அரங்கம்: இந்தக்கால விறகு வெட்டியும் தேவதையும்!

ஆ... என்ன அழகான காடு! எத்தனை மரங்கள்! ஒவ்வொண்ணா வெட்டி வித்தா நிறைய பணம் கிடைக்குமே! பக்கத்து ஊர்ல இருந்து பஞ்சம் பிழைக்க வந்த எனக்கு, இந்தக் காட்டைக் காட்டிய கடவுளே!
அரங்கம்: இந்தக்கால விறகு வெட்டியும் தேவதையும்!

காட்சி -1 
இடம்: காடு
பாத்திரங்கள்: விறகுவெட்டி, வனதேவதை.

வி. வெட்டி:  (தனக்குத்தானே) ஆ... என்ன அழகான காடு! எத்தனை மரங்கள்! ஒவ்வொண்ணா வெட்டி வித்தா நிறைய பணம் கிடைக்குமே! பக்கத்து ஊர்ல இருந்து பஞ்சம் பிழைக்க வந்த எனக்கு, இந்தக் காட்டைக் காட்டிய கடவுளே! உனக்குக் கோடானுகோடி நன்றி! இதோ... ஆற்றின் ஓரத்தில் இருக்கும் இந்த மரம் எவ்வளவு பெரிதாயிருக்கு! இன்று இதன் கிளைகளை வெட்டுவோம். நாளைக்குப் பெரிய அரத்தோடு வந்து மரத்தையே அறுத்துத் தூக்கி விடுவோம்.

(மரத்தின் மேலேறுகிறான்) 

ஆ... இதென்ன ... இங்கே ஒரு பறவையின் கூடு இருக்கிறதே! அதில் சில குஞ்சுகள்! இதை இப்படியே எடுத்துத் தண்ணியில போட்டுடுவோம். "அதான் வளர்ந்துட்டீங்கள்ல... பறந்துபோக வேண்டியதுதானே! இல்லேன்னா... இப்படித்தான் "போட்டிங்' போக வேண்டியிருக்கும்! ஜாலியா என்ஜாய் பண்ணுங்க!'

(பறவைக் கூட்டைத் தூக்கி ஆற்றுப் பக்கமாகப் போடுகிறான். பின் கிளையை வெட்ட ஆரம்பிக்கிறான். அப்போது கோடாரி கைநழுவி ஆற்றில் விழுகிறது)

வி. வெட்டி: அச்சச்சோ... என் கோடாரி ஆற்றில் விழுந்துடுச்சே! ஆங் ... பழைய கதை ஒண்ணு ஞாபகம் வருது. இதேபோல ஒரு விறகுவெட்டியோட கோடாரி ஆற்றில் விழுந்ததும் அவன் அழுததைப் பார்த்து ஒரு வனதேவதை அவனுக்கு ஆற்றிலிருந்து தங்கக் கோடாரியும், வெள்ளிக் கோடாரியும் கொடுத்ததாமே! நாமும் அழுவோம், நமக்கும் அதேபோலக் கிடைக்கும். ஆனால் அதற்கும் தெம்பு வேணுமே! முதலில் சாப்பிடுவோம்... அப்புறம் அழலாம்.

(கீழே இறங்கிச் சாப்பிடுகிறான்)

ஊருக்குள்ளதான் பிளாஸ்டிக் பையைக் கீழே போடக்கூடாதும்பாங்க... இங்கே யார் நம்மைக் கேக்கப் போறாங்க?  உணவுப் பொட்டலம் எடுத்துவந்த பாலிதீன் பையைக் கீழே போடுகிறான். 
திடீரெனப் பிஞ்சுபோன தன் செருப்பையும்  ஆற்றில் தூக்கி எறிகிறான். பின்னர் போலியாக அழ ஆரம்பிக்கிறான்)
அச்சச்சோ... என் கோடாரி ...!

(வனதேவதை ஆற்றிலிருந்து எழுந்து வருகிறாள்)

வனதேவதை: ஏன் மகனே அழுகிறாய் ? உனக்கு என்ன வேண்டும்?

வி. வெட்டி:  ஹை ... தேவதை ... தேவதை வந்திருச்சி! தேவதையே என் கோடாரி ஆத்துக்குள்ளே விழுந்திருச்சு, அதைக் கொஞ்சம் எடுத்துக் கொடேன்.

(தேவதை ஆற்றுக்குள் முழுகி எழுகிறாள். அவள் கையில் பிளாஸ்டிக் பையும், செருப்பும் இருக்கின்றன)

வி. வெட்டி:  அச்சச்சோ... என்ன தேவதையே ... இது?  தங்கக் கோடாரியோடு நீ வருவேன்னு பார்த்தா, பிளாஸ்டிக் பாட்டில், செருப்புன்னு எடுத்துகிட்டு வரியே?

தேவதை: நீ இந்த உலகத்துக்கு எதைக் கொடுக்கிறாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும். ஒரே ஒரு இரும்புக் கோடாரியோடு வந்தே இந்த மரங்களையும் அதிலுள்ள பறவைக் குஞ்சுகளையும் இந்தப் பாடுபடுத்துகிறாயே... உனக்குத் தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று கோடாரிகள் வேண்டுமா? சரி... நீ எதற்காக உன் ஊரை விட்டு இங்கே வந்தாய்?

வி. வெட்டி: அங்கே மழையே இல்லை, பஞ்சம்! அதான் இங்கே வந்தேன்.

தேவதை: எல்லா மரங்களையும் அங்கே வெட்டித் தள்ளியிருப்பாய், அதனால்தான் மழையே வரவில்லை. இப்போது இங்கேயும் வந்து மரம் வெட்டுகிறாய்! இப்படியே உன்னைப் போல் நான்கு பேர் வந்து, இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தால் மழை எப்படி வரும்?

வி. வெட்டி:  (யோசித்தபடி) ஆமாம் தேவதையே! நீ சொல்வது சரிதான். நான்தான் தப்பு செஞ்சுட்டேன். மரத்தை வெட்டியதோடு, அதிலிருந்த பறவைக் குஞ்சுகளையும் ஆற்றில் வீசிவிட்டேன். (மிகவும் வருந்துகிறான்)

தேவதை: இப்போதாவது உணர்ந்தாயே... மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மண், நீர், காற்று எல்லாம் இயற்கை வளங்கள். அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நீங்களும் நன்றாக வாழமுடியும்.

வி. வெட்டி: சரி தேவதையே!  இப்பொழுது நான் என்ன செய்வது?

தேவதை: இந்தா... நான் சில விதைகள் தருகிறேன். உன் ஊருக்கே திரும்பிச் சென்று இவற்றை நட்டு வைத்து வளர்த்து வா. செடிகள் மரமாகும். அவை காய், கனிகளைத் தரும்; மூலிகைச் செடிகளையும் வைத்து வளர்த்து வா! இவற்றின் மூலம் நீயும் வாழலாம், மற்றவரும் வாழ்வார்கள், இயற்கையும் வாழும். இதற்கு முன்பு வரை மரம் வெட்டி வாழ்ந்த நீ, இனிமேல் மரங்களை வளர்த்து வாழப் பழகு. நீ தூக்கி எறிந்த பறவைக்கூடு  அதோ... அந்தப் புதரில் கிடக்கிறது பார். அதை எடுத்து மீண்டும் மரத்தின் மீது வை. மாலையில் அதன் தாய்ப் பறவை வந்தால் தேடும். 

வி. வெட்டி: சரி... தேவதையே! அப்படியே செய்கிறேன். இனி இயற்கை வளங்களைப் பாதுகாப்பேன் என்று உறுதி ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு நன்றி தேவதையே!

(மகிழ்ச்சியுடன் வனதேவதை மறைந்து போனாள்) 

-திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com