மரங்களின் வரங்கள்!: சத்துகள் நிறைந்த மரம்  - உத்தாலம் மரம்

நான் தான் உத்தாலம் மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் கார்டியா சைனென்சிஸ் என்பதாகும்.  நான் போரோஜினேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சிறுநறுவிலி, நரிவிரியன் என்ற வேறு பெயர்களும் உண்டு.
மரங்களின் வரங்கள்!: சத்துகள் நிறைந்த மரம்  - உத்தாலம் மரம்

குழந்தைகளே நலமா,
நான் தான் உத்தாலம் மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் கார்டியா சைனென்சிஸ் என்பதாகும்.  நான் போரோஜினேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சிறுநறுவிலி, நரிவிரியன் என்ற வேறு பெயர்களும் உண்டு.  என்னை ஆங்கிலத்தில் லாங் லீஃப் கார்டியா, லாங் லீஃப் சாசர் என்று செல்லமா கூப்பிடுவாங்க.  என்னை நீங்க தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காணலாம்.  நான் ஆற்றங்கரை, மணல் சார்ந்த நிலப்பகுதி ஆகியவற்றில் நன்றாக வளருவேன்.  

என் பழங்கள் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்திலிருக்கும்.  ஆப்பிரிக்காவில் என்னை, சத்துகள் நிறைந்த பழத்திற்காகவே வளர்க்கிறார்கள், அவ்வளவு சத்திருக்காம்.      என் பழங்கள் மிகுந்த சுவை மிக்கவை.  நீங்க அப்படியே சாப்பிடலாம். சமைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.   அது இனிப்பு, புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். என் பழத்தினுள் ஒன்று முதல் நான்கு விதைகள் இருக்கும். என் பழம் மூலம், குடல் புண், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களைத் தீர்க்கும். நீங்க ரொம்ப பலவீனமா இருக்கிறதா நினைக்கிறீங்களா. அப்போ என் பழத்தை சாப்பிடுங்க. உடம்பில் உற்சாகம் பிறக்கும்.  

என் இலைகளை அல்லது பட்டைகளை நீரிலிட்டு கொதிக்கவிட்டு பின் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ஓடிடும், அதோட வாய்ப்புண்ணும் இருக்காது. உங்க வீட்ல யாருக்காவது, கரும்படை, சொரி, சிறங்கு முகப்பரு போன்ற தோல் சம்மந்தமான நோயிருக்கா? என் இலைகளை அவை மீது தடவச் சொல்லுங்க, இருந்த இடம் தெரியாது.    என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனம். என் வேர் அல்லது பட்டைகளை கஷாயம் செய்து அருந்தினால் வயிறு உபாதைகள் இருக்காது.  இந்த வேர்க்கஷாயம் மலேரியா நோயையும் குணப்படுத்தும். ஆனால், கர்ப்பிணிகள் இந்த கஷாயத்தைக் குடிக்கக் கூடாது.      
என் கிளைகளை வெட்ட வெட்ட நான் வளருவேன்.  அடிமரத்தை வெட்டினாலும் நான் துளிர்த்தெழுவேன். என் மரத்திலிருந்து வீட்டு உபயோகப் பொருள்களும் தயாரிக்கிறாங்க. என் பூக்கள் வெள்ளை நிறத்தில் வாசம் மிக்கதாயிருக்கும்.  

குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, மரங்கள் உள்ள பகுதிகளில் வெப்பம் குறைந்து, குளிர்ச்சி ஏற்படும்.  இப்படி வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டு பண்ணும் பணியை மரங்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.  என்னை நாடி குரங்குகள், பறவைகள், ஒட்டகச்சிவிங்கி, பறவைகள், மான்கள் வருவாங்க.  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்ற திருக்குறளை நாங்க மறக்கல.     மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்து உயிர் வாழ பறவையினங்கள் மரங்களில் தங்களது கூடுகளைக் கட்டி வாழ்கின்றன. இது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தருது. 

நான் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் (திருத்துருத்தி) அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோவிலில் தலவிருட்சமாயிருக்கேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com