மோதிரத்தைக் காணோம்!

ஒருநாள் வான வீதியிலேஉரத்த குரலில் சப்தமிட்டு கருத்த மேகம் கதறியதாம்
மோதிரத்தைக் காணோம்!


ஒருநாள் வான வீதியிலே
உரத்த குரலில் சப்தமிட்டு 
கருத்த மேகம் கதறியதாம்
கலங்கிப் போனது மேலுலகம்!
""எடுத்தது யார் என் மோதிரத்தை?...
.... ஏழு வண்ண நிறமிருக்கும்!.... 
தொடுக்கும் வில்லைப் போல அது 
தொடுமே விண்ணை மண்ணையுமே!''

என்று அதிரக் கேட்டபடி 
இங்கும் அங்கும் தேடியதாம்!
குன்றில் மோதி அரற்றியதாம்
குமைந்து குமைந்து கதறியதாம்!
பார்த்த பறவைக் கூட்டங்கள் 
பவ்யமாகத் தமக்குள்ளே 
""யாரை உலகில் நம்புவது?...
...எல்லாம்  திருடர்!'' என்றனவாம்!
மேகம் கோபம் கொப்பளிக்க, 
மேற்கே பார்த்து அழுதபடி, 
""ஆகா சூரிய பகவானே,
அடியேன் மோதிரம் யார் எடுத்தார்?....

....அண்டங் காகமே கை காட்டு!....
..... அணிந்துள்ளாயோ மோதிரத்தை?
...சின்னஞ் சிறிய சிட்டே நீ 
சிகையில் சூடி உள்ளாயோ?

ஆடும் மயிலே தோகைக்குள் 
அதனை மறைத்து உள்ளாயோ?
காணும்படி நீ தோகைகளின் 
கற்றை விரித்துக் காட்டு! '' என்று 
கூடி நோக்கித் திரும்புகின்ற 
கூட்டப் பறநை யாவினையும் 
ஓடி நிறுத்தித் தேடியதை 
உன்னத சூரியன் கண்டதுவாம்!

கரிய மேகம் தனை அழைத்து 
கடுத்த குரலில் அதனிடத்து,
""உரிய மோதிர  அடையாளம்
உரைப்பாய்!'' என்றே மிரட்டியதும்,

""ஏழு வண்ண நிறமிருக்கும்,
வானும் மண்ணும் தொட்டிருக்கும் 
கிழக்கில் இருந்தது வெகுநேரம் 
எடுத்தவர் அறியேன்!'' என்றவுடன்,

""அற்பப் பயலே அது ஒன்றும் 
உந்தன் மோதிரம்  இல்லையடா!
சிற்பம் போல என்னுருவை 
இயற்கை செதுக்கிய பிம்பமடா!

வான வில்லை உன்னணியாய் 
வரித்துக் கொண்டு பொய் சொன்னாய்!
கானப் பறவைகள் யாவினையும் 
"கள்வர்' என்று பழி சொன்னாய்!...

...போ! போ! எதிரில் நிற்காதே!
பொய்யற்கிங்கே இடமில்லை!
எனறு துரத்த, கருமேகம் 
எட்டிக் குதித்து ஓடியதாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com