மரங்களின் வரங்கள்!: தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் விரும்பும் திருவாத்தி மரம் 

நான்தான் திருவாத்தி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் "பாஹினியா டொமண்டோசா' என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் விரும்பும் திருவாத்தி மரம் 


குழந்தைகளே  நலமா? 

நான்தான் திருவாத்தி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் "பாஹினியா டொமண்டோசா' என்பதாகும்.  நான் சிசால் பைனியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் "எல்லோ ஆர்கிட் ட்ரீ', "செயின்ட் தாமஸ் ட்ரீ',  "எல்லோ பெல்'  என்று அன்பா அழைப்பாங்க. அழகுத் தமிழில் என்னை காட்டாத்தி மரமுன்னு சொல்வாங்க.  

நானும் என் சகோதரர் ஆத்தி, மந்தாரை மரங்களைப் போலத்தான் இருப்பேன். அதாவது,  நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்கள் இலைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால்,  அளவு மட்டும் வித்தியாசப்படும். அதை வைத்து நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளலாம். என் தாயகம் இந்தியா. ஒரு காலத்தில் நான் தமிழ் நாட்டிலுள்ள காடுகளில் அதிகமாகக் காணப்பட்டேன். ஆப்பிரிக்கா நாட்டு மக்கள் என்னை அதிகமாக விரும்பி வளர்க்கிறாங்க. 

என் மரத்தின் மேல் பகுதி வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும்,  வயிற்றுப் பகுதி கருப்பு நிறமாக இருக்கும். நான் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமா வளருவேன்.  ஏன், நான் லேசான பனிப் பொழிவையும் தாங்குவேன். ஆனால், எனக்கு நிறைய சூரிய ஒளி வேண்டும். 

நான் ரொம்ப பலம் வாய்ந்தவன். என் இலைகள், பூக்கள், மொட்டுகள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மருத்துவ குணங்களில்  இவை மிகுந்த அளவில் இடம்பெற்றிருக்கின்றன. என் இலைகள் இரண்டாகப் பிரிந்திருக்கும். என் இலைகளை வெந்நீரிலிட்டு கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் பட்டென்று குணமாகி விடும்.

அதோடு, நுரையீரல் அழற்சி, மலச்சிக்கலும் நீங்கி விடுவதோடு வயிற்றிலிருக்கும் நுண்புழுக்களும் அழிந்துவிடும்.   

என் இளம் தளிர் இலைகளைக் கீரையாக சமைத்து உண்ணலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். என் விதைகளில் இல்லாத சத்துகளே இல்லை. ஆப்பிரிக்க நாட்டு மக்கள் என் விதைகளை அரைத்து, கூழாக்கி சத்து பானமாக அருந்தி உடலை பலமேற்றுகிறார்கள். என் பூக்கள் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும். என் பூக்களில் தேனும், மகரந்தமும் அதிக அளவில் இருக்கு. அதனால், தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் என்னை சுத்திச் சுத்தி வருவாங்க.

குழந்தைகளே!  உங்களுக்குத் தெரியுமா? என் இலைகளிலிருந்து மஞ்சள்நிற சாயம் எடுக்கலாம். அதைத் துணிகள் சாயமேற்ற பயன்படுத்தலாம். என் பட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் மிகவும் வலுவுள்ளதாக இருப்பதால் அதைக்கொண்டு கூடைகள் போன்ற பல வீட்டு உபயோகப் பொருள்களைச் செய்யலாம். என் மரக்கட்டைகள் மிகுந்த வலுவாக இருக்கும் என்பதால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் என் பாரம்பரிய வீடுகளைக் கட்ட பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து என் பலத்தை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். 

நான் தஞ்சாவூர் மாவட்டம்,  திருவாய்ப்பாடி அருள்மிகு பாலகந்தநாதர்; திருவாரூர் மாவட்டம், சித்தாய்மூர் அருள்மிகு திருச்சிற்றேமம் சுவர்ண ஸ்தாபனேஸ்வரர்;  திருமருகல் சாலையில், திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்தராபதீஸ்வரர் என்கிற ஆத்திவனநாதர்; சிவகங்கை மாவட்டம், திருமலை அருள்மிகு மலைக்கொழுந்தீஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் தல விருட்சமாக இருக்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருள்மிகு திருக்குண்டையூர் திருக்கோயிலிலும்,  திருநெல்வேலி நகரம், சங்கர் நகர், பாலமடை அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகா சமேத ஸ்ரீமங்களாங்குரேஸ்வரர் திருக்கோயிலிலும் என்னைக் காணலாம்.

நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com