அரங்கம்: இயல்வது கரவேல்!

அப்பா,..... இப்படித் தினமும் உயற்பயிற்சி பண்ணினா உடம்பு ஸ்ட்ராங்கா ஆகுமா?
அரங்கம்: இயல்வது கரவேல்!

காட்சி -1
இடம் - தேஜா வீடு
மாந்தர் - தேஜா, பூஜா, அப்பா ஞானவேல், அம்மா அம்சவேணி.
(ஞானவேல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே பூஜாவும், தேஜாவும் வருகிறார்கள்.)

தேஜா : அப்பா,..... இப்படித் தினமும் உயற்பயிற்சி பண்ணினா உடம்பு ஸ்ட்ராங்கா ஆகுமா?
ஞானவேல் : கண்டிப்பா!.... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இப்படி தினமும் உடற்பயிற்சி செஞ்சா உடம்புக்கு எந்த நோயும் வராது. மிலிட்டரி ஜவான் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கலாம்.
பூஜா : அப்பா!.... ஜவான்னு நீங்க சொன்னவுடனேதான் ஞாபகத்துக்கு வருது!..... இன்னிக்கு 
கொடி நாள். எங்க ஸ்கூல் சார்பா ரோட்லே உண்டியல் எடுத்துக்கிட்டுப் போயி கொடிய குடுத்துட்டுக் காசு சேர்க்கப் போறோம்!.... 
ஞானவேல் : ரோட்டிலே கவனமாப் போங்க!...
(அம்மா அம்சவேணி அங்கு வருகிறாள்.)
அம்சவேணி : இந்தா பூஜா..... 50 ரூபாய்!..... நம்ம குடும்பத்துக்காக!..... கொடி வாங்கிட்டு வா!..... 
பூஜா : தேங்ஸ்மா.....
(பூஜா பணத்தை வாங்கிக்கொள்கிறாள்..... இருவரும் செல்கின்றனர்.)
ஞானவேல் : நான் நினைச்சேன்!..... நீ செஞ்சுட்டே!.....
அம்சவேணி : அதுதான் அம்சவேணி....

காட்சி - 2
இடம் - பூஜா, தேஜா படிக்கும் பள்ளி.
மாந்தர் - தலைமை ஆசிரியர், மாணவர்கள்.
(..."திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளி'... என்ற போர்டு இருக்கிறது. - அசெம்பிளியில் எல்லா மாணவர்களும் நிற்கிறார்கள். தலைமை ஆசிரியர் கையில் ஒரு உண்டி. அவர் மேடையிலிருந்து பேசுகிறார். )

தலைமை ஆசிரியர் : மாணவர்களே!..... நமது நாட்டைக் காக்கும் போர் வீரர்களின் நலனுக்காக இந்தக் கொடி நாள் கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல இந்த வருடமும் கொடி நாள் வசூலில் நமது பள்ளி முதலிடம் வகிக்க வேண்டும். ஒரு உண்டியலுக்கு 2 பேராகச் சென்று, பொதுமக்களிடம் வசூல் செய்து வாருங்கள்.... என்ன, செய்வீர்களா?....
அனைத்து மாணவர்களும் : செய்வோம்!.... செய்வோம்!....

காட்சி - 3
இடம் - வாகனங்களும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த சாலை.
மாந்தர் - பூஜா, தேஜா, செல்வம், செல்வத்தின் நண்பன்.
(ஓர் இடத்தில் சாலை இரு பிரிவுகளாகப் பிரிகிறது. அந்த இடத்தில் பூஜா, தேஜா, ஒரு உண்டியலையும், செல்வமும் அவன் நண்பனும் ஒரு உண்டியலையும் எடுத்துக்கொண்டு வருகின்றனர். )

பூஜா : செல்வம்.... இப்படி என் கூட வர்றீங்களா?
செல்வம் : வேண்டாம்..... வேண்டாம்...... நீ இப்படிப் போ!..... நாங்க அப்படிப் போறோம்!.... எங்க வசூல்ல பங்கு போடலாம்னு பார்க்கறியா?
பூஜா : சரி, தேஜா..... நீ வாடா....
(பூஜாவும் தேஜாவும் வேறு வழியில் செல்ல ..... 
செல்வமும், அவன் நண்பனும் இன்னொரு வழியில் செல்கின்றனர். -- செல்வமும், அவன் நண்பனும் நடக்கின்றனர். )
செல்வம் : என்னடா இது?... பிச்சைக்காரன் மாதிரி உண்டியலைக் கையிலே குடுத்து அனுப்பிச்சிட்டாங்க!....ஸ்கூல் லீவ் விட்டா ஜாலியா சுத்தலாம்னு பார்த்தா..... போர்!.... 
( அப்போது எதிரே பேண்ட் போட்ட 
ஒருவர் வருதல்...)
செல்வத்தின் நண்பன் : சார்.... காசு போட்டுட்டுக் கொடியை வாங்கிட்டுப் போங்க....
வந்தவர் : கொடியா?.... எந்த அரசியல் கட்சிக் கொடி?
செல்வம் : யாருக்குத் தெரியும்?..... ஹெட்மாஸ்டர் விக்கச் சொன்னாரு!..... விக்கறோம்!..... இஷ்டம் இருந்தா போடுங்க!..... 
பேண்ட் போட்டவர் : இல்லேன்னா?...
செல்வம் : நடையைக் கட்டுங்க.... வாடா!..... தேறாத கேசு!.... 
( இருவரும் செல்கிறார்கள் )
பேண்ட் போட்டவர் : சின்னப் பசங்களுக்கு வாயைப் பாரு வாயை!....... கலெக்ஷன் பண்ணி ஏப்பம் போடறதுக்காகவே அலையறானுங்க!..... 

காட்சி - 4
இடம் - சாலை
மாந்தர் - பூஜா, தேஜா, காரில் வந்தவர். 
(சாலையில் ஒரு கார் வேகமாக வர, அதை உண்டியலைக் காட்டி நிறுத்துகிறாள் பூஜா. )

பூஜா : சார்!.... கொடிநாள்!.... கொடி வாங்கிக்குங்க சார்!..... 
காரில் வந்தவர் : எதுக்கும்மா இந்தக் கொடியை விக்கறீங்க?..... 
பூஜா : இது விற்பனை இல்லை சார்..... நம்ம நாட்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்காகவும், போரில் வீர மரணம் அடைஞ்ச ஜவான்களின் குடும்ப நலனுக்காகவும், வருஷத்துக்கு ஒரு தடவை, டிசம்பர் 7 - ஆம் தேதி கொடி நாளை அரசாங்கமே கொண்டாடுது சார்! இதுலே வசூலாகிற பணம் நம்ம நாட்டைப் பாதுகாக்கிற வீரர்களோட நலனுக்காகச் செலவு செய்யறாங்க சார்!.... 
வந்தவர் : வெரிகுட்!..... நல்ல ஸ்டூடண்ட்ஸ்!..... இந்தாம்மா 100 ரூபாய்..... 
(காரில் வந்தவர் உண்டியலில் பணம் போடுகிறார். தேஜா, அவரது சட்டையில் கொடியைக் 
குத்தி விடுகிறான். )
பூஜா : தேங்க்யூ சார்!.... 
(கார் புறப்படுகிறது---- இசை -- பூஜா கையில் 
உண்டியல்!... நிறைய கைகள் அதில்
பணம் போடுகின்றன. ) 

காட்சி - 5
இடம் - பூஜாவின் வீடு.
மாந்தர் - பூஜா, தேஜா, அம்மா, அப்பா. 
(இரவு நேரம். பூஜா, தேஜா, அம்மா, அப்பா எல்லோரும் அமர்ந்து டி.வி. பார்த்துக் 
கொண்டிருக்கிறார்கள். -- டி.வி. யில் செய்திகள் வாசிப்பு )

செய்தி வாசிப்பவர் : இன்று கொடிநாள்!..... வசூலில் திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்தது. 
(பூஜா குடும்பம் கை தட்டுகிறது!)
செய்தி : பூஜா, தேஜா இருவரும் சேர்ந்து 73 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்து முதலிடம் பெற்றுள்ளனர். சிறிய வயதில் பெரிய சாதனை எனப் பள்ளிக் கல்வி இயக்குநர் பாராட்டு.....
(பூஜாவும், தேஜாவும் கை கொடுத்துக் 
கொள்கின்றனர்! - அப்பாவும், அம்மாவும் 
கை தட்டுகின்றனர்!)
செய்தி : இது பற்றி மாணவி பூஜா, நம்ம மாணவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.... 
(அம்மாவும், அப்பாவும் வியப்புடன் 
நோக்குகிறார்கள்!) 
.... ""பெத்தவங்க சொல்படியும், எங்கள் ஆசிரியர் சொல்படியும் நடந்ததாலேதான் எங்களுக்கு இந்தப் பெருமை கிடைச்சிருக்கு!.... என் தம்பி தேஜா அதற்கு நிறைய ஹெல்ப் பண்ணினான்)
(அப்பா கண்களில் கண்ணீர்...)
அம்சவேணி : என்னங்க?.... அழறீங்க?....
ஞானவேல் : அழலே..... நல்ல பிள்ளைகளைப் பெத்ததுக்காக வர்ற ஆனந்தக் கண்ணீர்....
(இரு குழந்தைகளையும் அணைத்துக் கொள்கிறார்.)

(அனைவரும் சிரித்தல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com