நிறைஞ்சிடுச்சுப்பா!
திவாகர்: (ரேணுவிடம் திரும்பி) பெரியவங்களுக்குப் பரிமாறுன மாதிரியே சின்னப்பிள்ளைங்களுக்கும் பரிமாறியிருக்காங்க. 
ரேணு: பெரியவங்களாலேயே எல்லாத்தையும் சாப்பிடமுடியாது. எல்லோரும் மிச்சம் வச்சு வேஸ்ட் 
பண்ணப்போறாங்க
திவாகர்: கேட்கக் கேட்கப் பரிமாறினாலாவது மிச்சமாகிற உணவை முதியோர் இல்லத்துக்கோ, குழந்தைகள் இல்லத்துக்கோ கொடுத்துவிடலாம்.
ரேணு: இந்தக் கூட்டத்துல அதெல்லாம் யாரு
கவனிக்கப் போறா? எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவே பத்துமணியாகிடும்! 
ஷியாம்: அம்மா!.... கொஞ்சமா சிந்தி சாப்பிட்டதுக்கே பாட்டி கோவிச்சுக்கிட்டாங்கள்லம்மா!... சிந்தாமல் சாப்பிடணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஒவ்வொரு பருக்கையிலும் விவசாயியோட உழைப்பிருக்குன்னாங்க. ஆனா இங்க பார்த்தீங்களா,.... நிறையபேரு சாப்பிடமுடியாம அப்படியே மூடிவச்சுட்டுப் போயிட்டாங்க. இதெல்லாம் குப்பைக்குத்தானே போகும். எத்தனை விவசாயியோட உழைப்பு 
வீணாகிட்டு இருக்கு!
திவாகர்: என் அறிவுச் செல்லமே! (கொஞ்சுகிறார்)
ஷியாம்: அம்மாவும் நானும் நிறையப் பலகாரங்களை மிச்சம் வச்சிட்டோம்பா!... இந்தப் பலகாரங்களை வீட்டுக்குக் கொண்டுபோனா பாட்டி சாப்பிடு
வாங்கள்ல!....
திவாகர்: நீ சொல்றது சரிதான். எப்படிக் கொண்டு போறது? பிளாஸ்டிக் கவர்கூட இப்ப கிடைக்காது!
ஷியாம்: அதோ!.... அந்த இலையில வச்சுக் கொண்டு போகலாம்பா! 
(சற்றுத் தள்ளி ஸ்டீல் மேஜையில் அடுக்கப்பட்டிருந்த இலைகளை காண்பிக்கிறான். எழுந்து
அதனருகில் செல்கிறான்)
ஷியாம்: (உணவு பரிமாறும் பெண்ணிடம்) ஆண்ட்டி! எனக்கு ஒரு இலை கொடுக்கிறீங்களா?
உணவு பரிமாறும் பெண்: எதுக்குப்பா?
ஷியாம்: எனக்கும் அம்மாவுக்கும் வச்ச பலகாரங்களை எங்களால சாப்பிடமுடியல. அதான் அதை எடுத்துட்டுப் போய் என்னோட பாட்டிக்குக் கொடுக்கப்
போறேன்
(உணவு பரிமாறும் பெண் ஷியாமின் கன்னத்தை
 உருவி முத்தம் கொடுக்கிறார். இலையை
 எடுத்துக் கொடுக்கிறார்)
ரேணுகா: எல்லாத்தையும் எடுத்துக் கொண்டுபோக முடியாது. இங்கபாரு! இட்லியை சாம்பார் நனைச்சிடுச்சு. ஊத்தாப்பத்தை சட்னி நனைச்சிடுச்சு. எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டுக் கொண்டுபோனா கொசகொசன்னு போயிடும்!
திவாகர்: கொண்டுபோக முடிஞ்சதை கொண்டு போகலாம்!
(உணவை இலையில் மடித்து எடுத்துக்கொண்டனர். ரேணுவின் கைப்பையில் இருந்த துணிப்பையில் 
வைத்துக்கொண்டனர். உறவினர்களிடம் 
சிறிதுநேரம் பேசிவிட்டு தன் பழை யமாடல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்)

காட்சி 3
இடம்: சாலை
நேரம்: இரவு ஒன்பதுமணி
பாத்திரங்கள்: திவாகர், ரேணு, ஷியாம், தாத்தா
(மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கின்றனர்)

திவாகர்: ரொம்ப லேட்டாயிடுச்சு! நீதான் உன்னோட அக்காவைப் பார்த்ததும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தே.
ரேணு: ரொம்பநாள் கழிச்சுப் பார்க்கிறோம். பேசாமல் வந்தா நல்லாவா இருக்கும். அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டேன். நைட் ட்ரெயினுக்குப் புக் செஞ்சுட்டாங்களாம்.
(இருசக்கர வாகனம் திடீரென நின்றுவிடுகிறது)
திவாகர்: (பதற்றத்துடன்) என்ன ஆச்சுன்னு தெரியலையே! பெட்ரோல் ரிசர்வுக்கு வந்துருக்கும்னு நினைக்கிறேன்.
ஷியாம்: ரிசர்வ்னா என்னப்பா?
திவாகர்: பெட்ரோல் தீரப்போகுதுன்னு அர்த்தம். இந்தமாதிரி ஆயிடுச்சுன்னா (வண்டியில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் திருகைக் காண்பித்து) இதை இப்படி மேல்நோக்கித் திருகி விடணும். பெட்ரோல் தீரப்போகுதுன்னு எச்சரிக்கை செய்றதுக்காக இந்த ஏற்பாடு செஞ்சிருக்காங்க. 
ஷியாம்: அப்போ இப்ப பெட்ரோல் போடணுமாப்பா?
திவாகர்: வேண்டியதில்லை. இப்ப நாம வீட்டுக்குப் போயிடலாம். நாளைக்குக் காலையில பெட்ரோல் போட்டுக்கலாம்!
(சாலையோரத்தில் இருந்த மரத்தடியில் ஒரு முதியவர் படுத்திருக்கிறார். இவர்களைப் பார்த்ததும் கம்பை ஊன்றியபடி நடந்து அருகில் வருகிறார்)
ஷியாம்: பாவம்பா இந்தத் தாத்தா!... சட்டையெல்லாம் கிழிஞ்சு அழுக்கா இருக்கு. ரொம்ப கஷ்டப்படறாரு போல இருக்குப்பா. இவருக்குக் காசு கொடுங்கப்பா!
ரேணு: ஆமாங்க. ரொம்ப முடியாதவர் போலயிருக்கு. அவரால நடக்கக்கூட முடியல!
(திவாகர் சட்டைப்பையிலிருந்து பத்துரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்)
ரேணு: அங்க பாருங்க. அவருக்குப் பணம் வேண்டாமாம். சாப்பிட ஏதாவது கொடுங்கன்னு சைகையில கேட்கிறார். அவரால பேச முடியல போலயிருக்கு. பசியால துவண்டு போயிருக்காரு
ஷியாம்: (எதையோ கண்டுபிடித்தவன் போல்) அப்பா! பாட்டிக்கு கொடுக்கறதுக்கு பார்சல் எடுத்துட்டு வந்த பலகாரத்தை தாத்தாவுக்கு கொடுக்கலாமாப்பா?
ரேணு: நான் நினைச்சேன். நீயே சொல்லிட்ட!.... ஆனா பாட்டிக்கு?
ஷியாம்: பாட்டிக்கு இன்னைக்கு இல்லாட்டி இன்னொரு நாளைக்கு கொடுத்துக்கலாம்பா. பாட்டி இந்நேரம் சாப்பிட்டுப் படுத்துருப்பாங்க. ஆனா இந்தத் தாத்தாவுக்குப் பசிக்குதுல்ல!.... இவருக்குத்தான் இப்ப பலகாரம் தேவை. அதனால இவருக்கே கொடுத்துடலாம்பா
(தன்னுடைய கைப்பையிலிருந்த பொட்டலத்தை எடுத்து தாத்தாவுக்குக் கொடுத்தார் ரேணு)
ரேணு: அவர் முகத்தைப் பாருங்களேன். எவ்வளவு சந்தோசமா வாங்கிட்டுப் போறாரு. அங்க பாருங்க!... உடனே மரத்தடியில உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டாரு. (திவாகரைப் பார்க்கிறாள்) ஏங்க உங்க கண்கள் கலங்கியிருக்கு?
திவாகர்: ஒண்ணுமில்ல (கண்களைத் துடைத்துக்கொள்கிறார். குனிந்து ஷியாமுக்கு முத்தமிடுகிறார்)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com