Enable Javscript for better performance
மரங்களின் வரங்கள்! பொந்தன் புளி மரம்- Dinamani

சுடச்சுட

  

   மரங்களின் வரங்கள்! பொந்தன் புளி மரம்

  By DIN  |   Published on : 23rd May 2020 04:03 PM  |   அ+அ அ-   |    |  

  sm11

  அதிசய மரம்
   குழந்தைகளே நலமா ?
   நான் தான் பொந்தன் புளிமரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் அடன்சோனியா டிஜிடேட்டா என்பதாகும். நான் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஏன் இந்த பெயர் வந்ததுன்னு தெரியுமா குழந்தைகளே, அரபு மொழியில் வழங்கப்படும் பெயரையும், ஆப்பிரிக்கா வறண்ட நிலங்களில் என்னை முதன்முதலா கண்டுப்பிடிச்ச பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் (1727-1806) என்னும் தாவரவியலாளர் பெயரையும், இணைத்து என்னை இப்படி அழைக்கிறாங்க. இந்த அறிஞர் தான் செனகல் நாட்டிலுள்ள சோர் என்ற தீவில் 1749-ஆம் ஆண்டு என்னை கண்டுபிடிச்சாரு. என் இலைகளை கீரையாக சமைத்து உண்ணலாம், கனிகளிலிருந்து பானம் தயாரிக்கலாம் என்று இவர் தான் உலகுக்கு எடுத்துரைத்தார். அவர் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது என் கனிகளிலிருந்து பானம் தயாரித்து குடித்தால் நோய் ஏதும் வராது என அங்குள்ள மக்களுக்கு சொல்லி, என் மகத்துவத்தை மக்களிடையே பரப்பினார். நான் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவன். வறண்டு காணப்படும் சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கா பகுதிகளில் உள்ள சவானாவில் நான் அதிகம் இருக்கேன்.
   எனக்கு மங்கி பிரட் ட்ரீ, பேவோபாப், ஆனைப்புளி, பெருக்கமரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் 5000 ஆண்டுகள் கூட உயிர் வாழ்வேன். என் கிளைகள் மற்றும் இலைகள் உங்களின் ஐவிரல் அமைப்புடன் கையைப் போன்று இருக்கும். என் கிளையின் நுனியில் 15 செ.மீ அகலத்தில் வெண்மை நிறப்பூக்கள் பூக்கும். நீண்ட காம்புகளில் காய்கள் உருவாகும். பழுப்பு நிறத்தில் உள்ள பொந்தன் புளி பழங்கள், நீண்ட நாட்கள் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். என் காயின் ஓட்டை குடுவையாக பயன்படுத்தலாம். என் பட்டைக்கு உட்புறத்தில் உள்ள நாரை கயிறு திரிக்க பயன்படுகிறது.
   என்னை ஒரு அதிசயமுன்னு சொல்வாங்க. சட்டென்னு என்னை பாத்தீங்கனா மரத்தை பிடுங்கி யாரோ தலைகீழா நட்டது போல இருக்கும். பெரிய உடம்போடு மெல்லிய கால்களுடன் நிற்கும் இராட்சசன் போல நானிருப்பேன். இராட்சசன் ஒருத்தன் என்னைப் பிடுங்கி தலைகீழாக நட்டுவிட்டதால் தான், இலையுதிர் காலத்தில் நான் தலைகீழாக நிற்கிறேன் என்று அரேபியக் கதையில் தெரிவித்துள்ளார்கள்.
   என் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகள் என்றால் குதிரைகளுக்கு மிகவும் பிரியம். அதனால் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரேபியர்கள் மூலம் நம்ம தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு நான் வந்து சேர்ந்தேன். என் பழங்களிலிருந்து ஜாம், ஜெல்லி, ஜுஸ், ஏன் உங்களுக்கு பிடிச்ச ஐஸ் கீரிம் கூட தயாரிக்கலாம்.
   என் இலைகளை கீரையாக சமைத்து உண்ணலாம், அதில் இல்லாத சத்தே இல்லை. என் மரத்திலிருந்து நாரும் எடுக்கலாம், அவ்வளவு ஸ்ட்டிராங்கா இருக்கும். காகிதமும் தயாரிக்கலாம். என் காயின் சதைப்பற்றை உண்ணலாம், இதனால் வயிறு சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளும் தீரும், சொறி, சிறங்கு அண்டாது. மீன்பிடி வலைகளுக்கு மிதவையாகவும் என் காயை குஜராத் மீனவர்கள் பயன்படுத்தறாங்க. என் மரத்துண்டு கடற்பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். என் மரத்தை கட்டுமரம் செய்யவும் பயன்படுத்தலாம்.
   கிராம மக்கள் என்னை தண்ணீர் தொட்டியாகவும் பயன்படுத்தறாங்க. என் மையப்பகுதி சில ஆண்டுகளில் உளுத்துப் போய் உதிர்ந்து தண்ணீர் தொட்டி போலாயிடும். மழைக் காலத்தில் பெய்யும் மழை நீர் இந்த பெரிய மரத் தொட்டிக்குள் சேகரமாகும். அதிகபட்சமா ஒரு மரத்தொட்டிக்குள் 1,20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமிக்கலாம். ஆப்பிரிக்காவின் வறண்ட பாலைவனங்களில், தாகமுள்ள பறவைகள் கோடைக்காலத்தில் என்னை தான் தேடி வருவாங்க. இந்தப் பொந்தில் தானியங்களையும் கொட்டி வைக்கலாம், கெடவே கெடாது. அதனால் தான் பேவோபாப் மரங்கள், ஆயத்த தானிய சேமிப்பு தொம்பைகள்ன்னு சொல்றாங்க. இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலும், சென்னை, வேளாண் தோட்டக்கலை கழகத்திலும் என்னைக் காணலாம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
   (வளருவேன்)
   -- பா. இராதாகிருஷ்ணன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai