கனிவால் வந்த பயன்!

விமல் நாற்காலியை அலமாரிக்கு அருகில் இழுத்து வைத்துக்கொண்டான். அதன் மீது ஏறி அலமாரியின் மேல் தட்டில் இருந்த
கனிவால் வந்த பயன்!

குறள் நெறிக் கதை!
 விமல் நாற்காலியை அலமாரிக்கு அருகில் இழுத்து வைத்துக்கொண்டான். அதன் மீது ஏறி அலமாரியின் மேல் தட்டில் இருந்த தனது பேட்டரி காரை எடுக்க முயன்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது அண்ணன் ஆனந்த்,
 " விமல்! நாற்காலி மேல ஏறாதே! கீழே விழுந்து விடுவாய்! ஏய்! உன் பொம்மையை கீழே போட்டு உடைக்க போகிறாய்!'' என்று கத்தினான்.
 அவன் கூறி முடிப்பதற்குள் நாற்காலி தடுமாறி கீழே விழுந்தான் விமல். கையில் இருந்த பொம்மை கார் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து விட்டது.
 ஓடி வந்த ஆனந்த் கீழே விழுந்த விமலை தூக்கி விடாமல்
 "எனக்கு அப்பவே தெரியும்! நீ இப்படி பண்ணுவேன்னு! ஒரு வேலைக்கும் நீ லாயக்கில்லாதவன்!'' என்று கூறியபடியே ஓங்கி அடித்தான். விமல் அழத்தொடங்கினான்.
 விமலும் ஆனந்தும் சகோதரர்கள். ஆனந்த் பன்னிரண்டாம் வகுப்பிலும், விமல் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர். அன்று அவனது பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். துணைக்கு தாத்தாவும் பாட்டியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.
 ஆனந்த் அடிப்பதை பார்த்த தாத்தா அவனை தடுத்தார்.
 "அடிக்காதே ஆனந்த்! அவன் என்ன பண்ணுவான்? பாவம் சின்னப் பையன்!'' என்றார்.
 ""பின்ன என்ன தாத்தா? இவன் ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாதவன்! அன்னைக்கு அப்படித்தான் கிச்சன்ல இருந்த பீங்கான் தட்டை எடுக்காதே! கீழே விழுந்துவிடும் என்று சொன்னேன்! நான் சொன்னதை கேட்காமல் எடுத்தான் அப்படியே கீழே போட்டு உடைத்தான்!''
 "அதுக்காக அடிக்கிறதா?.... பாவம்!''
 " அது மட்டுமில்லே தாத்தா!....சைக்கிள் ஓட்டாதே என்று சொன்னேன்! கேட்காம ஏறி காலில் அடிபட்டு கெட்டது தான் மிச்சம்!'' என்றான் ஆவேசத்துடன்.
 "சரி ஆனந்த்! நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு! ஆனா அவன் கிட்ட கொஞ்சம் கனிவோடு நடந்துகலாமே!... கீழே விழுந்து விடுவாய் " என்று சொல்லலாம " ஜாக்கிரதையா இரு " அப்படின்னு சொல்லலாம்! " சைக்கிளை ஓட்டாதே " என்று சொல்லாம " கொஞ்சம் பத்திரமா ஓட்டு!'' அப்படீன்னு சொல்லலாமே!'
 "தாத்தா!... நீங்க எல்லாம் இப்படி செல்லம் கொடுத்து தான் அவன் ஓவரா அடம்பிடிக்கிறான்! " செய்யாதே!' என்று சொல்கிற எல்லாத்தையும் வீம்பாக செய்கிறான்!'" என்றான் சலிப்புடன்.
 "ஆனந்த் , உன் தம்பி மேல் உனக்கு இருக்கிற அக்கறையை பார்த்து மிக்க மகிழ்ச்சி. ஆனால் நேர்மறையாக ஒரு விஷயத்தை சொல்லும் பொழுதும், அணுகும் போதும் அது நல்ல பலனைக் கொடுக்கும்!.....நான் தாமஸ் ஆல்வா எடிசனோட வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள்!'' என்றார்.
 பாட்டி விமலை அணைத்து அழுகையை நிப்பாட்டி கொண்டிருந்தார். அதுவரை விசும்பிக் கொண்டிருந்த விமல் தன் அழுகையை நிறுத்திவிட்டு தாத்தா கூற போவதை கவனிக்கத் தொடங்கினான்.
 ""தாமஸ் ஆல்வா எடிசனா யார் தாத்தா அது?'' என்று கேட்டான் விமல்.
 "அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி. இன்றைக்கு நாம் பயன்படுத்துகிற மின்சார பல்பு போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்தவர் அவர்தான்!''
 "அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது! நீ சாப்பிடவும், தூங்கவும், பொருள்களை உடைக்கவும் தான் லாயக்கு!'' என்றான் ஆனந்த் சிடுசிடுப்பு டன்.
 "அப்படி திட்டாதே ஆனந்த்! அவனும் கேள்வி கேட்கட்டும்! எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கட்டும்!'' என்றபடியே கதையை கூறலானார்.
 "எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு
 சமயம். பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் ஒரு கவரைக் கொடுத்தார் எடிசன். ...."அம்மா!.... என் ஆசிரியர் இந்த கவரை என்னிடம் கொடுத்து இதை நீ உன் அம்மாவிடம் கொடு! உன் அம்மா மட்டுமே இதை படிக்க வேண்டும்! என்று சொன்னார். அதில் என்ன எழுதி இருக்கிறது என்று சொல்கிறீர்களா?' என்று கேட்டார்.... அதைப் பிரித்துப் படித்த அவருடைய அம்மாவின் கண்களில் கண்ணீர்!''
 "அவங்க ஏன் தாத்தா அழுதாங்க?'' என்றான் விமல் ஆர்வம் தாங்காமல்.
 ""சொல்றேன் இரு!.... அதை பிரித்து தன் மகனுக்கு கேட்கும்படி படித்தார்..... "உங்கள் மகன் ஒரு பிறவி மேதை. இந்தப் பள்ளியில் அவனது அறிவுப்பசிக்கு தீனி போடும் வகையில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆகவே நீங்களே அவனுக்கு கற்றுக் கொடுங்கள்!'.... என்று அதில் எழுதியிருந்தது' ......
 "தன் மகனை பிறர் பாராட்டினால் ஒரு தாய்க்கு சந்தோசம் தானே வரும்? ஆனந்தத்தால் அவங்க கண்ணீர்விட்டு இருப்பாங்க! நீயும்தான் இருக்கியே? முட்டாள் மாதிரி!'' என்று விமலை மறுபடியும் சீண்டத் தொடங்கினான் ஆனந்த்.
 "ஆனந்த் மறுபடியும் அவனை சீண்டாதே!'' என்று கூறிய தாத்தா மேலும் தொடர்ந்தார்.
 "எடிசனோட தாயார் தானே ஒரு ஆசிரியராக இருந்து தன் மகனுக்கு எல்லா விஷயத்தையும் கற்பித்தார். தன் உயிர் பிரியும் வரை அவர் தன் மகனுக்கு தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருந்தார்!''
 "அப்புறம் என்னாச்சு தாத்தா?'' என்றான் விமல்.
 "தன்னுடைய தாயாரின் மறைவுக்கு பிறகு எடிசன் ஒரு மிகப்பெரிய அறிஞர் ஆகி பல புதிய கருவிகளை கண்டுபிடித்தார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆனார்! ஒருநாள் அவர் தனது தாயாருடைய பெட்டியில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அந்த ஆசிரியர் கொடுத்த கடிதமும் பத்திரமாக இருந்தது. பல வருடங்கள் ஆன படியால் அது மிகவும் நைந்து போய் இருந்தது. ஆனாலும் அதில் இருந்த எழுத்துக்கள் மறையாமல் இருந்தன. அதைப் பிரித்து படித்து பார்த்த எடிசனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!''
 "அதில் என்ன எழுதியிருந்தது தாத்தா?'' என்றான் ஆனந்த் ஆர்வம் தாங்காமல்.
 "அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா?......... " உங்கள் மகன் மூளை வளர்ச்சி குன்றியவர். அதனால் அறிவு வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறான். அவன் இந்தப் பள்ளியில் மேலும் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது! ஆகவே அவனை பள்ளியில் இருந்து நீக்குகிறோம்!' என்று எழுதியிருந்தது'
 "அடப்பாவி! எடிசனுக்கே இந்த கதியா? அப்படின்னா நம்ம விமலை பார்த்து இருந்தால் அந்த ஆசிரியர் என்ன சொல்லி இருப்பார்?'' என்றான் ஆனந்த் நக்கலாக.
 "சரி! போதும்! போதும்!'' என்ற தாத்தா மேலும் தொடர்ந்தார்.... "அந்தக் கடிதத்தை படித்த எடிசன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி விட்டார். உடனே தன்னுடைய டைரியில் பின்வருமாறு எழுதினார். "தாமஸ் ஆல்வா எடிசன் அறிவு வளர்ச்சியில் பின்தங்கியவன். அவனது தாயார் அவனை இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார்!'.....
 நேர்மறையாக நாம் பயன்படுத்தும் இனிய சொற்கள் எப்படி ஒரு மனிதனை மாமேதை ஆக ஆக்கியிருக்கிறது பார்த்தாயா ஆனந்த்!... யார் கண்டது? நாளை உன் தம்பி கூட ஒரு மிகப் பெரிய விஞ்ஞானியாக வரக்கூடும்! எனவே எப்பொழுதும் இனிமையான சொற்களையே நீ பயன்படுத்த வேண்டும்! கண்டிக்கும் பொழுதுகூட அவனிடம் நீ கனிவாக நடந்து கொள்ள வேண்டும்! சரியா?'' என்றார் தாத்தா.
 தன் தவற்றை உணர்ந்து கொண்ட ஆனந்த் " சரி தாத்தா!'' என்றான் புன்சிரிப்புடன்.
 இதே கருத்தையே வள்ளுவரும் " இனியவை கூறல் 'அதிகாரத்தில்,
 இனிய உளவாக இன்னாத கூறல்
 கனியிருப்ப காய் கவர்ந்தற்று!
 என்கிறார்.
 இதன் பொருள் " இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்து தின்பதற்கு சமமாகும்!' என்பதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com