செய்திச் சிட்டு!

""ஹாப்பி  கிறிஸ்மஸ்!''  என்று சொல்லிக்கொண்டே  வந்தான் பாலா.  கையில் ஒரு பெரிய கேக் பெட்டி! நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு ராமு, மாலா, லீலா அனைவரும் அவனை நெருங்கினர்.
செய்திச் சிட்டு!

""ஹாப்பி கிறிஸ்மஸ்!'' என்று சொல்லிக்கொண்டே வந்தான் பாலா. கையில் ஒரு பெரிய கேக் பெட்டி! நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு ராமு, மாலா, லீலா அனைவரும் அவனை நெருங்கினர். ""கேக்கை நாலு துண்டா வெட்டு!...'' என்றாள் லீலா. ""அஞ்சு துண்டா வெட்டு!.... சிட்டு வரும் நேரம் .... அதுக்கு ஒண்ணு வேணுமில்லே?'' கேக் பெட்டியிலிருந்த ஒரு மர ஸ்பூனால் அதை ஐந்தாகக் கூறு போட ஆரம்பித்தான் ராமு. ஒரு துண்டை சிட்டுக்கு வைத்துவிட்டு வெட்டிய கேக்கை எல்லோரும் வெட்டினர். (அதாவது சாப்பிட்டனர்)
""கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!'' என்று சந்தோஷமாய் கூவிக்கொண்டே வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு.
""ஹாய், சிட்டு!.... எங்கேயிருந்து வர்றே?'' என்று கேட்டாள் மாலா.
""ஜெர்மெனியிலிருந்து!''
""ஓ!.... ஜெர்மெனியிலே என்ன விசேஷம்?''
""ஜெர்மெனியில் ஒரு தம்பதிகள் தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.... ''
""இதிலே என்ன அதிசயம்?''
""அதில்லை.... அந்த வீட்டில் 444 கிறிஸ்மஸ் மரங்களை அலங்கரித்து வைத்து உலக சாதனை செய்திருக்கிறார்கள்!.... சுமார்10,000 விதமான அலங்காரப் பொருள்களாலும், 300 மின்சார சர விளக்குகளாலும் கிறிஸ்மஸ் மரங்களை அலங்கரித்திருக்கிறார்கள்'' என்றது சிட்டு.
""வெரிகுட்! நாமும் அவர்களை வாழ்த்துவோம்... அது சரி, கிறிஸ்மஸ் மரத்திலே நீ கூடு கட்டியிருக்கியா?'' என்று கேட்டான் பாலா.
""ம்..... கட்டலே.... ஆனா அதிலே கூடு கட்டணும்னு எனக்கும் ஆசைதான்! இன்னொரு முக்கிய செய்தியும் இருக்கு... அமெரிக்காவில் "டெஸ்லா' அப்படீன்னு ஒரு கார் கம்பெனி இருக்கு.... அந்தக் கம்பெனி கிறிஸ்மஸை முன்னிட்டு சிறுவர்களுக்கான காரைத் தயாரித்திருக்கிறது. சுமார் 25 கி.மீ. வேகத்தில் செல்லும் முழுமையான தானியங்கி மின்சாரக்கார். கார் ரொம்ப சூப்பராத்தான் இருக்கு! நான் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பறந்துட்டேன்! ஜாலியாத்தான் இருந்தது!...ரொம்ப பாதுகாப்பான கார்னு சொல்றாங்க... அஞ்சு மணி நேரம் சார்ஜ் பண்ணா போதும்.... ரிவர்ஸ் எடுக்கும் வசதியெல்லாம் கூட இருக்கிறது. காரின் வேகத்தை குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 5 அல்லது 10 கி.மீ. ஆகக் குறைத்து வைத்துவிடலாம். நான் பறக்கிற ஸ்பீடுக்கு அதெல்லாம் ஒத்து வராது.... ஆனா உங்களுக்குப் பிடிக்கும்!....ஆனா, எதிர்பார்த்த அளவுக்குக் கார் அதிகமா விற்பனை ஆகலே!''
""ஏனோ?'' என்றாள் லீலா.
""விலைதான் காரணம்!.... ஒரு கார் இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து
நாப்பத்தைந்தாயிரம்!... அதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்... இப்போது டெஸ்லா கம்பெனி 5 வயதுள்ள சிறு குழந்தைகளுக்கான காரைத் தயாரித்து வருகிறது.... விலை இந்திய மதிப்பின்படி சுமார் 45 ஆயிரம் ரூபாய்.....''
""எனக்கென்னவோ இதுவே அதிகமாத்தான் படுது.... எப்படியோ போகட்டும்... வெரிகுட்... நல்ல நியூஸ்தான்! இந்தா உனக்கு ஒரு துண்டு கேக்!.... கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!'' என்றான் பாலா.
கேக்கை ருசித்த சிட்டு,"" கேக் பிரமாதம்! ரொம்ப நன்றி.... வரேன்....'' என்று அலகில் ஒட்டியிருந்த க்ரீமுடன் பறப்பதை எல்லோரும் வேடிக்கையாகப் பார்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com