சூரியனின் சக்தியைத் தாங்கும் பரம்பை மரம்!

நான் பரம்பை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அகேசியா பெருஜினியா என்பதாகும்.
சூரியனின் சக்தியைத் தாங்கும் பரம்பை மரம்!

மரங்களின் வரங்கள்!
குழந்தைகளே நலமா?
நான் பரம்பை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அகேசியா பெருஜினியா என்பதாகும். நான் அகேசியா குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளருவேன். நான் ஒரு வகையில் கொக்கி போன்ற முள்ளையும், மற்றொன்றில் நீளமாக முள்ளையும் கொண்டிருப்பேன். என் பூக்கள் மஞ்சள் நிறத்திலிருக்கும். என் மரத்தின் பிசின், பட்டை, முட்கள், தண்டு, இலைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. 
நான் சூரியனிடமிருந்து நல்ல கதிர்வீச்சுகளையும், மின்காந்த சக்தியையும் உறிஞ்சி என் உடலுக்குள் சேமித்து வைத்துக் கொள்வேன். நீங்கள் அரை மணி நேரம் என் நிழலின் கீழ் அமர்ந்தால் புதிய புத்துணர்ச்சியை உணர்வீர்கள். காரணம், மின்காந்த அலைகள் மருந்தாக மாறி உங்கள் உடலுக்குள் சக்தியை ஏற்படுத்துகிறது. 
என் மரத்தின் பட்டையிலிருந்து கஷாயம் செய்யலாம். இதை சர்க்கரை நோயாளிகள் அருந்தி வந்தார்களேயானால், அந்நோய் இருந்த இடம் தெரியாது. இது மட்டுமா குழந்தைகளே, சிறுநீர் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும், அதாவது, சிறுநீர் சீராக வெளியேறாமல் போய் விடுதல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தோல் நோய்கள், தொற்றுப் பாதிப்புகள் ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க இந்த கஷாயத்தைப் பயன்படுத்துகிறார்கள். 
உங்களுக்கு வாய் துர்நாற்றம், இருமல், வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வயிறு புடைச்சல் இருக்கிறதா! கவலைப்படாதீர்கள் என் மரத்தின் தண்டுப் பகுதியைக் கஷாயமிட்டு குடிங்க, இவை இருந்த இடம் தெரியாது. என் இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, சிறு சூட்டளவில் குடித்தால் நாள்பட்ட புண்கள், சீழ்க்கட்டிகள் விரைவாக ஆறிவிடும். இலைகளை காய வைத்து தூளாக்கியும் சாப்பிடலாம். இது கல்லீரலின் செயலாக்கத்தை அதிகரிக்கும். 
சீனர்கள் என் தண்டு மற்றும் முட்களை மருந்தாக பயன்படுத்தறாங்க. தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், நடுக்கம், தசைப்பிடிப்பு, தலைவலி, தலைசுற்றல், அதிக இரத்தக்கொதிப்பு நோய்களுக்கு என்னை பெருமளவில் பயன்படுத்தி நலம் பெறுகிறார்கள். 
குழந்தைகளே, உங்களுக்கு நான் ஒரு அரிய செய்தியைச் சொல்லட்டுமா? கேளுங்க, நம்ம இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஊரின் உண்மையானப் பெயர் பரம்பைக்குடி. ஏன்னா அங்கு நான் நிறைந்து, அடர்ந்து, வளர்ந்து காணப்பட்டதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. இதை நான் சொல்லல, பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, 1846-ஆம் ஆண்டு சேதுபதி இராணி பர்வதவர்த்தினி நாச்சியார் காலத்து கல்வெட்டில், பரமக்குடி, பரம்பைக்குடி என பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இது பரம்பை மரம் அடர்ந்த ஊர் என்று பொருள்படுகிறது. இப்போதும் இந்த ஊரில் அதிகமாக நானிருக்கிறேன் குழந்தைகளே. எவ்வாறு நாளடைவில், பரம்பைக்குடி, பரமக்குடியமாக மாறியது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதல்லவா?
என்னை வேலியோரமாக வளர்த்து வந்தால் 2, 3 ஆண்டுகளில் அரணாக உருவெடுத்து நிற்பேன். நான் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கருவிகளின் கைபிடிகள் தயாரிக்கவும் பெரிதும் உதவறேன். என் ராசி கும்பம். என்னை அலங்கார மரமாகவும் வளர்க்கலாம். கண்ணைக் காப்பது இமைகள், ஆனால், மண்ணைக் காப்பது மரங்கள், மரங்கள் இயற்கையின் ஏ,சி. அதை இழந்து விடலாமா என நீ யோசி. மிக்க நன்றி. குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)
-- பா. இராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com