அரங்கம்: நண்பர்கள்! 

ஏழாம் வகுப்பு படிக்கும் சுரேஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுமதி மற்றும் தந்தை சுந்தர், தாய் சுந்தரி.
அரங்கம்: நண்பர்கள்! 

காட்சி - 1
இடம்: சுரேஷின் வீடு
நேரம்: காலை 7 மணி

மாந்தர்கள்: ஏழாம் வகுப்பு படிக்கும் சுரேஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுமதி மற்றும் தந்தை சுந்தர், தாய் சுந்தரி.
(வீட்டு வாசலில் வழக்கம்போல் காத்திருந்த முயல், காக்கைகள், கிளிகள், புறாக்கள், நாய்கள் மற்றும் பூனைகளுக்கு சுரேஷ் உணவளித்து, உபசரித்து அவைகளோடு செல்லமொழியில் உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளும், நாய்கள், பூனைகளும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவதை அவன் அக்காள் சுமதி அருகில் இருந்து பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தாள்).

தாய் சுந்தரி : (வாசல் பக்கம் எட்டிப் பார்த்து): சுமதி..! சுரேஷ்..! சீக்கிரம் வாங்க! உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சேதி சொல்லப்போறேன்..!

சுமதி : (துள்ளி ஓடிவந்து...): அம்மா! என்னம்மா மகிழ்ச்சியான சேதி?
சுந்தரி: ஊட்டியில இருந்து வேதகிரி மாமா போன் பண்ணார். நம்பளையெல்லாம் ஊட்டிக்கு காரில் சுற்றுலா அழைத்துப்போக இன்னைக்கு வர்றாராம்..! அப்பா ரெடியாகிட்டு இருக்காரு! நீங்களும் ரெடியாகுங்க..!
சுமதி (ஆனந்தம் பொங்க): ஹைய்யா... ஜாலி...!
முதுமலை தேசியப் பூங்காவுக்குப் போலாம்! எல்லா விலங்குகளையும் பார்க்கலாம்..! தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை சவாரி செய்யலாம்..! பைகாரா அருவியிலே குளிக்கலாம்..! படகிலே போகலாம்..!
சுந்தரி: ஆமாம்! வன விலங்குளை நேரில் பார்க்கணும்னு சுரேஷும் ரொம்ப நாளா ஆசைப்பட்டுட்டு இருந்தான்.
சுமதி: அதுமட்டுமா..! அவன்தான் தீவிர வன விலங்குகள், பறவைகள் பிரியன் ஆச்சே..!

சுந்தரி: ஆனா, சேதியைக் கேட்டும் அவன் முகத்தில்
சந்தோஷத்தைக் காணோமே..!”
(தந்தை சுந்தர் சுரேஷைப் பார்த்தபடி வருகிறார்...)

சுந்தர்: (தன் மனைவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே...) சுந்தரி! அவனோட கவலை என்னன்னு புரியலையா? நாம ஊட்டிக்குப் போய்விட்டால், வீட்டுக்குத் தினமும் வரும் விருந்தாளிகள் உணவு கிடைக்காமல் ஏமாந்து போய் விடுவார்களே... என்று வருத்தப்படுகிறான். அதுதானே...?
சுரேஷ்: ஆமாம்ப்பா..! ஆனா விருந்தாளிகள்னு சொல்லாதீங்க..! அவங்க என்னோட நண்பர்கள்...!
சுந்தர்: (சிரித்தபடி) சரி...சரி... உன் நண்பர்களின் உணவுச் செலவுகள் அனைத்தையும் ஏற்க அப்பா தயாரா இருக்கேன். நாம சுற்றுலா முடிந்து திரும்பும் வரை உன் நண்பர்களை கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து விடுகிறேன்..! திருப்திதானே?
சுரேஷ்: (புன்னகைத்து) சரிப்பா..! ஆனா ஒரு கண்டிஷன்..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும். அதையெல்லாம் பேப்பரில் எழுதித் தருகிறேன்..! அதன்படி ஆயாவை கொடுக்கச் சொல்லுங்கள்..! கெட்டுப் போன உணவு எதையும் போடக்
கூடாது...!
சுந்தர்: (சிரித்து) மெனுவா...? சரி..! சரி..! அப்படியே செய்யறேன்..! நீயும், அக்காவும் சீக்கிரம் ரெடியாகுங்க..!

காட்சி - 2
இடம்: சுரேஷின் வீடு
நேரம்: மதியம் 2 மணி

மாந்தர்கள்: சுரேஷ், சுமதி, சுந்தர், சுந்தரி மற்றும் வேதகிரி மாமா.
(அனைவரும் முகக் கவசம் அணிந்து பெரிய காரில்
புறப்படுகின்றனர். அப்போது "கீச்... கீச்...' என்று ஒரே
சப்தம்...! சுரேஷ் காரில் இருந்தபடியே பார்க்கிறான். அவனது நண்பர்களான முயல், காக்கைகள், கிளிகள், புறாக்கள், நாய்கள், பூனைகள் அனைத்தும் சுரேஷை வழியனுப்புவதுபோல் குரல் கொடுத்துக்கொண்டிருந்தன. சுரேஷ் அவர்களுக்கு "பை' சொல்லி
கையசைத்தான்).

காட்சி - 3
இடம்: ஊட்டி மலைச் சாலை
நேரம்: மறுநாள் காலை 10 மணி

மாந்தர்கள்: சுரேஷ், சுமதி, சுந்தர், சுந்தரி, வேதகிரி மாமா மற்றும் கார் ஓட்டுநர்.
(கார் சென்று கொண்டிருக்கிறது. டிரைவர் காரோட்டி வர, வேதகிரி மாமா, சுரேஷ், சுமதி, சுந்தர், சுந்தரி அனைவரும் மலைச் சாரலை ரசித்தபடி
வருகின்றனர்).

சுரேஷ்: மாமா! நாம மலைரயில்ல போனா ஊட்டி மலை அழகை இன்னும் அதிகமா ரசிக்கலாமில்லையா?
வேதகிரி: ஆமாம்..! நீ சொல்றது சரிதான்! ஆனால், காரில் போகிறபோது வழியில் நீ பார்க்க நினைக்கிற பறவைகள், விலங்குகளைக் கூட அருகிலிருந்து பார்த்து ரசிக்கலாம்..! அதேசமயம், மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில்ல போனாத்தான் ஊட்டி
பிரயாணமே முழுமை அடையும்...! அதனால ஊருக்குத் திரும்பும்போது மலை ரயில்லயே போயிடலாம்...!
சுரேஷ்: ஓகே..! சூப்பர் மாமா..!
சுமதி: மாமா! ஊட்டி ரோஜா தோட்டம் ஆசியக் கண்டத்துலேயே பெரியதாமே? தொட்டபெட்டா சிகரம் தென்னிந்தியாவிலேயே உயர்ந்த சிகரமாமே?
வேதகிரி: ஆமாம்! எல்லாத்தையும் சரியாத்தான் தெரிஞ்சு வெச்சிருக்கே...!
சுரேஷ்: அப்பா..! நாம போற வழியில யானை, மான், குரங்குகள் வந்தா, அவைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு போகலாமில்லையா?
சுந்தர்: தாராளமா..! பின்னே...! நீதான் ஊட்டி
நண்பர்களுக்காக கார் டிக்கி நிறையத் திண்பண்டங்களை வாங்கி அடுக்கி வைச்சிருக்கியே...! அதெல்லாத்தையும் செலவழிக்க வேண்டாமா?
(அனைவரும்
சிரிக்கின்றனர்...!)


காட்சி - 4
இடம்: கல்லாறு பகுதி
நேரம்: மாலை 4 மணி

மாந்தர்கள்: சுரேஷ், சுமதி,
சுந்தர், சுந்தரி, வேதகிரி மாமா மற்றும் கார் ஓட்டுநர்.
(சாலையின் இரு பக்கங்களிலும் சிங்கவால் குரங்குகள் பசியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை சுரேஷ் பார்க்கிறான்).
சுரேஷ்: அப்பா! மாமா..!அங்கே பாருங்க..! பாவம் குரங்குகள் எல்லாம் பசியோடு இருக்குது...! காரை சாலை ஓரமாக நிறுத்திட்டு அதுங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுக்கலாமா...?
சுந்தர், வேதகிரி (இருவரும்): ஓகே...! ஓகே...!
வேதகிரி: டிரைவர்...! காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்து..!
(சாலை ஓரமாக கார் நிற்கிறது).


காட்சி - 5
இடம்: கல்லாறு பகுதி
நேரம்: மாலை 4 மணி

மாந்தர்கள்: சுரேஷ், சுமதி, சுந்தர், சுந்தரி, வேதகிரி மாமா மற்றும் கார் ஓட்டுநர்.
(காரின் டிக்கியைத் திறந்து உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறார்கள். அதைப் பார்த்த குரங்குகள், மரத்திலிருந்து இறங்கி வந்து அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. வாழைப்பழங்களை எடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். குரங்குகள் ஆர்வத்துடன் வாங்கி வேகமாகச் சாப்பிடுகின்றன. இதைக் கண்டு சாலையின் மறுபுறத்திலிருந்த குரங்குகளும் வேகமாகத் தாவி ஓடி வருகின்றன. அப்பொழுது சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு வேன் அந்த குரங்குகள் மீது மோதிவிட்டு நிற்காமல் போயிற்று. அதைப்பார்த்த அனைவரும் அதிர்ந்து நின்றனர்).

சுரேஷ்: (அழுதுகொண்டே)அப்பா...! அடிபட்ட குரங்குகள் நடக்க முடியாமல் கிடக்கின்றன. இப்போ என்ன செய்யறது..?
கார் ஓட்டுநர்: சார், நாம பேசாம காரை எடுத்துகிட்டு இந்த இடத்தை விட்டு போயிடலாம். இந்த விபத்துக்கு நாமதான் காரணம்னு நம்ம மேல வனத்துறையினர் வழக்கு போட்டுடுவாங்க..! நமக்கு எதுக்கு சார் வீண் வம்பு?
சுரேஷ்: (கோபமாக) என்ன டிரைவர் அங்கிள்.... இப்படி பேசறீங்க? வாயில்லாத ஜீவன்கள் கிட்ட உங்களுக்கு கருணையே இல்லையா? உங்க நண்பர்கள் அடிபட்டுக் கிடந்தா, பார்த்திட்டு பேசாம போயிடுவீங்களா..? இவங்க எல்லாரும் என்னோட நண்பர்கள்..! என்னாலதான் இவங்களுக்கு அடிபட்டது..! இவங்களைக் காப்பாத்த வேண்டியது என்னோட கடமை...!
(வேதகிரியும், சுந்தரும் சாலையில் அசைவற்றுக் கிடந்த ஐந்து குரங்குகளின் மேல் தண்ணீரைத் தெளித்தனர். குரங்குகள் உயிருடன்தான் இருந்தன. ஆனால், கால்கள் அடிபட்டிருந்தன. அதைப் பார்த்து சுரேஷ் "ஓ'”வென்று வாய்விட்டு அழுதான். அப்பொழுது சாலையின் வளைவில் தொங்கிக் கொண்டிருந்த வனத்துறையினரின் விளம்பரம் அவனது கண்களில் பட்டது. அதில் இருந்த செல்லிடப்பேசி
நம்பரைக் காண்கிறான்).
சுரேஷ்: அப்பா..! உங்க செல்போனைக் கொடுங்க..! (அப்பா தருகிறார். வாங்கி நம்பரைப் போடுகிறான்).

சுரேஷ்: (போனில்) சார்..! வனத்துறை அதிகாரியா..? நாங்க கல்லாறு பகுதியில இருக்கோம். இங்கே "வன விலங்குகள் சாலையைக் கடக்குமிடம்...! மெதுவாகச் செல்லவும்'ன்னு போர்டு வச்சிருக்கீங்க. அங்கேதான் நிற்கிறோம். ஆனா, ஒரு வாகனம் குரங்குகள் மீது மோதிட்டு நிக்காமப் போயிடுச்சு... குரங்குகளைக் காப்பாத்தணும்..! உடனே நடவடிக்கை எடுங்க சார்..!
(பத்தே நிமிடங்களில் விலங்குகளைத் தூக்கிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர்ந்தது.
அடிபட்ட குரங்குகளுக்கு வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது).

வன மருத்துவர்: (சுரேஷிடம் ) குரங்குகள் உயிர் பிழைச்சுடும்... தம்பி..! உன்ன நெனச்சா எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! வாயில்லாப் பிராணிகள் மீது இவ்வளவு அன்பு வைச்சிருக்கியே...! உன்னைப் போலவே ஒவ்வொருவரும் மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்தினால் கண்டிப்பாக அவை பாதுகாக்கப்படும். இந்த சிங்கவால் குரங்குகளும் அழியும் விளிம்பில்தான் இருக்கிறது. நீங்க மட்டும் உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லையென்றால், இந்த குரங்குகளும் கண்டிப்பாக இறந்திருக்கும். நீங்க சொன்ன அடையாளங்களை வைத்து, விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தை சிசிடிவி கேமராவில் கண்காணித்துப் பிடித்து விடுவோம்..!
(சுரேஷ்ம் வனமருத்துவர் கூறியதைக் கேட்டு
மிகவும் மகிழ்ச்சியடைந்தான்).
வன மருத்துவர்: இருந்தாலும் நீங்க ஒரு பெரிய தப்பு பண்ணிட்டீங்க..! வனவிலங்குகளுக்கு சாலைகளில் உணவுகளைப் போடக்கூடாது. நீங்க போடற உணவுக்காக காட்டுல வாழ வேண்டிய விலங்குகள் எல்லாம், ரோட்டுல உணவுக்காக காத்துக் கிடக்குது. இதனால்தான் விபத்துகள் நடக்குது.
விலங்குகளை நண்பர்களாக நேசிக்கும் நீங்கள் இனிமேலாவது இதுபோன்ற தவறைச் செய்யாதீர்கள்.
வனத்திலேயே விலங்குகளுக்கு தேவையான உணவும், தண்ணீரும் உள்ளது. மனிதர்கள் போடும் தரமற்ற உணவுகள் விலங்குகளுக்கு ஒத்துக்கொள்ளாது. நாம் உண்ணும் உணவுகளில், செயற்கை ரசாயனங்கள் நிறைய இருக்கு. அவை, விலங்குகளுக்கு செரிக்காமல் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தி, அவற்றின் உயிர்களுக்கும் ஆபத்தாக முடியும். சிலர் நெகிழிப் பொருள்களைத் தூக்கி வீசுகிறார்கள். அதனால் வனமும் மாசடைகிறது. அதை உணவென்று எண்ணி உண்ணும் விலங்குகளும் நோயுறுகின்றன.
சுரேஷ்: டாக்டர்..! நீங்க கூறுவது முற்றிலும் உண்மை. இனி நான் கடைகளில் விற்கும் எந்த உணவுப் பொருள்களையும் வாங்கி விலங்குகளுக்குப் போட மாட்டேன். இந்தச் சுற்றுலா மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டேன். உங்களுக்கு மிகவும் நன்றி சார்...!
வன மருத்துவர்: சபாஷ் தம்பி! சரியாகப் புரிந்து கொண்டீர்கள்...! மகிழ்ச்சி...! உங்களின் இனிய பயணம் தொடரட்டும்...! வாழ்த்துகள்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com