Enable Javscript for better performance
பொய் சொல்லக்கூடாது- Dinamani

சுடச்சுட

  

  பொய் சொல்லக்கூடாது

  By DIN  |   Published on : 23rd May 2020 03:52 PM  |   அ+அ அ-   |    |  

  sm6

  குரங்குக் குட்டி ரங்கு மிகவும் புத்திசாலி. ஆனால், எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் கெட்டப் பழக்கம் அதனிடம் இருந்தது. காட்டில் இருக்கும் எந்த மிருகமும் அதன் பேச்சை நம்பாது. இந்தப் பழக்கத்தை விட்டுவிடு என்று அம்மா, அப்பா சொல்லியும் அது கேட்கவில்லை. ரங்குவின் ஆசிரியர் எச்சரிக்கையையும் அலட்சியம் செய்தது.
   ஒரு நாள் ரங்குவின் சித்தப்பா ஷெனாய் அன்று வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டு நாள்கள் தங்கப் போவதாகவும் கூறினார். ரங்குவுக்கு தன் சித்தப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ரங்குவுக்கு நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார். அவரோடு ரங்கு நிறைய நேரம் மகிழ்ச்சியாக விளையாடிப் பொழுதைக் கழிப்பான். அன்றும் வழக்கம் போலவே ரங்குவுக்குப் பிடித்த திண்பண்டங்களை அவர் வாங்கி வந்திருந்தார்.
   மறுநாள் காலை எழுந்ததுமே ரங்கு, "அம்மா எனக்கு உடம்பு சரியில்லை. பயங்கர காய்ச்சல்... நான் ஓய்வு எடுக்கணும்...'' என்றது.
   இதைக் கேட்ட சித்தப்பா அது பொய்தான் சொல்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். ஏற்கெனவே அவரிடம், ரங்கு நிறைய பொய் சொல்லத் தொடங்கியிருக்கிறான் என்பதை ரங்குவின் அம்மா அவரிடம் சொல்லியிருக்கிறார்.
   ரங்கு "உடம்பு சரியில்லை' என்றதும் "சரி ஓய்வெடு' என்று அம்மா கூறிவிட்டார். ரங்குவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
   சிறிது நேரத்துக்குப் பிறகு "ரங்கு கண்ணா... நான் சினிமாவுக்குப் போகப் போகிறேன்... நீயும் வரியா?'' என்று சித்தப்பா கேட்டவுடன் இரண்டே நிமிடத்தில் ரங்கு சித்தப்பாவுடன் சினிமா பார்க்கத் தயாராகிவிட்டான்.
   ரங்குவை அழைத்துச் சென்ற சித்தப்பா சினிமா தியேட்டருக்குப் போகாமல் தன் நண்பரும், டாக்டருமான கரடி ஆலீவ் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தார்.
   இதைப் பார்த்து அதிர்ந்தது ரங்கு. அந்தக் காட்டிலேயே மிகவும் பிரபலமான டாக்டர் கரடி ஆலீவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுபோன்ற கெட்ட பழக்கம் உள்ளவர்களை எல்லாம் உளவியல் முறையில் அவர் உடனே குணப்படுத்தி விடுவார்.
   "சித்தப்பா.... ஏன் என்னை இங்கே கூட்டி வந்தீர்கள்? நாம் சினிமாவுக்குத்தானே போக வேண்டும்?'' என்றது ரங்கு.
   "உனக்குத்தான் உடம்பு சரியில்லையே... அதனால் முதலில் நாம் இந்த டாக்டரைப் பார்த்துவிட்டு, பிறகு சினிமாவுக்குப் போகலாம்... சரியா...?'' என்றார் சித்தப்பா.
   ரங்கு உடனே, "சித்தப்பா நீங்க ரொம்ப பொய் சொல்வீங்களா? சினிமாவுக்கு என்று பொய் சொல்லி இங்கே கூட்டி வந்துவிட்டீர்களே...?'' என்று கோபப்பட்டது.
   அதற்குள் டாக்டர் ஆலீவ் அறைக்குள் நுழைத்தார். சித்தப்பாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தன் கழுத்தில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து ரங்குவின் மார்பு, முதுகுப் பகுதியில் வைத்துப் பரிசோதனை செய்துவிட்டு, "ரங்குவுக்குக் கடுமையான காய்ச்சல் கண்டிருக்கிறது.... உடனடியாக ஊசி போட வேண்டும். ஒரு வாரத்துக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் தரக்கூடாது. இந்த ஆஸ்பத்திரியில் உடனே அட்மிட் செய்தால்தான் குணப்படுத்த முடியும்'' என்றார்.
   "சித்தப்பா ஊரிலிருந்து சாப்பிட என்னென்னவோ வாங்கி வந்திருக்கிறாரே... அதையெல்லாம் சாப்பிடாமல் எப்படி இருப்பது?... இந்த டாக்டர் வேறு ஊசி போட வேண்டும் என்கிறாரே... ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டுமாமே...! சாப்பாடு, தண்ணீர்கூடத் தரமாட்டார்களாமே...' - இதையெல்லாம் நினைக்க நினைக்க ரங்குவுக்கு அழுகையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. உடனே,
   ""டாக்டர் எனக்குக் காய்ச்சல் இல்லை... இன்று பள்ளிக்குப் செல்லாமல் இருப்பதற்காகத்தான் நான் இப்படியொரு பொய்யைச் சொன்னேன்'' என்று அழுதது.
   குட்டிக் குரங்கு ரங்கு சொன்னதைக் கேட்டு அங்கிருந்த எல்லோரும் சிரித்தார்கள். டாக்டர் கரடி ஆலீவ்... ரங்குவைப் பார்த்து, "நீ பொய் சொல்கிறாய் என்பது எனக்குத் தெரியும்... உன் வாயாலேயே அதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும் என்றுதான் அப்படி சொன்னேன்...'' என்றார்.
   அப்போது ரங்குவின் சித்தப்பா, "ரங்குக் கண்ணா... நமக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் யாரிடமும் எப்போதும் பொய் சொல்லவே கூடாது... புரிந்ததா? நம் உடம்பில் உள்ள அழுக்கை தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்கிறோமில்லையா... அதைப் போல நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை "வாய்மை' என்கிற "உண்மை'தான் சுத்தம் செய்யும்... இதை வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே... அதுமட்டுமா? பலரும் புகழ நீ சான்றோராக ஆக வேண்டுமென்றால் "பொய்யா (பொய்யாமை) என்ற விளக்கே விளக்கு' என்றும் சொல்லியிருக்கிறாரே...' என்றார்.
   "மன்னிச்சிடுங்க சித்தப்பா... இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்...'' என்றது ரங்கு.
   உடனே, டாக்டர் ஆலீவ் தன் கைப் பையில் வைத்திருந்த சில சாக்லேட்டுகளை எடுத்து ரங்குவுக்குக் கொடுத்துவிட்டு சிரித்தார்.
   குட்டிக் குரங்கு ரங்கு... தன் தவறை நினைத்து வருந்தியது. அம்மா-அப்பா, ஆசிரியர் மட்டுமல்ல... இனி எவரிடமும் பொய் சொல்லக்
   கூடாது என்கிற பாடத்தையும் கற்றுக் கொண்டது. தன்னை எல்லோரும் புகழும்படியாக ரங்கு தன் நடத்தையை மாற்றிக்கொண்டது.
   -இடைமருதூர் கி.மஞ்சுளா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai