3 தேங்காய்கள்

 உத்தம தேவன் அவசர புத்தியுடைவன். படபடப்பு மிக்கவன். தனக்கு மூக்கு சற்று சிறியதாய் இருப்பதாக அவனுக்கு நினைப்பு! உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
3 தேங்காய்கள்

முத்துக் கதை!
 உத்தம தேவன் அவசர புத்தியுடைவன். படபடப்பு மிக்கவன். தனக்கு மூக்கு சற்று சிறியதாய் இருப்பதாக அவனுக்கு நினைப்பு! உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. மேலும் தேவையில்லாத சோதனைகளைச் செய்து பார்ப்பவன். எதையும் அனுபவித்துப் பார்த்தே உணரவேண்டும் என்று நினைப்பவன். அனுபவம் நிறைந்த பெரியோர் சொல்லும் அறிவுரைகளையும் கேட்கமாட்டான். முன் யோசனை இல்லாதவன்.
 உத்தமதேவன் வசித்த ஊரில் இறைமதி என்பவர் ஆலயத்தில் சொற்பொழிவு ஆற்றினார். அதைக் கேட்ட உத்தம தேவனுக்கு கடவுளைக் காணும் ஆவல் ஏற்பட்டது! உடனே கடவுளை நோக்கித் தவம் புரிய ஆரம்பித்து விட்டான்! நெடுநாட்கள் தவமியற்றியபின் கடவுள் அவன்முன் தோன்றி,
 "உத்தம தேவா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!''
 முன்யோசனை இல்லாத உத்தம தேவன் என்ன வரம் கேட்பதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தான். சிறிது நேரம் ஆயிற்று.
 இறைவன் புன்னகைத்துக்கொண்டே, "சரி உத்தமதேவா, உனக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை.... உனக்கு என்ன தருவதென்று நானே முடிவு செய்கிறேன்....'' என்று கூறிய கடவுள் மூன்று தேங்காய்களை வரவழைத்தார். அதை உத்தம தேவனிடம் தந்தார்.
 அதற்குள் அவசரப்பட்ட உத்தமதேவன், "இறைவா, என்ன இது?.... இத்தனை நாள் செய்த தவத்திற்கு இதுதான் பலனா?'' என்று கேட்டான்.
 "அவசரப்படாதே உத்தமதேவா, நீ மனதில் என்ன நினைத்து ஒரு தேங்காயை உடைக்கிறாயோ அது உடனே நிறைவேறும்! இந்த மூன்று தேங்காய்களும் நீ கேட்கும் மூன்று வரங்களைத் தரும்!....'' என்று கூறி மறைந்தார் கடவுள்.
 உத்தம தேவன்தான் அவசரக்குடுக்கையாயிற்றே!.... உடனே தேங்காயை உடைத்துச் சோதனை செய்ய எண்ணினான். யாரிடமும் அந்தத் தேங்காய்களின் மகிமையைச் சொல்லி ஆலோசனை கூடக் கேட்கவில்லை.
 ஒரு தேங்காயை எடுத்தான். தன்னுடைய மூக்கு சற்று சிறியதாக இருப்பதாக நினைத்து அது நீளமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்! தேங்காயைப் படார் என்று உடைத்துவிட்டான்!
 உடைத்ததுதான் தாமதம்! உடனை அவனுடைய மூக்கு சுமார் ஆறு அடி நீளத்திற்கு மிக நீளமாக ஆகிவிட்டது! உத்தமதேவனுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது! தன் அவசர புத்தியை நினைத்து நொந்துபோனான். "இந்த மாதிரி மூக்கை வைத்துக் கொண்டு வெளியில் எப்படிப் போவது? கற்பனை செய்து பார்த்தால் மிக விநோதமாக இருக்கிறதே! எல்லோருடைய நகைப்புக்கு இடமாகும்படி ஆகிவிட்டதே!.....தான் எந்த வீட்டிற்குச் சென்றாலும் என்மூக்குதான் முதலில் நுழையும் போலிருக்கிறதே!.....சட்டென்று திரும்ப முடியாது!..... குனியமுடியாது!.... அண்ணாந்து பார்த்தால் கூரை இடிக்கும்!....ச்ச்சே!.... இப்படி ஆகிவிட்டதே!'' என்றெல்லாம் பலவாறாக நினைத்தான். அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
 சட்டென்று இன்னொரு தேங்காயை எடுத்தான். அவன்தான் அவசர புத்தியுடைவனாயிற்றே!.... மீண்டும் யோசிக்காமல் தன் மூக்கு சிறியதாக ஆகவேண்டும் என்று நினைத்து, மற்றொரு தேங்காயை உடைத்தான்!
 இரண்டாவது தேங்காய் உடைந்தவுடன், அவனுக்கு மிகமிகச் சிறிய மூக்காகிவிட்டது! சொல்லப்போனால் முகத்தில் மூக்குக்கு பதில் இரண்டு சின்ன ஓட்டைகள் மட்டுமே இருந்தன.
 மறுபடியும் அவனுக்கு சங்கடமாகிவிட்டது! "அடச்சே!..... இதென்ன இப்படி விபரீதமாகிவிட்டது! இப்போ என்னை மூக்கில்லாத மனிதன்னு எல்லோரும் கிண்டல் செய்வார்களே என்ன செய்வது''....என்று எண்ணி ரொம்ப வருத்தப்பட்டான். தனக்கு முன்போல மூக்கு இருந்தாலே போதும் என்று உத்தமதேவனுக்கு ஆகிவிட்டது!
 இன்னொரு தேங்காயை எடுத்தான். தனக்கு பழையபடியே மூக்கு இருந்தால் போதும் என்று நினைத்தான். தேங்காயைப் படார் என்று உடைத்தான்! அவனுக்கு பழையபடியே மூக்கு ஆகிவிட்டது!
 இறைவன் தந்த தேங்காய்களினால் தனக்கு எந்தப் பயனுமின்றி இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தான்.
 அன்றிலிருந்து அவன் மிகவும் நிதானமான மனிதனாகிவிட்டான். மற்றவரை மதித்துச் செயல்படுகிறான். நிம்மதியாகவும் இருக்கிறான்.
 பூங்குழலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com