கருவூலம்!: மணிப்பூர் மாநிலம்!

இக்கோட்டை இம்பால் மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 15 அடி கனச் சுற்றுச்சுவருடன், 5 அடி உயரத்தில் எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது.
கருவூலம்!: மணிப்பூர் மாநிலம்!


சென்ற இதழ் தொடர்ச்சி......

பிகூ லோகன் மண்கோட்டை!

இக்கோட்டை இம்பால் மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 15 அடி கனச் சுற்றுச்சுவருடன், 5 அடி உயரத்தில் எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக்கோணமும் 156 அடி நீளம் கொண்டது. இக்கோட்டை எப்பொழுது கட்டப்பட்டது என்ற தகவல் இல்லை.

ஷிருய் தேசியப் பூங்கா!

வடகிழக்கு இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்று. இப்பூங்கா ட்ராகோபன், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்கினங்களும், பல்வேறு பறவையினங்களும் உள்ளடக்கியது.

ஷிரூய் கஷீங் சிகரம்!

இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9300 அடி உயரத்தில் உள்ளது. பல ஆறுகள் ஓடும் சிகரம். மற்றும் மலைப்பிளவுகள், புகழ் பெற்ற ஷிரூய் லில்லிப்பூக்கள் நிறைந்த ரம்மியமான இடம் இது.

இயாங்தாங் லாய்ரெம்பி கோயில்!

இது மேற்கு இம்பால் மாவட்டத்தில் இயாங்தாங் என்ற இடத்தில் அமைந்துள்ள லாய்ரெம்பி தேவியின் பெரிய கோயிலாகும். இந்தக் கோயில் மணிப்பூர் மாநிலத்தின் மிகப் பெரிய மற்றும் அதிகம் பேர் வருகை தரும் யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.

இபுது தங்ஜிங் கோயில்!

இக்கோயில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள பழங்கால பெரிய கோயிலாகும். பண்டைய மொய்ராங் வம்சத்தவரின் "இபுது தங்ஜிங்' என்ற தெய்வத்திற்கான கோயில். இந்தக் கோயிலில் மே முதல் ஜூலை வரை இசை விழாவும், நடன விழாவும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதனைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கொந்தெள ஜம் - லாய்ரெம்பி ஜி குபாம் - கோயில்!

இந்தக் கோயில் மேற்கு இம்பால் மாவட்டத்திலுள்ள கொந்தெள ஜம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் வளாக ஆலமரம் உலகின் மிகப் பெரிய மரங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் கிடைத்துள்ள பண்டைய மணிப்புரியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

கெளப்ரு மலை!

இந்த மலை மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள மிக உயரமான மலைகளில் இதுவும் ஒன்று. மேலும் இம்மாநிலத்தின் பிரபலமான வழிபாட்டுத் தலமாக இம்மலை உள்ளது. மேதி மக்களும் சனமாகி நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களும் தங்க வாழ்நாளில் ஒரு முறையாவது இம்மலையில் ஏறுகிறார்கள்.

தங்ஜிங் மலை!

இமயமலைத் தொடர் மாநிலமான மணிப்பூரில் உள்ள ஒரு மலைத்தொடரே இது. மணிப்பூர் மாநிலப் புராணங்களில் இம்மலையைப் பற்றி இறைவன் தங்குமிடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மலையடிவாரத்தில்தான் இபுது தங்ஜிங் கோயில் உள்ளது. இது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாகும்.

கோபிநாத் கோயில்!

இந்தக் கிருஷ்ணர் கோயில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நிங்கோங்காங் நகரத்தில் உள்ளது. இது மணிப்பூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய கோயில்!

பம்லேன்பாட் ஏரி!

மணிப்பூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஏரி இது. இந்த ஏரியில் ஏராளமான சிறு தீவுகள் உள்ளன. சமீபகாலமாக மக்கள் இந்த சிறு தீவுகளில் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

சூரன்சான்ட் பூங்கா!

இங்கு ஈபுதோவ் தங்காங் கோயில் மலை உச்சியில் உள்ளது. இவ்விடம் சனமாகி நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த யாத்திரைத் தலமாகும்!

தாங்கா தீவு!

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இத்தீவு உள்ளது. இத்தீவு லோக்டாக் ஏரியில் அமைந்துள்ளது. இத்தீவில் 13000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழிலே இக்கிராமத்தின் முக்கியத் தொழிலாகும்.

சீரோகி தேசியப் பூங்கா!

உக்ரூஸ் மாவட்டத்தில் இப்பூங்கா உள்ளது. புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும், பறவையினங்களும் உள்ளடங்கிய பூங்கா இது! இங்குள்ள மலைச்சரிவில் ஏராளமாக புகழ் பெற்ற ஷிரூய் லில்லிகள் பூத்துக் குலுங்கும் காட்சியைக் காண நூற்றுக் கணக்கானோர் இங்கு வருகை புரிவர்.

ஆண்ட்ரோ கிராமம்

இது ஒரு சிறிய கிராமம். ஆனாலும் மணிப்பூரில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களுள் இதுவும் ஒன்று. மண்பாண்டத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்றது. ஒரு அருங்காட்சியகம், பூங்காக்களும் இந்த கிராமத்தில் உள்ளன.

மெய்பம் லோக்பா சிங்!

இது பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குன்று. இவ்விடத்தில் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானியப் படைகளுக்கு இடையே போர் நடந்தது. மலையடிவாரத்தில் போர்வீரர்களின் கல்லறைகள் உள்ளன. ஆண்டுதோறும் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்த இங்கு வருகின்றனர்.

மேலும் இங்கு இரண்டாம் உலகப்போரின் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. ஆயுதங்கள், புகைப்படங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோன்ஜின் போர் நினைவு வளாகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்போர் நினைவு வளாகம் தவுபல் மாவட்டத்தில் உள்ளது. 1891 - இல் ஆங்கிலேயப் படைகள், கோஹிமா, சீசர், மியான்மர் பகுதிகளிலிருந்து மும்முனைத் தாக்குதல் நடத்தியபோது வீரத்துடன் அதனை எதிர்த்துப் போரிட்டு உயிரிழந்த மணிப்பூர் வீரர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு வளாகம் இது! உலகிலேயே மிகப் பெரிய வாள் சிலை இங்குள்ளது.

ஸ்ரீ கோவிந்தஜி ஆலயம்!

மிகவும் பிரபலமான மணிப்பூர் சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று. அரண்மனைக்கு அருகில் உள்ளது.

மணிப்பூர் விலங்கியல் கோட்டம்

இது 1976 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எட்டு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்துள்ள இடம் இது. பல்வேறு விலங்கினங்களும், பறவைகள் சூழந்த அழகான இடம் இது!

தரோன் குகை!

உலுவான் குகை என்றும் அழைக்கப்படுகிறது. 650 மீ நீளம் கொண்டது. இக்குகைக்கு 5 வாயில்கள் உள்ளன. 34 மூட்டுகள் இக்குகையில் உள்ளன.

சிங்டா அணை!

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மிக உயரமான அணை இதுவே. முழுவதும் மண்ணால் கட்டப்பட்டுள்ளது! விவசாயத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மிக அழகிய அணை இது!

ஐ.என்.ஏ. நினைவு வளாகம்!

நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய தேசிய ராணுவத்தின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்டமான வெண்கலச் சிலை மற்றும் போர் அருங்காட்சியகம் உள்ளது. முக்கியப் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ராஸ் மஞ்சா!

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ளது ராஸ் மஞச்ô கோயில். ராஸ் விழா கொண்டாட்டங்கள் நிகழும் இடம். பழைமையான பிரமிடு வடிவ செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் இது. தற்போது தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது.

ஜோர் பங்லா கோயில்!

பிஷ்ணுபூரில் உள்ள மற்றொரு பழைமையான கோயில் இது. ரகுநாத் சின்ஹா தேவ் என்ற மன்னரால் 1655 - இல் கட்டப்பட்டது. பிரபலமான சுற்றுலாத் தலம் இது!

தால் மடோல்!

மராட்டியப் படைகளை எதிர்த்து மல்லா போர் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இடம் இது. 3.8 மீ நீளம் உள்ள ஒரு பீரங்கி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் துருப்பிடிக்காமல் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இது.

லைமரம் நீர்வீழ்ச்சி!

அழகும், அமைதியும் கொண்ட அழகிய நீர்வீழ்ச்சி இது. மற்றும் இரண்டு நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன.

ட்சுகோ பள்ளத்தாக்கு!

மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இயற்கைச் சூழலுக்கு பிரபலமான இடம். அழகிய பள்ளத்தாக்குகள், தெளிவான நீர்ச்சுனைகள், பசுமையான காடுகள், அடர்த்தியான வண்ணமிகு பூக்கள் எனப் பார்ப்போரை மயங்க வைக்கும் எழில் கொண்ட இடம் இது.

வெய்தூ ஏரி!

இம்பாலிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வற்றாத அழகிய ஏரி!

துய்புவாங் பழங்குடி அருங்காட்சியகம்!

இந்த அருங்காட்சியகம் சுராச்சந்தபூரில் அமைந்துள்ளது. மணிப்பூரின் பாரம்பரியம், மரபு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிககும் அருங்காட்சியகம் இது.

இந்தியாவில் உள்ள பல அழகான இடங்களில் மணிப்பூரும் ஒன்று. நீல மலைகள் சூழ்ந்த, அடர்த்தியான காடுகள் சூழ்ந்த பல நீர்நிலைகளும், நீர் வீழ்ச்சிகளும், சிற்றாறுகளும், மிக அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பள்ளத்தாக்குகளும்நிறைந்த சொர்க்கம் மணிப்பூர்! மணிப்பூரை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றும் அழைப்பர்!

(நிறைவுடைந்தது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com