முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
அங்கிள் ஆன்டெனா
By -ரொசிட்டா | Published On : 12th June 2021 04:46 PM | Last Updated : 12th June 2021 04:46 PM | அ+அ அ- |

கேள்வி: தீக்குச்சிகளைக் கொண்ட வத்திப் பெட்டி எப்போதிலிருந்து புழக்கத்திற்கு வந்தது?
பதில்: மிகப் பழமையான சீனப் புத்தகம் ஒன்று, கி.மு. 577-இல் ஸல்ஃபர் போன்ற ரசாயனப் பொருளைக் கொண்ட தீக்குச்சி பயன்பாட்டில் இருந்ததாகச் சொல்கிறது. சீனர்கள் வெடிமருந்து தயாரிப்பதில் முன்னோடிகள் என்பதால் இது உண்மையாக இருக்கக்கூடும்.
1805-ஆம் ஆண்டில், பாரீஸ் நகரைச் சேர்ந்த அறிவியல் உதவியாளரான ஜீன் சான்செல் என்பவரால் ஒரு தீக்குச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தீக்குச்சியின் முனையில் பொட்டாசியம் ஸல்பேட், ஸல்ஃபர், சர்க்கரை மற்றும் ரப்பர் போன்றவற்றின் கலவை ஒட்டப்பட்டிருக்கும். இந்தத் தீக்குச்சியை ஸல்ஃப்யூரிக் அமிலம் நிறைந்த சிறிய பாட்டிலுக்குள் அமிழ்த்தினால் உடனே அது நெருப்பு பற்றிக் கொள்ளும். இந்த முறை அதிக பொருட்செலவு மிக்கதாகவும் மிகவும் அபாயகரமானதாகவும் இருந்தது.
இப்போது நாம் பயன்படுத்தும் தீக்குச்சி வந்த கதை மிகவும் சுவாரசியமானது.
1926-ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் வாக்கர் என்ற அறிவியல் அறிஞர் தீக்குச்சியைக் கண்டு பிடிக்கப் பலவிதமான கலவைகளைத் தயாரித்துப் பார்த்து, மிகவும் அலுத்துப் போன சமயத்தில், அவர் வைத்திருந்த சிறிய பாத்திரத்திலிருந்த ஒரு துளி ரசாயனக் கலவையைத் தற்செயலாக அவர் தரையில் தேய்த்து அழிக்க முயற்சித்தபோது அது சட்டென்று தீப்பற்றிக் கொண்டது.
இப்படித்தான் வத்திக்குச்சிகளைக் கொண்டு பெட்டியின் பக்கவாட்டுப் பட்டையில் உரசினால் தீப்பற்றிக் கொள்ளும் பாதுகாப்பான முறை கண்டுபிடிக்கப்பட்டது.