விடுதலை நாள் பிரார்த்தனை!

அகவெழிலன் என்பவன் சுதேசபுரியில் வாழ்ந்து வந்தான். சுதேசபுரியில் "விடுதலை நாள் பிரார்த்தனை' என்று ஒரு விழா வருடாவருடம் கொண்டாடுவார்கள்.
 விடுதலை நாள் பிரார்த்தனை!

அகவெழிலன் என்பவன் சுதேசபுரியில் வாழ்ந்து வந்தான். சுதேசபுரியில் "விடுதலை நாள் பிரார்த்தனை' என்று ஒரு விழா வருடாவருடம் கொண்டாடுவார்கள். இந்த விழா நடக்கும் சில நாட்களுக்கு முன் சிலர் காட்டுக்குச் சென்று பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பார்கள். பிறகு அவைகளைக் கூண்டில் அடைத்து எடுத்துவருவார்கள். விழா நடக்கும் நாளில் அக்கூண்டுகளை எடுத்துக் கொண்டு பெரிய திடலுக்கு வருவார்கள். அங்கு பறவைகள் இருக்கும் கூண்டுகளை பலர் விலை கொடுத்து வாங்குவார்கள். பிறகு கூண்டில் இருக்கும் பறவைகளை விடுதலை செய்து வானில் விட்டுவிடுவார்கள். இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் பல பிரச்னைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை! இதனால் பறவைகளப் பிடித்து வருபவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்! பறவைகளுக்கு விடுதலையும் கிடைக்கும்.
 விடுதலை நாள் விழா நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் நாலைந்து நாட்களே இருந்தன.
 அகவெழிலன் காட்டுக்குச் சென்றான். போகும்போது சாப்பாட்டைக் கட்டி எடுத்துக் கொண்டான். சில வாழைப்பழங்களையும் எடுத்துக்கொண்டான். காட்டில் சில பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடித்தான். பிறகு அவைகளைக் கூண்டில் அடைத்தான். அவைகளை வியாபாரம் செய்வதற்காக பெரிய திடலை நோக்கி நடந்தான். வழியில் அவன் காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போது ஒரு கரடி அவனைப் பார்த்து விட்டது. பயந்துபோன அகவெழிலன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். கையில் ஐந்தாறு கூண்டுகள் வேறு! கரடி அவனைத் துரத்த ஆரம்பித்தது.
 பதட்டமடைந்த அவன் தான் வைத்துக்கொண்டிருந்த கூண்டுகளுடன் ஒரு பாழும் கிணற்றில் விழுந்துவிட்டான். அவனால் கிணற்றிலிருந்து வெளியே வரமுடியவில்லை. மாலையாகிவிட்டது! அவனுக்கு பயமாகிவிட்டது! இருட்ட ஆரம்பித்து விட்டது! அவனுக்குப் பசித்தது! காலையில் அவன் எடுத்து வந்த சாப்பாடும் மதியமே தீர்ந்து விட்டது. நல்லகாலம்! அவனிடம் மூன்று வாழைப்பழங்கள் இருந்தன. விதியை நொந்து கொண்டான். பிறகு பசியைப் போக்கிக் கொள்ளப் பழத்தை உரித்தான்.
 கூண்டிலிருந்த பறவைகள் பழத்தைப் பார்த்ததும் கீக்கீக்கீ என்று கூச்சலிட்டன. பறவைகளைப் பார்த்த அவனுக்குப் பரிதாபமாகிவிட்டது! தானும் ஒரு கூண்டில்தானே இருக்கிறோம்!.... பறவைகளின் நிலையும் தனது நிலையும் ஒன்றாகிவிட்டதை எண்ணினான். அவைகள் கூண்டுக்குள் அடைபட்டது போலவே தானும் கிணற்றில் அடைபட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான். பறவைகளை தான் தன் சுயநலத்திற்காகப் பிடித்து வந்ததை எண்ணி மிகவும் வெட்கப்பட்டான். பிறகு கூண்டுகளைத் திறந்தான். அவைகளுக்கு வாழைப்பழங்களைப் பிட்டுப் போட்டான். பழங்களைப் பறவைகள் தின்றன. அவைகள் அவன் தோள் மீதும், தலை மீதும், மடி மீதும் அமர்ந்தன. இந்த இருண்ட வேளையில் அவைகள் அவனுக்குத் துணையாக இருப்பது போல் தோன்றியது!
 பிறகு கிணற்றுக்கு வெளியே ஒரு வெளிச்சம் நகர்வதுபோல் தோன்றியது. "உதவி! உதவி!'' என்று கத்தினான். சத்தத்தைக் கேட்டு பயந்த பறவைகள் கிணற்றிலிருந்து பறந்து வெளியேறுவதை மகிழ்ச்சியோடு பார்த்தான்.கை விளக்கினால் சிலர் கிணற்றின் உள்ளே பார்த்தனர். அவர்கள் அகவெழிலனைக் கண்டனர். அந்த வழிப்போக்கர்களால் அவன் காப்பாற்றப்பட்டான். அவர்களுடன் செல்லும்போது சில பறவைகளின் ஒலிகள் கேட்டன. அவைகள் தான் கூண்டைத் திறந்து விடுதலை செய்துவிட்ட பறவைகளாயிருக்கும் என எண்ணினான். இனி "விடுதலை நாள் பிரார்த்தனை' விழாவுக்காகவோ, வேறு எந்தக் காரணங்களுக்காகவோ பறவைகளைப் பிடிப்பதில்லை என்று அவன் உறுதி கொண்டான். அன்று முதல் பறவைகளின் ஒலி அகவெழிலனுக்கு ஞானிகளின் உபதேசம் போல் தோன்றியது!
 எஸ். திருமலை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com