தயக்க்ம் தவிர்!

ஸ்கூல்ல கணக்கு பீரியட்லே பாடத்துல சந்தேகம் வந்ததும்மா.... ஆனா நான் அதை டீச்சர் கிட்டே கேட்கலே..... தயக்கமும் கூச்சமுமாக இருந்தது'' என்றாள் ஜெயஸ்ரீ.
தயக்க்ம் தவிர்!


ஸ்கூல்ல கணக்கு பீரியட்லே பாடத்துல சந்தேகம் வந்ததும்மா.... ஆனா நான் அதை டீச்சர் கிட்டே கேட்கலே..... தயக்கமும் கூச்சமுமாக இருந்தது'' என்றாள் ஜெயஸ்ரீ.

""அதனாலே யாருக்கு நஷ்டம்?'' என்று கேட்டாள் ஜெயஸ்ரீயின் அம்மா.

""எனக்குத்தான்!.... இப்போ அந்தக் கணக்குப் பாடத்திலே வீட்டுப் பாடம் குடுத்திருக்காங்க..... என்னாலே செய்ய முடியலே.... ப்ளீஸ்!..... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கம்மா""

""தேவையில்லாத தயக்கமும், கூச்சமும் சங்கடத்திலே விட்டுடும்!....அதுக்கு நான் ஒரு கதை சொல்றேன்..... கேட்கறியா?'' என்றாள் ஜெயஸ்ரீயின் தாய்.
""சொல்லும்மா!''

""ஜபிதா என்று ஒரு பறவைக்கு ஜின்னு என்று ஒரு குஞ்சு இருந்தது. ஜின்னுவுக்கு எதுக்கு எடுத்தாலும் தயக்கம். அது பறக்கறதுக்குச் சொல்லிக்கொடுத்தது ஜபிதா. ஆனா ஜின்னுவாலே உடனே பறக்க முடியவேயில்லே......, ஒரு நாள் ஒரு மலை உச்சிக்கு ஜின்னுவை அழைச்சிக்கிட்டுப் போய் ஜபிதா, தள்ளிவிட்டது. பயந்து போன ஜின்னு இறக்கையை அசைத்துப் பறக்க முயற்சித்தது. ஜின்னுவுக்கு ஆச்சரியமா இருந்தது! ஜின்னுவால பறக்க முடிஞ்சுது! சந்தோஷமா அம்மாவோட கூடவே பறக்க ஆரம்பிச்சது. இருந்தாலும் ஜின்னுவுக்கு தயக்கத்தை விடமுடியலே. எப்பவும் அம்மாகூடத்தான் பறந்தது. தனியா பறக்கறதுக்கு அதுக்குத் தயக்கமா இருந்தது.

ஒரு நாள் ஜபிதா ஜின்னுவை அழைத்துக் கொண்டு பறந்தது. ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது.

ஜபிதா ஏரியிடம், ""எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு'' என்றது.

""அது என்னுள் கரைந்து போய்விட்டது. அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்'' என்றது ஏரி.

ஜபிதா, அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்தது. பின் கொஞ்ச நேரம் மறைந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ""என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்'' என்றது.

""அடாடா! அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோமே! அதற்கு பதில் இந்த தரமான கயிறு தருகிறோம்'' என்று கொடுத்தார்கள்.

ஜபிதாவும், ஜின்னுவும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ""கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது'' என்று புலம்பினார்.

""நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?'' என்று ஜபிதா கேட்டது.

""என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல்லை ஒரு பையில் தருகிறேன். அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது'' என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல் பையைச் சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை.

ராஜாவிடம் ஜபிதா கேட்டது, ""என் அரிய வகை விதை நெல் எங்கே?''

ராஜா திடுக்கிட்டு, ""அந்த அரிய வகை விதை நெல் யாருடையது எனத் தெரியாது. நான் அதைப் பயிரிடச் சொல்லி விட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்'' என்றார்.

ராஜாவின் அரியணையில் ஐந்து நிமிடம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. ராஜாவும் சிரித்துக்கொண்டே ஐந்து நிமிடம் அதை ஆட்சி செய்ய வைத்தார்.

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ""எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்'' என்று ஒரு கட்டளை பிறப்பித்தது. ராஜா அசந்து போனார்! புன்னகையுடன் அதற்குச் சம்மதித்தார்!

ஜபிதா ராஜாவிடம், ""நான் சும்மாத்தான் கேட்டேன் முயற்சியின்றிக் கிடைக்கும் உணவில் எங்களுக்கு விருப்பமில்லை. '' என்றது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவையும் கேட்ட அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டது. ஜின்னு அதிலிருந்து தன் செயல்களில் தயக்கமின்றி முயற்சியுடன் உற்சாகமாக ஈடுபட்டது. முயற்சியின்றிக் கிடைக்கும் எதற்கும் தன் அம்மா ஆசைப்படவில்லை என்பதை நினைத்துப் பெருமிதமும் அடைந்தது!

கதையைக் கேட்ட ஜெயஸ்ரீ, ""ஓ.கே. ம்மா!..... நானும் இனிமே தயக்கமில்லாமல் சந்தேகங்களைக் கேட்கிறேம்மா.... இப்போ இந்தக் கணக்கை மட்டும் எனக்குச் சொல்லிக்குடும்மா!'' என்றாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com