மாய திரவம் !

ஜூலோக் கிரகத்தில் அஸ்தமனமாகிவிட்டது! அதிவேக விண்கலம் ஜிப்ரான் அங்கு இறங்குகிறது.  
மாய திரவம் !

பிஞ்சுக்கை ஓவியத்திற்கு ஒரு சின்னஞ்சிறு கதை
ஜூலோக் கிரகத்தில் அஸ்தமனமாகிவிட்டது! அதிவேக விண்கலம் ஜிப்ரான் அங்கு இறங்குகிறது. 
"தீக்ஷô!.... மாயக்குப்பி எங்கே?'' வில்டா கேட்டான்!
"ஐயய்யோ!.... அதை நான் பூமியிலேயே விட்டுட்டேன்!''
"பைத்தியமே!.... பொறுப்பில்லையா உனக்கு?.... இப்போ என்ன செய்யறது?.... சுத்தமாக இங்கே வெளிச்சமே இல்லை!.... நமது விண்கலம் அதி வேகமாக இருந்தாலும் திரும்ப பூமிக்குப் போய் எடுத்து வர ஒரு வாரம் ஆகும்!'' 
"விடியும் வரை காத்திருக்கலாம்!'' 
"திரையில் வந்த தகவல்படி இங்கு விடிவதற்கு இன்னும் நாற்பத்தி ஏழு நாட்களாகும்!..... அந்த மாயக்குப்பியிலிருக்கும் திரவத்தை தடவிக்கொண்டால் இங்கே இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் அள்ளலாம்!..... தண்ணீர் ஒளி தரும்!.... உணவைத் தேடிக்கொண்டு சமாளிக்கலாம்!.... பசி பிராணன் போகிறது!....தண்ணீரைத் தேடவே வெளிச்சம் இல்லை! இந்த கிரகத்தில் உணவு கிடைக்கும்னுதான் இங்கே இறங்கினேன்!''
பூமி!
மாலை நேரம். அன்பரசியும், அழகம்மாவும் தன் வீட்டிற்கு அருகே இருக்கும் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். இருட்டத் தொடங்குகிறது. அன்பரசியின் கண்களில் ஒரு மிகவும் அழகான கண்ணாடிக்குப்பி தென்படுகிறது! உள்ளே பொன்னிறத்தில் ஒரு திரவம்! அழகம்மாவும் அன்பரசியும் ஆச்சரியமாக அதைப் பார்க்கிறார்கள். அன்பரசி மூடியைத் திறக்கிறாள்! அற்புதமான வாசனை! கும்மென்று மனதை மயக்கும் வாசனை! அழகம்மாவுக்கும் அதைச் சிறிது கையில் ஊற்றுகிறாள். அவள் முகர்ந்து பார்த்து மகிழ்கிறாள். 
ஜூலோக் கிரகம்!
"யாரேனும் அந்த மாயக்குப்பியைத் திறந்து அதிலுள்ள திரவத்தைக் கையில் தடவிக்கொண்டு தண்ணீரை அள்ளினால் அந்த ஒளி இங்கு வந்து சேரும்! அதற்கான சமிக்ஞை நம் விண்கலத்தில் இருக்கிறது! யார் அதைச் செய்யப் போகிறார்கள்?'' இருட்டில் வில்டாவின் குரல்.
"கடவுளை வேண்டிக்கொள்வோம்!.... ஏதாவது நடக்கும்!'' என்றாள் தீக்ஷô. 
பூமி!
"எனக்கு தாகமா இருக்கு!'' என்றாள் அன்பரசி.
"ரொம்ப இருட்டாயிடுச்சு!..... வா!.... வீட்டுக்குப்போய் தண்ணி குடிச்சுக்கலாம்!...'' என்றாள் அழகம்மா.
"ஏன்? ஏரித்தண்ணீர் சுத்தமாத்தானே இருக்கு!.... கொஞ்சம் இரு!.... நான் போய் ஒரு கை அள்ளிக் குடிச்சுட்டு வரேன்!'' என்று கூறியவள். ஏரிக்குச் சென்று தண்ணீரை அள்ளினாள்! 

ஆச்சரியம்!.... தண்ணீர் ஒளிர்ந்தது! கையில் ஒளி
மயம்! அன்பரசிக்கு பயமாகிவிட்டது! கையை உதறினாள். ஒளி மேல்நோக்கி மிதக்க ஆரம்பித்து விட்டது!.... அவளுக்கு துளிக்கூட சுடவில்லை! அழகிய ஒளி! மேலும் அந்த ஒளி வானில் பறக்க ஆரம்பித்தது! மறுபடியும் தண்ணீரை அள்ள, அதுவும் ஒரு ஒளிப்பிழம்பாக, சுடாத ஒளியாக வானில் பறந்து பின் வேகமெடுத்தது! 
"உனக்கு சுடவில்லையா?''அழகம்மை அலறினாள்! 
"ம்ஹூம்!....'' என்று கூறி மறுபடியும் தண்ணீரை அள்ள அதுவும் ஒளியாக மாறி வானில் மிதந்து பின் வேகமெடுத்தது. இப்போது அழகம்மையும் சேர்ந்துகொண்டாள்! வானில் நூற்றுக்கணக்கான ஒளிப்பிழம்புகள் குட்டிக்குட்டி நட்சத்திரங்காய் மிதந்து பின் வேகமெடுத்தன! 
ஜூலோக் கிரகம்!
"ஆச்சரியமாக இருக்கிறது தீக்ஷô!.... ஒளி நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது!..... திரையில் தகவல் வந்துவிட்டது! இன்னும் ஒரு மணிநேரத்தில் ஒளிப் பிழம்புகள் வந்துவிடும்!..... யார் செய்த புண்ணியமோ!'' என்றான் சந்தோஷமாய் வில்டா.
"நான்தான் சொன்னேனே!.... கடவுள் ஏதாவது செய்வார் என்று! யாரோ கையில் திரவத்தைத் தடவிக்கொண்டு நீரை அள்ளியிருக்கிறார்கள். ஒளி பிறந்தவுடன் சமிக்ஞை கிடைத்துவிட்டது! அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்.....'' என்றாள் தீக்ஷô.
வேகமெடுத்த ஒளிப்பிழம்புகள் அவர்களை நோக்கி வருவதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள். அங்கிருந்த செடி கொடிகளில் விளைந்த பழங்களை எடுத்துக்கொள்கிறார்கள். பசியாறுகிறார்கள். சிறிது ஓய்வுக்குப் பிறகு அவர்களது சொந்தக் கிரகமான "லாஷ்டம்' முக்குத் திரும்புகிறார்கள்.
"நிச்சயம் பூமிக்குச் சென்று அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்!'' என்றாள் தீக்ஷô மறுபடியும்! 
ரமணி
படம் வரைந்தவர் : எஸ் . மீனாக்ஷி தீக்ஷித், 
சிலிகான் சிடி அகாடமி ஆஃப் செகண்டரி எஜுகேஷன், பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com