காகிதப் பந்துகள்!

 எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்! ரமேஷ் அண்ணாவிற்கு அகில இந்திய அளவில் நடைபெறப்போகும் கால்பந்துக் குழுவுக்கான தேர்வில் இடம் பெற அனுமதிச் சீட்டு வந்திருந்தது.
 காகிதப் பந்துகள்!

படம் வரைந்தோர் (நாய்க் குட்டி)ஜி. லிப்ஷாமல்லா 4-ஆம் வகுப்பு,
 நேஷனல் மெட்.ஹையர்.செகண்டரி. பள்ளி, மேட்டுப்பாளையம்.
 (விளையாடும் பையன்) டி.ஹரிணி 5- ஆம் வகுப்பு, எல். ஜி.மெட்.
 ஹையர்.செகண்டரி. பள்ளி, வெள்ளலூர்-641111.
 எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்! ரமேஷ் அண்ணாவிற்கு அகில இந்திய அளவில் நடைபெறப்போகும் கால்பந்துக் குழுவுக்கான தேர்வில் இடம் பெற அனுமதிச் சீட்டு வந்திருந்தது. இதில் தேர்வடைந்துவிட்டால் அவன் அகில இந்தியக் கால்பந்துக் குழுவில் இடம் பெறுவான். பிறகு ரமேஷ் அண்ணா அகில உலகப் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவுக்காக ஆடும் குழுவில் இடம் பெறுவான். அடுத்த வாரம் அவன் கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டும்.
 அம்மா ஸ்வீட் செய்து கொண்டு வந்து, "இந்தா ராஜூ!.... உன் அண்ணா நல்லபடியா செலக்ட் ஆகணும்னு வேண்டிக்கோ!'' என்று கேசரியை என்னிடம் கொடுத்தாள்.
 "ராஜூ, பீச்சுக்குப் போகலாம்!'' என்றான் ரமேஷ் அண்ணா. நானும் சரியென்று புறப்பட்டேன். நான், ரமேஷ் அண்ணா, என்னுடைய குட்டி நாய் டாமி எல்லோரும் பீச்சுக்குப் புறப்பட்டோம்.
 அங்கே சற்று நேரம் விளையாடினோம். பீச்சில் பக்கத்து வீட்டு ஃபிரான்ஸிஸ் அங்கிளைச் சந்தித்தோம். அவர் வெள்ளைக்கலரில் ஒரு ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஐந்து பந்துகளை எடுத்தார். அதை மாற்றிப் போட்டுப் பிடித்தார். ஒரு பந்துகூட தவறிக் கீழே விழவில்லை! நான் ஆச்சரியமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
 "எப்படி மாமா, கீழே விழாம பிடிக்கிறீங்க?''
 "அதுவா, மேலே நாம் எறிகிற பந்தின் மீது கவனம் இருக்கணும்....!'' என்று கூறி அதன்படி அவர் செய்து காட்டினார். நான் முதலில் இரண்டு பந்துகளை அவர் போலவே எறிந்து பிடிக்க முயற்சித்தேன். ஒரு பந்து கீழே விழுந்தது. பிறகு அடுத்த முறை முயற்சித்தபோது இரண்டாவது பந்து கீழே விழுந்து விட்டது. ரமேஷும், ஃபிரான்ஸிஸ் அங்கிளும் சிரித்தனர். எனக்கு அந்த விளையாட்டு ரொம்பப் பிடித்திருந்தது. நான் விடாமுயற்சியால் அதைக் கற்றுக்கொண்டு விட்டேன். அதுவும் அரை மணி நேரத்திலேயே!
 "வெரி குட்!'' என்றார் ஃபிரான்ஸிஸ் மாமா. சற்று நேரத்தில் அவரிடமிருந்த பந்தில் மூன்றை வாங்கி அதையும் மாற்றிப் பிடித்தேன்! மாமாவும், அண்ணாவும் ரொம்ப ஆச்சரியமாக என்னைப் பார்த்தாங்க.
 ஆனால் ஐந்து பந்துகளை மாமாவைப் போல் போட்டுப் பிடிக்க என்னால் முடியவே இல்லை. இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஸ்கூலில் நண்பர்களிடம் இந்த விளையாட்டை ஆடிக் காமிக்கணும்.
 மறுநாள்.... தோட்டத்தில் டாமி விளையாடிக்கொண்டிருந்தது. நான் பழைய பேப்பரையெல்லாம் சுருட்டி ஒரு பந்துபோலப் பண்ணிக்கொண்டேன். அதை வண்ணத் தாள்களில் சுற்றி நூலால் கட்டிக்கொண்டேன்! விடா முயற்சியுடன் ஒரு வழியாக ஐந்து பந்துகளையும் மாற்றி, மாற்றிப் போட்டுப் பிடிக்கக் கற்றுக் கொண்டேன். அதை ஃபிரான்ஸிஸ் மாமாவுக்குச் செய்து காண்பிக்க எனக்கு ஆசையாய் இருந்தது. மாமா வீட்டிற்குச் சென்றேன். டாமி என்னிடமிருந்த சிவப்பு வண்ணப் பந்தை மட்டும் தூக்கிக்கொண்டு ரமேஷ் அண்ணா இருந்த அறைக்குச் சென்றுவிட்டது! நான் டாமியைத் துரத்தினேன்! டாமி அந்த சிவப்புப் பந்தைத் தர மறுத்துவிட்டது.

எல்லோருக்கும் சந்தேகமாகிவிட்டது. டாமி ஏன் அந்தச் சிவப்புப் பந்தை மட்டும் தர மறுக்கிறது? அப்பா அந்தப் பந்தைப் பிரித்துப் பார்த்தார். அதில்.....
 ரமேஷ் அண்ணாவிற்கு வந்திருந்த கடிதம்!
 பழைய பேப்பரோடு அதை கவனிக்காமல் அவசரத்தில் கசக்கிச் சுருட்டி அந்தப் பந்தை நான் தயாரித்திருந்தேன்!
 "மூளை இருக்காடா உனக்கு!...'' என்று அப்பா என்னைத் திட்டினார். நான் திருதிருவென்று பயந்துபோய் அழ ஆரம்பித்து விட்டேன்.
 ரமேஷ் அண்ணா என்னிடம், "சரி, போனாப் போகுது அழாதே,.... நல்ல காலம் கிழிக்கலே... என்று கூறி அதை நன்றாகப் பிரித்து அதன்மீது ஒரு பேப்பரை வைத்து நன்றாக அயர்ன் செய்து சுருக்கத்தை நீக்கி ஒரு பேப்பர் கவரில் போட்டு, "நானும் கவனமா இருந்திருக்கணும்' என்று கூறி, பத்திரப்படுத்திக்கொண்டான்.
 இனிமே நான் கவனமாக இருக்கணும் என்று நினைத்துக்கொண்டேன். எல்லாத்துக்கும் டாமிக்குதான் நன்றி சொல்லணும். அண்ணா ஒரு வாரத்தில் கல்கத்தா சென்றார். அங்கிருந்து போன் வந்தது. அண்ணா இந்தியக் குழுவுக்குத் தேர்வாயிட்டானாம்!
 அம்மா மறுபடியும் ஸ்வீட் செய்தாங்க..... நான் வேறே ஒரு சிவப்புப் பந்தைத் தயாரித்து ஐந்து பந்துகளைத் தூக்கிப் போட்டு விளையாடினேன்! டாமி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தது!
 ரமணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com