மரங்களின் வரங்கள்!: சாக்லேட்டுகளை அள்ளித் தருவேன் - கோகோ மரம்

நான் தான் கோகோ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் தியோபிரமா கோகா என்பதாகும். நான் ஸ்டெல்குலியேஸி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: சாக்லேட்டுகளை அள்ளித் தருவேன் - கோகோ மரம்


குழந்தைகளே நலமா,
நான் தான் கோகோ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் தியோபிரமா கோகா என்பதாகும். நான் ஸ்டெல்குலியேஸி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் தென் அமெரிக்க நாட்டின் ஆற்றுப்படுகை. குழந்தைகளே, உங்களுக்கு சாக்லேட் என்றால் ரொம்ப பிரியம் தானே. நீங்க விரும்பி உண்ணும் அந்தச் சாக்லேட் என் பழத்திலிருந்து எடுக்கப்படும் விதைகள் மூலம் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? என் பழ விதைகள் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றன. என் பழங்களை கோகோ பீன்ஸ் என்றும் சொல்வாங்க. இதில் வைட்டமின்கள், ஏ, பி, ஈ, ஃபோலிக் அமிலம் உள்ளன. கோகோ பீன்ஸ்களுக்கு வயது முதிர்வதை தடுக்கும் ஆற்றலிருக்கு.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது குழந்தைகளே சுமார் கி.மு.2000-இல் நான் வளர்ந்து மக்களுக்கு பலன்கள் பல கொடுத்திருக்கிறேன் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. கேட்ஸால் கோயாட்டெல் எனும் கடவுள் சொர்க்கத்திலிருந்து என்னை பூலோகத்திற்கு அனுப்பியதாக மாயர்கள் நம்பினார்கள். அதனால், கோகோ, கடவுள் உணவு என்றும் சொல்லப்படுகிறது. மாயர்கள் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, மாயர்கள் சிறந்த நாகரிக அமைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். மாயா நாகரிகம் என்பது பண்டைக் கால மத்திய அமெரிக்க நாகரிகமாகும். இவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி கொலம்பசுக்கு முந்தைய அமெரிக்காவில் முழு வளர்ச்சிப் பெற்ற ஒரே எழுத்து மொழியைப் பேசுபவர்களாக சிறந்து விளங்கினர்.
நான், சாக்லேட், உணவுப் பொருள்கள், சுவை மிகுந்த பானங்கள் தயாரிக்க பெரிதும் உதவுகிறேன். என் விதைகளை நன்கு உலர வைத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உங்களுக்குப் புத்துணர்ச்சி கூடும், வலிமை அதிகமாகும், இதயத்தைக் குளிர்வித்து, மனநிலையை மென்மையாக்கி, சோர்வைப் போக்கும். நான் கிரையல்லோ மற்றும் ஃபாரஸ்டிரோ எனும் இரண்டு ரகத்தில் இருக்கேன். இவற்றில் கிரையல்லோ சிவப்பு நிற காய்களையும், ஃபாரஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டிருக்கும்.
உதிர்ந்த என் இலைகள் மண்ணுக்கு சிறந்த தழை உரமாகும். என் பூக்கள் கிளைகளில் வளராது, என் உடற் பகுதியில் தான் வளரும். மருத்துவப் பொருள்களில் சுவைகளைக் கூட்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் என் பழத்தை மூலப் பொருளாகவும் பயன்படுத்தறாங்க. கோகோ தூளில் உங்கள் உடலில் ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் கேடசின் மற்றும் எபிகாடெசின் வடிவத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. மேலும், இதில் மக்னீசியம், இரும்பு, துத்தநாகம் உள்ளன. இவை உடல் இயக்க செயல்பாட்டிற்கு அவசியம் தேவை. ஏன்னா, இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி எலும்புகளை வலுப்படுத்தும்.
என் பழத்திலிருந்து வெண்ணெய் தயாரிக்கலாம். இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்டாக விளங்குகிறது. இதை உங்கள் முகத்திலும், கை, கால்களிலும் தடவி வந்தால் உங்கள் மேனி பளப்பளப்பாகும். வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் முகப் பருக்கள், வடு உடனே மறைந்து விடும். என் பழத்திலிருந்து எண்ணெய் தயாரிக்கிறாங்க. இந்த எண்ணெய்யை சிறந்த வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். இதிலுள்ள தியோபிரோமைன், இரத்த ஓட்ட அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுது.
என் பழங்களை உண்டால், உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படாது, இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்த நாளங்கள் வலுப்பெறும் கர்ப்பிணி பெண்கள் கோகோவால் தயாரிக்கப்பட்ட பொருள்களை உண்ணக் கூடாதுன்னு சொல்றாங்க. ஏன் தெரியுமா, இது உடம்பிலிருக்கும் கால்சியத்தை உறிஞ்சிடுமாம். என் பழத்தில் காஃபின் அதிகமாக இருப்பதால் மூன்று வயதிற்கு உட்பட்டவங்க யாரும் உண்ணாதீங்க. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் என்னிடமிருந்து சற்று விலகியே இருக்கனும். நன்றி, குழந்தைகளே மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com