மரங்களின் வரங்கள்!: நாவில் நீர் ஊற வைக்கும் - கரம்போலா  மரம்

நான் தான் கரம்போலா பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அவர்ஹோ கரம்போலா என்பதாகும்.   நான் அக்சாலிடாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: நாவில் நீர் ஊற வைக்கும் - கரம்போலா  மரம்


குழந்தைகளே  நலமா, 

நான் தான் கரம்போலா பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் அவர்ஹோ கரம்போலா என்பதாகும்.   நான் அக்சாலிடாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை அழகுத் தமிழில் தாமரத்தம் பழ மரமுன்னு சொல்வாங்க.  என்னை ஆங்கிலத்தில் ஸ்டார் ஃபுரூட் மரமுன்னு அன்பா அழைக்கிறாங்க. என் தாயகம் இந்தோனேஷியா.  நான் குளிர்ந்த மலைப் பகுதிகளில் அதிகக் கிளைகளுடன் பசுமையா, செழிப்பா வளருவேன். நான் 30 அடி உயரம் வரை வளருவேன். மியான்மர், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடு
களில் நான் அதிகமாக வளருகிறேன். நம் தமிழ்நாட்டில் குற்றாலம், கொடைக்கானல், உதகமண்டலம், மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரல் ஆகிய பகுதிகளில் என்னை நீங்கள் காணலாம்.  என் பூக்கள் கருநீலத்தில் கொத்தாக இருக்கும்.  என் காய் நீண்ட வடிவம் கொண்டு பசுமையாக இருக்கும். 

குழந்தைகளே, உங்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் என் மரத்திலுள்ள பழங்கள் தான் கொண்டிருக்கு. என் பழம் பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடன், பின் நன்கு பழுத்து ஆரஞ்சு நிறத்தில் வழவழப்பாக இருக்கும்.  என் பழத்தை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வெட்டினால் பழத் துண்டு ஐந்து விளிம்புகளில் நட்சத்திர வடிவத்தில் இருப்பதால் என்னை நட்சத்திர பழ மரமுன்னு சொல்வாங்க.  என் பழம் இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன் இருப்பதால் நீங்க விரும்பி உண்பீங்க. 

குழந்தைகளே, என் பழத்தில்  ஆக்சாலிக் அமிலம், வைட்டமின் ஏ, சி, இ, (தயாமின்), பி2 (ரிபோஃளோவின்) பி3 (நியாசின்) பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலெட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, எரிசக்தி ஆகிய எண்ணற்ற சத்துகளும் இருக்கு. என் பழத்தில் நார்ச் சத்தும், நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால், உங்களுக்கு செரிமானப் பிரச்னையே இருக்காது, உடல் எடையும் குறையும், மகிழ்ச்சியா ?
என் பழத்திலுள்ள தாது உப்புகள், உங்களின் நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை  சீராக்கி உங்களை புத்துணச்சியுடன் இருக்க உதவுது.  உங்களுக்குத் தெரியும் அல்லவா குழந்தைகளே, சளி, இருமல், ஜலதோஷம், வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று போன்றவை உங்கள் அண்டாமல் பாதுகாக்கணு முன்னா வைட்டமின் சி தேவைன்னு. இந்தச் சத்து என் பழத்தில்  நிறையவே இருப்பதால் அவை என்னை கண்டால் ஓடிடும். அது மட்டுமா, சொன்னா ஆச்சரியப்படுவீங்க, என் பழத்திலுள்ள வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிஜென்ட்கள், சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் நோய்கள், உடல் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் தாக்குதல்களிலிருந்தும் உங்களைக் காக்கும். 

என் பழத்திலுள்ள தாது உப்புகள்  உங்கள் இரத்தத்தை சீராக்கி, இதய நோய் வரமால் பாதுகாக்கும்.  அது மட்டுமா புற்று நோய்க்கு அருமருந்து என் பழம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.  எப்படின்னா, உடலின் வளர்சிதை மாற்றத்தின் போது, ஏற்படும் ப்ரீரேடிக்கல்கள் உங்கள் திசுக்களிலுள்ள டிஎன்ஏக்களை சிதைவுற செய்து, உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. என்னிடம் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் அதிகமா இருப்பதால், அது ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடுத்து, நல்ல திசுக்களில் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும். அதனால், புற்றுநோய் என் பழத்தைக் கண்டால் ஓடி விடும். என் பழம் உங்களுக்கு சருமப் பாதுகாப்பை அளித்து, முகத்தை மாசு, மருவின்றி பொலிவுடன் வைக்கவும் உதவும்.  பிரசவித்த தாய்மார்களுக்கு என் பழம் ஒரு வரபிரசாதமுன்னு சொன்னால் அது மிகையில்லை குழந்தைகளே. என் பழத்தை அப்படியே அல்லது சாறாகவும், சாலட்டுகளாவும் உண்டால், நீங்க கேட்டுக்கிட்டே இருப்பீங்க. ஜாம்கள், இனிப்புகள் செய்யவும் என் பழத்தை பயன்படுத்துறாங்க.  குழந்தைகளே, என்னைக் கண்டால் பூச்சிகள் அஞ்சி ஓடும். எனவே, என்னை பூச்சிகள் தாக்காது.  ஆனால், ஒரு எச்சரிக்கை, என்னிடம் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் இருப்பதால் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் என் பழத்தினை சாப்பிட வேண்டாம்.  மரம் வளர்த்து, நோய்களை விரட்டுவோம், மழையை வரவேற்போம்.  நன்றி, குழந்தைகளே, மீண்டும். சந்திப்போம். 

(வளருவேன்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com