மரங்களின் வரங்கள்!: பூச்சிகளின் எதிரி மதுக்காரை மரம்

நான் தான் மதுக்காரை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ராண்டியா டமேடோரம் என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்திச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா.
மரங்களின் வரங்கள்!: பூச்சிகளின் எதிரி மதுக்காரை மரம்

குழந்தைகளே நலமா?

நான் தான் மதுக்காரை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ராண்டியா டமேடோரம் என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்திச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. என்னை நீங்க வெப்ப மண்டலக் காடுகள் மற்றும் மித வெப்ப மண்டலக் காடுகளில் காணலாம்.

என்னுடைய பூக்கள், மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலிருக்கும். உங்கள் சுற்றுச்சுழலை காக்கும் திறன் எங்கிட்ட நிறையவே இருக்கு. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை வடிகட்டி, காற்றை தூய்மைப்படுத்துவேன். காற்று மாசைத் தடுப்பதில் வல்லவன் நான்.

நானும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டவன். ஆயுர்வேத மருத்துவர்கள் என்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எனது மருத்துவ பண்புகளை ஐந்து வகையாக பிரித்து வைத்து அதற்கு ஏற்றவாறு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

குழந்தைகளே, என்னிடம் இனிப்பு, கசப்பு, தரம், ஜீரணம், ரத்த சுத்திகரிப்பு, வீரியம், உஷ்ணம், கொழுப்பை குறைத்தல், வாந்தி வராமல் தடுத்தல் போன்ற அரிய பெரிய குணங்கள் இருக்கு. என்னிடமிருந்து ஆயுர் வேத மருத்துவர்கள் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களை குணமாக்க அரக்வாததி கஷாயமும், பல் சம்மந்தமான நோய்களைப் போக்க அரிமேதாதி தைலமும், சளி, இருமல், ஆஸ்த்துமா ஆகியவை குணப்படுத்த பலா தேல் எனப்படும் மருந்தும் தயாரிக்கிறாங்க.

என்னுடைய இலைகள் விளை நிலங்களுக்கு நல்ல உரமாவதுடன், கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகும். என்னுடைய பூக்களை நாடி தேனீக்கள் வருவாங்க. ஏன்னா எங்கிட்ட நிறைய தேன் இருக்கும். உலக நாடுகளில் தேன் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்காமே. முதல் இடத்திலிருப்பது சீனா.

அது மட்டுமா, என் பூக்களிலிருந்து நறுமணமுள்ள தைலம் தயாரிக்கலாம். என் காயை சமைத்து உண்டால் நல்ல சுவையாக இருப்பதுடன் நல்ல ஜீரண சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும். என் கனியை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய விதையிலிருந்து சோப்பு தயாரிக்கிறாங்க. என்னுடைய விதைக்குள் ஒரு பருப்பு இருக்கும், அந்தப் பருப்பு பாதாம் போன்ற சுவையுடையது. காகிதம் தயாரிப்புக்கும், கடைசல் வேலைக்கு நான் ஏற்றவன். ஏழை, எளிய மக்கள் என் இலைகளையும், கிளைகளையும் அடுப்பெரிக்கவும் பயன்படுத்தறாங்க.

என்னுடைய வேரை நீரில் அலசி, அந்த நீரை செடிகளின் மீது தெளித்தால் பூச்சிகள் அந்தச் செடிகள் பக்கமே வராது. அதாவது, என்னுடைய வேர் மிகச் சிறந்த பூச்சிக் கொல்லியாகும்.

குழந்தைகளே, மழையைக் கொண்டு வர மரங்கள் தேவை. மரங்களிலிருந்து கிடைக்கும் பிராண வாயு நமக்குத் தேவை. மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுப்பதுடன், அந்த வேர்கள் மழை பெய்தவுடன் தனக்குத் தேவையான தண்ணீரை ஏழு மடங்கு ஈர்த்துத் தேக்கி வைத்துக் கொள்கின்றன. அதனால் குழந்தைகளே, மண்ணில் ஈரப்பதமும், நீர்வளமும் காக்கப்படுகின்றன. இன்றைய மர வளம், நாளைய வன வளம். மிக்க நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்.

( (வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com