கருவூலம்: சிக்கிம் மாநிலம்!

நம் நாட்டின் சிக்கிம் மாநிலம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமா? இந்த மாநிலம் முழுமையாக இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது.
கருவூலம்: சிக்கிம் மாநிலம்!

நம் நாட்டின் சிக்கிம் மாநிலம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமா? இந்த மாநிலம் முழுமையாக இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. முன்பு தனி நாடாக இருந்த சிக்கிம், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவுடன் இணைந்தது. 
சிக்கிமின் மேற்கே நேபாளமும், வடக்கில் சீனாவின் ஆட்சிக்குட்பட்ட திபெத்தும், கிழக்கில் பூடானும், தெற்கில் மேற்கு வங்காள மாநிலமும் சூழ்ந்துள்ளன. சிக்கிமின் தலைநகர் 
"கேங்டாக்' நகரமாகும். நிர்வாக வசதிக்காக சிக்கிம் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நேபாள மொழியே அதிகார பூர்வமான மொழி. உலகின் மிக உயர்ந்த சிகரமான "கஞ்சன்ஜங்கா' சிக்கிமில் உள்ளது.
இந்தியாவுடன் இணைப்பு
1947 - இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சிக்கிமும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. அப்பொழுது இந்தியாவுடன் இணைவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெறாததால் மன்னராட்சி நாடாகவே தொடர்ந்தது. சிக்கிமின் சுதந்திரத்திற்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்றது. அதன்படி, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. மற்ற அனைத்துத் துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. 
அந்நிலையில் நேபாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975 - இல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற "காஜி' என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்துக்கொள்ள இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5 சதவீதம் சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரித்தனர். எனவே 1975 - ஆண்டு மே மாதம் 16 - ஆம் நாள் சிக்கிம் இந்தியாவின் மாநிலமானது.
வித்தியாசமான மாநிலம்!
சிக்கிம் 7096 ச.கி.மீ பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கி.மீ. கிழக்கு மேற்காக 65 கி.மீ கொண்டது. மேற்கு சிக்கிம், வடக்கு சிக்கிம், கிழக்கு சிக்கிம், தெற்கு சிக்கிம் என நான்கு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. வடகிழக்கு இந்தியாவின் அமைதியான மாநிலம்!
இமயமலைப் பிரதேசத்தில் இருப்பதால் இம்மாநிலம் கடல்மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்துள்ளது. 3000 அடியிலிருந்து 28,208 அடி உயரம் வரை மாநிலத்தின் உயரம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. 
மொத்த மாநிலத்திலும் எல்லா இடத்திலும், ஏற்ற, இறக்கமான நிலப்பகுதிகள் உள்ளன. தொடர்ந்து 500 அடி தூரம் சமதளத்தில் நடப்பது என்பது இயலாத காரியம். வெகு நாட்களாக சிக்கிமில் ரயில் போக்குவரத்து கிடையாது. "பாக்யாங்' என்ற இடத்தில், 2018 - ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று வரை ரயில் போக்கு வரத்து கிடையாது. மாநிலத்தின் பெரிய முக்கிய நகரங்கள் கேங்டாக், கெய்சிங், மங்கன் மற்றும் நாம்ச்சி ஆகியவையாகும்.
மக்கள் தொகை
2011 - ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,10,577 ஆக உள்ளது. 
இயற்கை விவசாய மாநிலம்
2016 - ஆம் ஆண்டில், ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ உபயோகப்படுத்தாத முழு இயற்கை விவசாய மாநிலம் என்று சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு இயற்கை விவசாயம் என எந்த ஒரு நாடோ, அல்லது இந்தியாவின் எந்த ஒரு மாநிலமோ எடுக்காத கொள்கை முடிவை எடுத்து அதை நிறைவேற்றியுள்ளது சிக்கிம்!!
இங்கு 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. சிக்கிமில் புகையிலையும், பிளாஸ்டிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழவகைகள், காய்கறிகள் போன்றவை இங்கு பயிரிடப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கையைப் பாராட்டி, ஐ.நா வின் உணவு, மற்றும் வேளாண் அமைப்பு, "வருங்காலக் கொள்கை விருது!' அளித்துள்ளது. 25 நாடுகளிலிருந்து வந்த 51 கொள்கை முடிவுகளில் சிறந்ததாக சிக்கிம் மாநிலத்தின் விவசாயக் கொள்கை தேர்வு பெற்றுத் தங்க விருதை வென்றுள்ளது!
நாதூ லா கணவாய்!
இக்கணவாய் சிக்கிம் மாநிலத்தையும், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 4310 மீ.உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி ஆகும். இது கேங்டாக்கில் இருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கணவாய் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள மூன்று வணிகப் பாதைகளுள் ஒன்று. 
"நாதூ லா' கணவாய்க்குச் செல்ல முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். பல சோதனைகளுக்குப் பின்னரே இப்பகுதிக்குச் செல்ல முடியும். எல்லைக்கு அப்பால் சீன ராணுவ வீரர்கள் நடமாடுவதையும், இங்கிருந்து பார்க்க முடியும். சுமார் 14,400 அடி உயரத்தில் உள்ள இப்பகுதி கடுங்குளிர் கொண்டது. இந்த சர்வ தேச எல்லையின் இருபுறமும் உள்ள வீரர்கள் இப்பகுதியை அனைத்து வகையான வானிலையிலும் பாதுகாத்து வருகின்றனர். 
செலப் லா கணவாய்!
சிக்கிம் மாநிலம் மற்றும் திபெத்திற்கு இடையில் அமைந்துள்ள உயர்ந்த கணவாய் இது. உயரம் சுமார் 14 ஆயிரம் அடி. நீளம் 151 அடி. சிக்கிம் மற்றும் திபெத்திற்கான சீரான பாதை இங்குள்ளது. 
கேங்டாக்!
நாட்டின் இரண்டாவது மிகச் சிறிய மாநிலமான சிக்கிமின் தலைநகரம் கேங்டாக் ஆகும். கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் கிழக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில் இருக்கிறது. இந்த சிறிய மலை நகரம் அமைதியை விரும்புபவர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு கணேஷ் டோக், ஹனுமன் டோக், என் சே மடாலயம், லைட் ஹவுஸ், தாஷி காட்சி முனை, இமயமலை விலங்கியல் பூங்கா, ஜாக்ரி அருவி, மற்றும் சியோங்னோஸ்வா அருவி உள்ளிட்ட பல இடங்கள் பார்த்து ரசிக்கத்தக்கவை. மேலும் இங்கு கேபிள் கார் சவாரி, ரிவர் ராஃப்டிங், பள்ளத்தாக்கு பகுதியில் பாராகிளைடிங், மவுண்டன் பைக்கிங், யாக் சஃபாரி, மற்றும் பல சாகச விளையாட்டுகள் பிரசித்தமானவை. 
திபெடோலஜியின் நம்கியல் நிறுவனம் - காங்டாக்!
இது திபெத்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம். இங்கு கையெழுத்துப் பிரதிகள், துணியில் வரையப்பட்ட ஓவியங்கள், ஆடைகள், கலைப்பொருட்கள் உள்ள அருங்காட்சியகமும் உள்ளது. 
ரும்டெக் மொனாஸ்ட்ரி!
இது ஒரு திபெத்திய பெளத்த மடம். தியானம் செய்ய ஏற்ற இடம். சிக்கிமின் லாமாக்களின் பெரிய மடாலயம். இந்த மடாலயத்தில் நேர்த்தியான மற்றும் அரிதான பெளத்த கலைப்படைப்புகளைக் காணலாம். 12 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மடாலயம் சிக்கிமில் உள்ள "கக்யு' பிரிவைச் சேர்ந்தது. 
இந்த மடாலயம் தனித்துவமான ஓவியங்கள், சுவரோவியங்கள் மற்றும் சிற்பங்களின் கருவூலமாகும். 1001 மினியேச்சர் தங்க சிற்பங்கள் இங்குள்ளன. 
"என் சே' மொனாஸ்ட்ரி! 
இது ஒரு சிறிய மடாலயம். பகோடா அமைப்பு 19-ஆம் நூற்றாண்டின் சீனக் கட்டடக் கலை பாணிக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. சுவர் ஓவியங்களுக்குப் பெயர் பெற்றது. பைன் மரங்களுக்கு இடையே உள்ள அமைதியான மடாலயம்.
ஹனுமான் டோக்! - காங்டாக்
ஹனுமான் டோக் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. இங்கிருந்து கஞ்சன்ஜங்காவின் அற்புதமான அழகைப் பார்த்து ரசிக்கலாம். புராணங்களின்படி சஞ்சீவினி மலையை இலங்கைக்குக் கொண்டு சென்ற போது, இங்கு சற்று ஓய்வு எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
தாஷி காட்சி முனை!
ஓர் அழகான சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்கவும், "கஞ்சஜங்கா' மலையினைப் பார்த்து ரசிக்கவும் ஏற்ற இடம். 
பாபா மந்திர்!
சிக்கிமில் உள்ள பாபா மந்திர் புகழ் பெற்றது. பஞ்சாப் ரெஜிமெண்டைச் சேர்ந்த ஹர்பஜன்சிங் எனும் ராணுவ வீரர் ஞாபகார்த்தமாக ஏற்படுத்தப்பட்ட பாபா மந்திர் வித்தியாசமானது. இந்திய ராணுவம் அவர் தனது பணியை இன்றளவும் தொடர்வதாகக் கருதுகிறது. 
சோம் கோ ஏரி! (TSOMGO LAKE)
சிக்கிமில் நிறைய ஏரிகள் உள்ளன. அவற்றில் சோம்கோ ஏரி கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம். கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் பனி மூடிய மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த ஏரி கேங்டாக் நகரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இந்திய - சீன எல்லைக்கு அருகாமையில் நாதுலா கணவாய்க்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இதன் சராசரி ஆழம் 15 மீட்டர் ஆகும். இந்த ஏரி 1 கி.மீ. நீளம் கொண்டது. ஏரியைச் சுற்றி உள்ள மலைகளில் பனி உருகி நீர் உருவாவதால் வறட்சி என்பது இந்த ஏரிக்கு இல்லை. உண்மையில் சோம்கோ ஏரி லுங்கீட்சு சூ 
ஆற்றின் தோற்றப் பகுதியாகும். 
குளிர்காலத்தில் இந்த ஏரி நீல நிறத்தில் முற்றிலும் உறைந்திருக்கும். வசந்த காலத்தின் தொடக்கத்தில் இந்த ஏரி வனப்பகுதிகளின் பசுமையால் சூழப்பட்டிருக்கும். இங்கு பல நீர்வீழ்ச்சிகளையும் காணலாம். இந்த ஏரியின் நினைவாக இந்திய அஞ்சல் துறை அஞ்சல் தலை ஒன்றும் வெளியிட்டுள்ளது. 
ருஸ்தம்ஜி பூங்கா - கேங்டாக்!
ருஸ்தம்ஜி பூங்கா தலைநகர் கேங்டாக்கில் அரசுத் தலைமைச் செயலகத்திற்கு அருகிலுள்ளது. அரிய வகை மான்களும், சிவப்பு பாண்டாக் கரடிகளும் இங்கு வாழ்கின்றன.
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா!
சிக்கிமின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கிருக்கும் மலையின் பெயரே இப்பூங்காவிற்கும் சூட்டப்பட்டுள்ளது. 849.5 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தேசியப் பூங்கா வடக்கு சிக்கிம் மாவட்டத்திற்கும், மேற்கு சிக்கிம் மாவட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் எண்ணற்ற விலங்கினங்களும் தாவர இனங்களும் நிறைந்த அற்புதமான பல்லுயிர்ச் சூழல் நிலவுகிறது. ஃபிர், மேப்பிள், உள்ளிட்ட மரங்களும், பல் வேறு தாவரங்களும், மூலிகைகளும் நிறைந்த இடம் இது. பனிச்சிறுத்தை, வரையாடு, செந்நாய், தேன் கரடி, கருங்கரடி, சிவப்பு பாண்டா, உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன. 
மேலும் இப்பகுதியில் 18 பனியாறுகள், 17 ஏரிகள், ஏராளமான மலையேற்றப் பாதைகள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா இடங்களி அமைந்த இப்பகுதி அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும்.
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா யுனெஸ்கோவின் உலகப் பல்லுயிர்ப் பாதுகாப்பு வலையமைப்புப் பட்டியலில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது! 
தொடரும்....
தொகுப்பு : 
கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com