ஏழைச் சிறுமி ஏற்றிய விளக்கு!

அறிஞர் வேங்கை எல்லாம் தெரிந்தவர் - மக்கள்    ஐயம் என்றால் அவரிடம் வருவர்!
ஏழைச் சிறுமி ஏற்றிய விளக்கு!


அறிஞர் வேங்கை எல்லாம் தெரிந்தவர் - மக்கள்
    ஐயம் என்றால் அவரிடம் வருவர்!
அறியாத ஒன்று எதுவும் இல்லை - என
    அளவுக்கு மேலே நம்பிக்கை வைத்தனர்!

வேங்கை மக்கள்  ஐயம் தீர்ப்பார் - அதை
    விரும்பி ஏற்று... வீட்டுக்குச் செல்வர்!
மக்கள் கூட்டம் பெருகிச் சேர்ந்தது - அவர்
    மனத்திலும் ஆணவம் முள்மரம் ஆனது!

சென்றார் பலஊர்... அங்கெல்லாம் - அறிவில்
    சிறந்தோர் பலரும் சந்திப்பர்!
வேங்கையின் கேள்வி அம்புகளால் - அவர்
    பூனை எனவே நழுவிடுவர்

அரசூர் என்னும் ஊர் சென்றார் - வேங்கையை
    அறிந்தவர் எவரும் அங்கில்லை!
"எவர் வந்தாலும் என் கேள்வி
    எளிதில் வீழ்த்தும் யார் நிற்பார்?'

குடிசை ஒன்றைக் கண்டார் வேங்கை - வாசலில்
    கோலம் இட்டாள் ஒருசிறுமி!
இருளும் வந்தது விளக்கினையே
    ஏற்றி வைத்தாள்... எங்கும் ஒளி!

அவளிடம் திறமையைக் காட்டுதற்கு
    அருகே அழைத்தார் ""ஏ சிறுமி...
இருளில் விளக்கை ஏற்றி வைத்தாய்
    எங்கிருந்து வந்தது இவ் வெளிச்சம்?''

ஒருநொடி திகைத்தாள்... மறுநொடியே - அவள்
    ஓடிச்சென்று விளக்கணைத்தாள்! - ""ஐயா
இங்கே இருந்த வெளிச்சம் எங்கே?
    இப்போது அதுவும் சென்றதெங்கே?''

சிறிதும் தயக்கம் இல்லாமல் - வேங்கையினைச்
    சிறுமி  கேட்டாள் பணிவாக - அவரிடம்
இருளாய்  இருந்த ஆணவமோ - அவள்
    ஏற்றிய விளக்கால் ஓடி மறைந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com