மரங்களின் வரங்கள்: அழகு மரம் காட்டலரி மரம்

நான் தான் காட்டலரி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஹோமோனாயா ரிப்பேரியா. நான் ஈப்போர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்: அழகு மரம் காட்டலரி மரம்

குழந்தைகளே நலமா?

நான் தான் காட்டலரி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஹோமோனாயா ரிப்பேரியா. நான் ஈப்போர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வில்லோ லீப்டு, வாட்டர் குரோட்டன் என்ற வேறு பெயர்களுமுண்டு. நான் ஒரு அழகு மரமாவேன். என்னை நீங்கள், நமது மாநிலத்தில், கோயம்புத்தூர், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காணலாம்.

என் இலை கணுக்களில் அழகாகக் காட்சியளிக்கும் பூக்கள் ஸ்பைக்ஸ் எனும் வகையைச் சேர்ந்தது. அவைகள் பளிச்சின்னு சிவப்பு நிறத்திலிருக்கும்.

என் இலைகள் நுனி கூர்மையுடன், மேற்புறம் பளிச்சாக இருக்கும். நான் நீர்நிலைகளில், குறிப்பாக ஆறுகளின் அருகாமையில் வளருவேன். மண்ணரிப்பைத் தடுக்க பெரிதும் உதவுவேன். அதாவது குழந்தைகளே, என்னை நீங்க ஒரு முறை நட்டுவிட்டால், நான் புதர் போல மண்டி வளருவேன்.

என் விதைகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம். என் கிளைகளை வெட்டி நட்டாலும் நான் வளருவேன். ஆழமான அதேசமயத்தில் பரந்துப்பட்ட வேர்களை நான் உருவாக்கிக் கொள்வேன். என் வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் வேர் கஷாயம், மலச்சிக்கல், சீறுநீர் கழிப்பதில் சிக்கல், மூலநோய் ஆகியவற்றைகுணப்படுத்தும்.

அதுமட்டுமல்ல குழந்தைகளே, சிறுநீர்ப் பைகளில் ஏற்படும் கற்களையும் இந்த வேர் கஷயாம் அறவே நீக்கிடும். என் மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து மலேரியாக் காய்ச்சலையும், சொறி, சிறங்குகளையும் குணப்படுத்தும்.
என் எல்லா பாகங்களிலும் டேனின் சத்து அதிகமாக இருப்பதால், சாயத் தொழிலில் என்னை பெரிதும் பயன்படுத்தறாங்க. என் பட்டைகளிலிருந்து உறுதி மிக்க கயிறுகளைத் தயாரிக்கிறாங்க. என் விதையிலிருந்து கொழுப்பு எண்ணெய் தயாரிக்கலாம்.

இதைக் கூந்தல் தைலமாகவும் பயன்படுத்தலாம். நான் ஏழை, எளிய மக்களுக்கு அடுப்பெரிக்கவும் பெரிதும் உதவுகிறேன்.

குழந்தைகளே, காடுகள் இயற்கை நமக்கு அளித்த கொடை. காடுகளும், மரங்களும் உங்களுக்கு எண்ணற்ற பயன்களை அளிப்பதோடு, பிரதிபலன் பாராமல் பல உதவிகளையும் செய்து வருகின்றன.

கரியமில வாயுவை கிரகித்து நாம் உயிர்வாழ பிராண வாயுவை அளிக்கின்றன. மரங்களால் தான் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது, காற்றில் மாசு குறைகிறது.

சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது உங்களின் கடமை.

வீடு உயர சிறு சேமிப்பு, நாடு உயர மரம் வளர்ப்பு. வனத்தை வளர்த்து, வளத்தைப் பெருக்குங்கள். என் நட்சத்திரம் உத்திரம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com