பொறுமையின் அவசியம்!

என்னோட கணக்குப் புஸ்தகத்தைக் காணோம்!..... ரொம்ப நேரமாத் தேடறேன்.... கிடைக்கலே.... எங்கே வெச்சேன்னு மறந்து போச்சு!.
பொறுமையின் அவசியம்!

அரங்கம்
 காட்சி - 1

 இடம் - கோபியின் வீடு,
 மாந்தர் - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோபி, கோபியின் அம்மா, கோபியின் அப்பா.
 (கோபி, தான் படிக்கும் அறையிலே எதையோ
 தீவிரமாத் தேடிக்கொண்டிருக்கிறான் - அவன்
 பரபரப்பாய் எதையோ தேடுவதைப் பார்த்த அம்மா
 அவன் அருகில் வருகிறாள்)
 
 கோபியின் அம்மா : கோபி!..... சாப்பிட வாடா!.... என்னத்தை ரொம்ப நேரமா தேடறே?....
 கோபி : என்னோட கணக்குப் புஸ்தகத்தைக் காணோம்!..... ரொம்ப நேரமாத் தேடறேன்.... கிடைக்கலே.... எங்கே வெச்சேன்னு மறந்து போச்சு!....
 அம்மா : நீ படிக்கிற ரூம்லேதான் இருக்கும்!.... வேறே எங்கே போயிடும்!.... பொறுமையா, நல்லாத் தேடிப்பாரு!
 கோபி : நல்லாத்தாம்மா தேடிக்கிட்டிருக்கேன்.... என் ரூம்லே இல்லே..... நாளைக்குக் கணக்குத் தேர்வு.... எப்படிப் படிக்கப் போறேனோ தெரியலே!....
 அம்மா : சரி புலம்பாதே!..... நானும் தேடிப் பார்க்கிறேன்..... இப்போ சாப்பிட வாயேண்டா!.... சாப்பிட்டுட்டுத் தேடு!
 கோபி : இப்போ எனக்கு சாப்பாடு இறங்காதும்மா.... கணக்குப் புஸ்தகம் கிடைச்சாத்தான் நிம்மதியா இருக்கும்.... ஹும்.... இந்த வீட்டிலே எதுவும் வெச்ச இடத்திலே இருக்கறதில்லே.....
 அம்மா : சரி, சரி கத்தாதே!..... உன்னோட பயிற்சி நோட்டிலே போட்டிருக்கிற கணக்கையெல்லாம் போட்டுப் பார்!.... ரஃப் நோட்டிலேயும் சில கணக்கெல்லாம் போட்டிருப்பே!.... அதையும் போட்டுப் பார்!.... பசிக்கலையா,.... சாப்பிட்டுத் தேடலாமே.... அப்பாவும் இப்போ வந்துடுவார்.... பக்கத்திலேதான் கடைக்குப் போயிருக்கார்.... அவரையும் தேடச்சொல்றேன்....
 கோபி : நான் அப்பாவோட சாப்பிடறேன்மா!.... அவர் வந்ததும் என்னைச் சாப்பிடக் கூப்பிடு!.... நீ சொன்னா மாதிரி நான் படிக்கப் போறேன்.... கொஞ்சம் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்கிறேன்....
 அம்மா : (மனதிற்குள்) ம்... நல்லாத்தான் படிக்கிறான்...... நல்ல திறமை இருக்கு.... ஆனா பொறுமைதான் இல்லே.... எப்போ கத்துக்கப் போறானோ?....
 (கோபியின் அப்பா வருகிறார்.... எல்லோரும்
 கணக்குப் புத்தகத்தைத் தேடுகிறார்கள்....
 அது கோபியின் படிக்கும் அறையிலேயே
 கிடைத்து விடுகிறது)
 அப்பா : நீ கொஞ்சம் பொறுமையாத் தேடியிருக்கணும் கோபி!....
 கோபி : நல்லாத்தாம்பா தேடினேன்!
 அப்பா : சரி, சரி, இந்தா....
 (சிறிது நேரம் கழித்து எல்லோரும் சாப்பிடுகிறார்கள்... -- கோபி படிக்கப் போகிறான்.--)
 
 காட்சி -2
 இடம் - சாலை, பள்ளிக்கூடம்... மாந்தர் - கோபி, கோபியின் நண்பன் குரு.
 ( இருவரும் அவரவர் சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறார்கள்)
 
 கோபி : குரு,.... பள்ளிக்கூடத்திற்கு நேரமாயிடுச்சுடா,..... வேகமா ஓட்டு!....
 குரு : பொறுமையா இருடா!.... பதட்டப்
 படாதே!.... இன்னும் பத்து நிமிஷத்திலே ஸ்கூலுக்குப் போயிடலாம்!.... தேர்வு ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு!....
 கோபி : முன்னாடி போனா சூத்திரங்களை திரும்பவும் ஒரு முறை ஞாபகப்படுத்திக்கலாமே!.....
 குரு : நீதான் நல்லாப் படிக்கிற பையனாச்சே!.... கவலைப்படாதேடா!.... நானெல்லாம் பாஸ் பண்றதே பெரிய விஷயம்!....
 கோபி : எங்க வீட்டுக்குப் படிக்க வாடான்னு உன்னை எத்தனை முறை கூப்பிட்டிருக்கேன்!.... நாம் சேர்ந்து படிக்கலாமே!.... நீதான் கேக்க மாட்டேங்கிறே....
 (பள்ளிக்கூடம் வந்து சேர்கிறார்கள். -- கோபி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறான். சைக்கிள் ஸ்டாண்டிலேயே அவனது பேனா கீழே விழுந்து விடுகிறது. கோபி அதைக் கவனிக்க வில்லை. குரு அதைக் கண்டு
 எடுக்கிறான்.)
 குரு : கோபி, இந்தாடா.... நீ அவசர, அவசரமா சைக்கிளை ஸ்டாண்ட் போடும்போது உன் பேனா விழுந்துடுச்சு!
 கோபி : நல்ல காலம்!.... தேர்விலே அவஸ்தைப் பட்டிருப்பேன்!.... ரொம்ப தேங்ஸ்டா.
 குரு : உனக்குப் பொறுமை ரொம்பத் தேவை.... ரொம்ப பதட்டப்படறே....
 ( இருவரும் தேர்வு அறைக்குள் நுழைகிறார்கள்)
 
 காட்சி - 3
 இடம் - தேர்வு நடக்கும் அறை,
 மாந்தர் - கோபி, குரு, ஆசிரியை மற்றும் மாணவர்கள்.
 (கோபி பதட்டமாக தேர்வை
 எழுதிக்கொண்டிருக்கிறான்.)
 
 குரு : (மெதுவாக) டேய்,.... நான் எனக்குத் தெரிஞ்சதை வெச்சுத் தேர்வை எழுதி முடிச்சுட்டேன்!..... வெளியிலே வெயிட் பண்றேன்டா.... நீ எழுதி முடிச்சதும் வா.....
 கோபி : இருடா,..... நானும் சீக்கிரம் வந்துடறேன்.....
 குரு : நான்தான் வெளியிலே வெயிட் பண்றேன்னு சொன்னேனே.... நீ பொறுமையா எழுதிட்டு வா....
 கோபி : ஓ.கே. சீக்கிரம் வந்துடறேன்... வெயிட் பண்ணு....
 குரு : இந்தாங்க மிஸ், என்னோட பேப்பர்....
 (குரு விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்று கோபிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறான். --- கோபிக்கு சீக்கிரம் தேர்வை எழுதிவிட்டு நண்பனுடன் வீடு திரும்ப ஆசை வந்துவிடுகிறது.)
 கோபி : மிஸ்,.... என்னோட பேப்பர் இந்தாங்க....
 ஆசிரியை : கோபி, இன்னும் நேரமிருக்கு,..... கணக்கெல்லாம் சரியா போட்டிருக்கியான்னு பொறுமையா ஒருதரம் பார்த்துட்டுக் கொடு.
 கோபி : அவசியமில்லை மிஸ்..... சரியாத்தான் எழுதியிருக்கேன்....
 (கோபி விடைத்தாளைக் கொடுத்துவிட்டு
 வெளியேறுகிறான்)
 
 காட்சி - 4
 இடம் - வகுப்பறை,
 மாந்தர் - கோபி, குரு, மாணவர்கள் மற்றும் ஆசிரியை.
 
 ஆசிரியை : இன்னைக்கு நம்ம வகுப்பிலே கணக்குத் தேர்வு பேப்பர்களைத் தரப்போகிறேன்..... எல்லோரும் அவங்கவங்க மதிப்பெண் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.... (பேப்பரைக் கொடுத்துக் கொண்டே) குரு, வழக்கம்போல நீ ஜஸ்ட் பாஸ்தான்!..... கோபி, இந்தா, உன் பேப்பர். உன் மதிப்பெண்ணும் குறைஞ்சிருக்கு.
 கோபி : (அதிர்ச்சியுடன்) என்ன மிஸ்?.... 60 மதிப்பெண் போட்டிருக்கீங்க?... நான் நல்லாத்தானே எழுதினேன்?.....
 ஆசிரியை : ஆமா!.... எல்லா சூத்திரமும் சரியா இருந்தது. ஆனா கூட்டல்லே தப்புப் பண்ணிட்டே!.... விடை சரியா இருந்தாத்தானே மதிப்பெண் தர முடியும்?
 கோபி : (தலையைக் கவிழ்த்துக் கொண்டு) ஆமா, மிஸ்..... அன்னைக்கு அவசர, அவசரமா எழுதினதிலே தப்பு வந்துடுச்சு!....
 ஆசிரியை : நான்தான் அன்னைக்கு நீ பேப்பர் குடுக்கும் போதே சொன்னேனே.... திரும்பவும் ஒருதரம் சரியாப் போட்டிருக்கியான்னு பார்த்துடுன்னு!..... ம்.... நீ நாளைக்கு உன் அம்மாவைக் கூட்டிக்கிட்டு வா!
 கோபி : சரி, மிஸ்.
 
 காட்சி - 5
 இடம் - பள்ளிக்கூடம்,
 மாந்தர் - ஆசிரியை, மாணவர்கள், கோபி,
 கோபியின் அம்மா,
 
 கோபியின் அம்மா : வணக்கம் மிஸ்....
 ஆசிரியை : வாங்க.... இந்தத் தேர்வுல கோபியோட மதிப்பெண் ரொம்பக் குறைஞ்சு போச்சு. அதனாலேதான் கூட்டிட்டு வரச் சொன்னேன்.
 அம்மா : நல்லாப் படிக்கிற பையன் மிஸ்....
 ஆசிரியை : அது தெரிஞ்சுதான் உங்களைப் பார்க்கணும்னு சொன்னேன்.... அன்னைக்குத் தேர்வு எழுதும்போதே பார்த்தேன். குரு கிளம்பின உடனே இவனுக்கு இருப்புக் கொள்ளலை.... அவசர, அவசரமா தேர்வு எழுதிட்டு கிளம்பிட்டான்!.... அவனுக்குப் பொறுமையே இல்லை....
 அம்மா : அது வந்து மிஸ்....
 ஆசிரியை : தேர்வு எழுதி முடிச்சதும் நிறைய நேரம் இருந்தது..... எல்லாக் கணக்கையும் மறுபடி ஒருமுறை பார்த்திருந்தா தப்பு இவ்வளவு வந்திருக்காது!.... பொறுமையா இருந்தா அவன் நூறு மார்க் வாங்கலாம்!.... அடுத்த வருஷம் பத்தாவது தேர்வு!....
 அம்மா : ஆமா மிஸ்.... அவனுக்குப் பொறுமைதான் இருக்க மாட்டேங்குது....
 ஆசிரியை : அதை அவன்தான் திருத்திக்கணும்!
 கோபி : சாரி, மிஸ்..... இனிமே பொறுமையா இருப்பேன் மிஸ்.... தேர்வு எழுதிட்டு ஒரு முறை சோதித்துப் பார்த்துடறேன் மிஸ்.... இப்போ மதிப்பெண் குறைஞ்சு போனது எனக்கு ஒரு நல்ல பாடம்!
 ( ஆசிரியையும், அம்மாவும்
 அவனை பெருமையுடன் பார்க்கிறார்கள்)
 
 நிறைவு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com