மரங்களின் வரங்கள்!: மூட்டுவnலிக்கு எதிரி  - இருளி மரம்

நான் தான் இருளி மரம்  பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் பெர்சியா மக்ரந்தா என்பதாகும்.   நான் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: மூட்டுவnலிக்கு எதிரி  - இருளி மரம்

குழந்தைகளே நலமா,

நான் தான் இருளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் பெர்சியா மக்ரந்தா என்பதாகும். நான் லாரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. என்னை நீங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், அதிகமாகக் காணலாம். நான் மஹாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும் பரவலாகக் காணப்படுகிறேன். குறிப்பாக, பசுமை மாறா காடுகளில் நிறைந்து இருக்கிறேன். தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நீங்கள் என்னைக் காணலாம்.

நம் தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் நான் பரவியுள்ளேன். நானும் பல மருத்துவ பலன்களைக் கொண்டிருக்கிறேன். பழங்குடி மக்கள் காலங்காலமாக என்னை மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நான் நூறடி உயரம் வரை கூட வளருவேன். என் இலைகள் தனித் தனியாக இருக்கும். என் பூக்கள் கிளை நுனிகளில் பூங்கொத்துகளாகப் பூக்கும். என் பழங்கள் பசுமையாகி, கனிந்த பின் கருப்பு நிறமாக மாறும். என் வேர்களிலும், பழங்களிலும் தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

குழந்தைகளே, என் வேரை நன்கு சுத்தப்படுத்தி, காய வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மூட்டு வீக்கம் மற்றும் தசைப் பிடிப்பு பட்டென்று குணமாகிவிடும். என் பழங்களுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, கை, கால் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கு.

என் குச்சிகளை அகர்பத்திகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளே, உங்களுக்கு எங்காவது புண் இருக்கா? கவலைப்படாதீங்க, என் இலைகளை அரைத்து அதன் மீது தடவுங்கள், அந்தப் புண் இருந்த இடம் தெரியாது. என் பழங்களிலிருந்து ஒரு வகை எண்ணெய் தயாரிக்கிறாங்க. இது அழகு சாதனப் பொருள்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால், முகம் பொலிவுறும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அருள்மிகு கன்னிக் கோவிலில் நான் ஏழு மூலிகை மரங்களில் ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கிறேன். மற்ற மூலிகை மரங்கள் அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், வேம்பு மற்றும் கார்த்திகம்.

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியும் அல்லவா, பெரும் புயலுக்கும் பிடி கொடுக்காமல் பூமியைப் பிடித்துக் கொண்டு மண்ணரிப்பை தடுப்பது மரங்கள் தான் என்று. மரத்தின் வேர்கள் மண்ணை இறுகப் பற்றிக் கொண்டு காற்றினாலும், மழை நீரினாலும் ஏற்படும் மண்ணரிப்பை தன் பெரும் பலத்தை பிரயோகித்து காக்கிறது. புவி வெப்பமயமாவதற்கு காரணம் கரியமில வாயு தான். அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு, உயிரினங்களைக் காக்க பூமியை மிதமான வெப்ப சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறோம். அதுமட்டுமல்ல, நிலத்தடி நீர்மட்டத்தை மரங்கள் உயர்த்துகின்றன. ஆழிப்பேரலை போன்ற கடல்பேரலைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு அரணாக மரங்கள் தான் விளங்குகின்றன.

பறவைகளுக்கு வாழ்விடங்களாக மரங்கள் தானே உள்ளன. எனவே, அனைத்து உயிரினங்களுக்கும் நாங்க ஆதரவு தந்து புகலிடம் அளிக்கிறோம். பருவ நிலை மாற்றம், புவிவெப்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்குக் காரணம் மரங்களை அழிப்பது தான் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். காடுகளிலுள்ள மரங்களை அழிக்கும் போது அங்கு வாழும் ஏனைய உயிரினங்கள் அழியும். இதனால், இயற்கை சமன்பாடு குறையும். அதனால், பாதிக்கப்படப் போவது நீங்கள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் குழந்தைகளே. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com