கிறிஸ்துமஸ் குடில்!

செய்துங்கநல்லூர் புனித லூசியாள் அன்னை ஆலய வளாகத்துக்குள் மிகப் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டச் செய்தி வேகமாக பரவியது.
கிறிஸ்துமஸ் குடில்!

செய்துங்கநல்லூர் புனித லூசியாள் அன்னை ஆலய வளாகத்துக்குள் மிகப் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டச் செய்தி வேகமாக பரவியது. அந்தக் கிறிஸ்துமஸ் குடிலைக் காண பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குடிலைக் கண்டு மகிழ்ந்து  வணங்கிச் சென்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் சிறுவர்கள் பலர் கூட்டமாக அந்தக் கிறிஸ்துமஸ் குடிலை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது,  அந்தப் பக்கமாக வந்த ஆலயத்தின் பங்குத் தந்தை ஜேக்சன் அருள் "என்ன குழந்தைகளா... கிறிஸ்துமஸ் குடில் எப்படி இருக்கு?' என்று கேட்டார்.

"சூப்பர் ஃபாதர்... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு' என்றனர் சிறுவர்கள் சிலர். "இந்தக் கிறிஸ்துமஸ் குடில்  உங்களுக்கு என்ன சொல்லுது?' என ஃபாதர் ஜேக்சன் அருள் கேட்க, அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். அப்போது  குறும்புக்கார சிறுமி ஒருத்தி மட்டும் "ஒன்னும் சொல்லல பாதர்' என்று சொன்னாள்.

உடனே ஃபாதர் சிரித்தபடி "ஒன்னும் சொல்லலியா?' என்று கேட்டுக்கொண்டே "உலகம் முழுவதும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று அகஸ்துராயனால் அறிவிப்பு வர கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்தலகேம் என்னும் தாவீதின் ஊருக்குக் கர்ப்பவதியான மரியாளை கோவேறு கழுதையில் ஏற்றிக்கொண்டு சூசையப்பர் பல மைல்கள்தூரம் நடந்தே வந்தார். அவர்கள் இரவு தங்கிக்கொள்ள அங்குள்ள சத்திரத்தில் இடமில்லை. கடைசியில் அவர்கள் தங்கிக்கொள்ள ஒரு மாட்டுத் தொழுவம் மட்டும்தான் கிடைத்தது.  அப்போது மரியாளுக்குப் பிரசவ வலி வர, அழகான இயேசு பாலகன் பிறக்க,  அந்த அற்புதக் குழந்தையை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டிக்குள் கிடத்தினார்கள். 

கர்ப்பிணியான கன்னி மரியாளை இங்கு அழைத்து வர உதவிய கோவேறு கழுதையை நம் நினைவுக்குக் கொண்டுவரும் இந்தப் பொம்மை கோவேறு கழுதைதான் இது என குடிலுக்குள் இருந்த ஒரு கோவேறு கழுதை பொம்மையைச் சுட்டிக்காட்டிய ஃபாதர், சத்திரத்தில் இடமில்லாதபோது அவர்கள் தங்கிக்கொள்ள உதவியது இது போன்ற மாட்டுக் கொட்டகை, பிறந்த குழந்தை படுத்துக்கொள்ள தொட்டிலாக உதவியது. இதுபோன்ற தீவனத்தொட்டி, இந்த மாட்டுத் தொழுவத்துக்கு வெளிச்சம் தந்து உதவியது. இதுபோன்ற அரிக்கேன் விளக்கு, ஏசு பாலகன் பிறந்ததைக் காட்டில் சாமக்காவல் காத்துக் கொண்டிருந்த ஆடு மேய்பவர்களுக்கு முதன்முதலில் அறிவித்து உதவியவர்தான் இந்த தேவதூதன் என தேவதூதனின் சொரூபத்தைச் சுட்டிக்காட்ட பிறந்த குழந்தை இயேசுவை கண்டு வணங்கித் தொழுதிட பொன்னும் பொருளும் கொண்டு வந்த கீழை தேசத்து சாஸ்திரிகளுக்கு வழிகாட்டி உதவியது இந்த வால்நட்சத்திரம்.

அவர்களை இங்கு சுமந்து வந்தவை இந்த மாதிரி ஒட்டகங்கள், பாவிகளை இரட்சிக்க இயேசு குழந்தையாகப் பிறந்தபோது நடு நடுங்க வைக்கும் நல்ல பனிப் பொழிவு. அப்போது அந்தத் தொழுவம் கதகதப்பாக இருக்க தங்களின் சூடான மூச்சுக்காற்றை வெளியிட்டு உதவின இது போன்ற மாடுகள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் நாம் அவை செய்த உதவியை பொம்மை வடிவில் இந்தக் கிறிஸ்துமஸ் குடிலுக்குள் கண்டு களித்து நினைந்து போற்றிப் புகழ்கிறோமே... இப்போது சொல்லுங்கள் இந்தக் கிறிஸ்துமஸ் குடில் உங்களுக்கு என்ன சொல்லித் தருகிறது?' என குழந்தைகளிடம் ஃபாதர் ஜேக்சன் அருள் கேட்டார்.

அதற்குக் குழந்தைகள் எல்லாம் ஒன்றுபோல் "குழந்தை இயேசு பிறந்த நன்னாளில் இவை எல்லாம் கேட்காமலே  உதவியது போல,  நாமும் பிறருக்கு உதவும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் ஃபாதர்' எனக் கூறினார்கள்.
"வெரி குட்... வெரி குட்... சரியாகச் சொன்னீங்க' என்ற ஃபாதர் குழந்தைகள் அனைவரையும் பாராட்டி, "மிகச்சரியாக பதில் சொன்ன உங்களுக்கு என்ன வேண்டும்?' எனக் கேட்டார்.

குழந்தைகள் என்ன கேட்பது எனத் தெரியாமல் கூச்சத்தில் அமைதி காத்தனர். "உங்களுக்கெல்லாம் இன்றைக்கு சுவையான கிறிஸ்துமஸ் கேக்' எனச் சொன்னார் ஃபாதர். அவர்கள் அனைவரையும் தனது அறைக்கு அழைத்துச்சென்று ஆளுக்கொரு சுவையான கிறிஸ்துமஸ் கேக்கும், மிக அழகான ஜெபமாலையோடு எழுது பொருள்களையும் பரிசாகக் கொடுத்தார். குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  

இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் பிறருக்கு உதவும் நல்ல பழக்கத்தை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்! 
   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com