அரங்கம்: சிறு சேமிப்பு

அரங்கம்: சிறு சேமிப்பு

(தன்னுடைய தோழிகளை நோக்கி) என் அருமை நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்து, மிக எளிமையாக நடைபெற்ற என் பிறந்த நாள் விழாவினை மிகச்சிறப்பாக நடத்தி கொடுத்ததற்கு என்

காட்சி - 1
இடம்: கண்ணனின் வீடு
மாந்தர்கள்: கண்ணன், மனைவி சுதா, மகன் ஆனந்த், மகள் நித்யா மற்றும் அவளது தோழிகள்.
( மகள் நித்யாவின் பிறந்த நாள் விழாவின் காரணமாக அவர்களது வீடு கலகல வென்றிருக்கிறது)

நித்யா: (தன்னுடைய தோழிகளை நோக்கி) என் அருமை நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்து, மிக எளிமையாக நடைபெற்ற என் பிறந்த நாள் விழாவினை மிகச்சிறப்பாக நடத்தி கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன் !
கண்ணன்: ஆமாம் பிள்ளைகளா! உங்களுடைய நேரங்களை உங்கள் அருமைத் தோழி நித்யாவிற்காக ஒதுக்கி, அவளது பிறந்த நாள் விழாவினை மிகச்
சிறப்பாக நடை பெற உதவியதற்காகவும், எங்கள் அன்பின் அடையாளமாகவும் நித்யாவின் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் ஒரு சேமிப்பு உண்டியலை கொடுக்க ஆசைப்படுகிறேன்.
சுதா: ஆமாம் பிள்ளைகளா! என் மகள் நித்யாவின் பிறந்த நாளில், இந்த உண்டியலில், உங்களது எதிர்க்காலப் பாதுகாப்பிற்காக நீங்கள் உங்களது சிறு சேமிப்பைத் தொடங்க வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
கண்ணன்: குழந்தைகளே, உங்களது இன்றைய சேமிப்புதான், உங்கள் அனைவருடைய பாதுகாப்பென்பதை நீங்கள் யாவரும் உணரவேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
சுதா: உங்கள் தந்தை உங்களது கைச்செலவிற்காகத் தரும் காசிலிருந்து ஒரு பகுதியைக் கட்டாயமாகச் சேமிக்கப் பழக வேண்டும். கையிலுள்ள காசையெல்லாம் செலவு செய்ய வேண்டுமென்று ஒரு பொழுதும் நினைக்காதீர்கள். பிறகு கையில் காசில்லாத பொழுது, அவசர அத்தியாவசியத் தேவைகளுக்காக நீங்கள் திண்டாடும் நிலைமைக்கு நீங்கள் ஆளாகக் கூடாது.
கண்ணன்: முடிந்த வரையில் வீண் செலவுகளைத் தவிர்த்து, அதில் கிடைக்கும் அந்த சிறு சேமிப்பை உங்கள் தந்தையிடம் கொடுத்தால். அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். அவர் அந்த பணத்தை உங்களுக்கு செலவு செய்யத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு போதும் மறாவாதீர்.

காட்சி - 2
இடம்: கண்ணனின் வீடு
மாந்தர்கள்: கண்ணன், மனைவி சுதா, மகன் ஆனந்த், மகள் நித்யா மற்றும் அவளது தோழிகள்.
(நித்யாவின் தோழிகள் அனைவரும் முதன் முதலில் சிறுசேமிப்பின் முக்கியத்துவங்களைத் அறிந்து கொள்கின்றனர். தங்களுக்குத் தோன்றும் சேமிப்பு வழிகளை மிகவும் ஆர்வத்துடன் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.)

ஹரிணி: நித்யா உனக்கு மிகவும் நன்றி. இது நாள் வரை பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை. எனக்கு பணத்தை செல்வழித்து தான் பழக்கம்.
நித்யா : ஹரிணி!. நமது ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விட்டாலே, நம்முடையச் சேமிப்பைத் தொடங்கி விட்டோமென்று அர்த்தம்.
ஹரிணி: இனி என்னுடைய வீண் செலவுகளைத் தவிர்த்து, என்னுடைய அப்பாவிற்கு மிகவும் உதவியாக இருக்கப் போகிறேன்.
வித்யா: அடுத்த வருடம் என்னுடைய அப்பா ஒரு சிறிய வீட்டை வாங்க திட்டம் போட்டிருக்கிறார். குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்த்து, சேமிப்பை ஏற்படுத்தினால் தான் அது சாத்தியமாகும் என்பதை இன்று நான் உணர்ந்துள்ளேன்.'
சகஸ்ரா: விலை உயர்ந்த ஆடைகளை இனி நான் தவிர்ப்பேன். எங்கள் வீட்டிலிருக்கும் தேவையில்லாத இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையெல்லாம் விற்றுவிடச் சொல்லப்போகிறேன். வீட்டில் நான்கு பேர்கள் இருந்தால், ஆளுக்கொரு வண்டி எதற்கு ? பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகவில்லை. பாவம் என் அப்பா, வரவிற்கு மேல் செலவு அவருக்கு !
சிந்து: என்னிடம் இருக்கும் ஸ்கூட்டரை விற்று விடப்போகிறேன். ஏற்கனவே எங்கள் வீட்டில் மூன்று ஸ்கூட்டர்கள் உள்ளன. அவற்றை எங்கள் வீட்டில் நிறுத்தவும் இடமில்லை.
நித்யா: ஆம்! குடும்பத்தில் ஆளுக்கொரு ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு ஊர் சுற்றினால், நாம் எப்படி சேமிக்கமுடியும். பெட்ரோல் செலவு தான அதிகமாகிறது.
ப்ரியா: முடிந்தவரை அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்தே போக முயற்சிக்கலாம். அதனால் நாம் நடைபயிற்சியும் செய்தது போல ஆகிறது. அதனால் போக்குவரத்து செலவுகளும் குறைகின்றன.
சுதா: ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று வண்டிகளை வைத்துக் கொண்டிருப்பதால்தான், நகரில் போக்குவரத்து நெரிசலே ஏற்படுகின்றது. அதனால் அதிக விபத்துகளும் ஏற்பட்டு, நிறையப் பேர்கள் தங்களுடைய உயிர்களையும் இழக்கிறார்கள்.
ஹரிணி: இன்று நித்யாவின் பிறந்த நாள் விழாவில் நாம் அனைவரும் கலந்து கொண்டதால், சேமிப்பு மற்றும் சிக்கனத்தைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு நன்றி கூற நாம் அனைவரும் கடமை பட்டிருக்கிறோம்.

காட்சி - 3
காலம்: சரியாக ஒரு வருடம் கழித்து, நித்யாவின் அடுத்த பிறந்த நாள் விழா அன்று..
இடம்: கண்ணனின் வீடு
மாந்தர்கள்: கண்ணன், மனைவி சுதா, மகன் ஆனந்த், மகள் நித்யா மற்றும் அவளது தோழிகள் வசந்தி, சஹஸ்ரா, சாந்தா, சரண்யா, மாலதி.
(நித்யாவின் தோழிகள் அனைவரும் நித்யாவின் பிறந்த நாள் விழாவிற்காக அவர்களது வீட்டில் குழுமியிருக்கின்றனர். தங்களது சேமிப்பு எவ்வாறெல்லாம் தங்களுக்கு உதவி புரிந்தது எனும்
செய்திகளை ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி பொங்க பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.)

திலகா: எங்கப்பா கண் டாக்டரைப் பார்க்கணும்னு ரொம்ப நாளாக காத்துக் கிட்டிருந்தார். அவரால பேப்பரைச் சரியாப்படிக்க முடியாது. என் அண்ணனுக்கும் இதுவரை, சரியான வேலை கிடைக்கவில்லை.
அதனால மருத்துவச் செலவுகளுக்கு பயந்துகிட்டு, மருத்துவரைப் பார்க்காமலேயே இருந்தாரு எங்கப்பா. அப்பாவைப் பார்க்க எனக்கு பாவமா இருந்துச்சு. பேசாம உண்டியலை ஒடச்சேன். மூவாயிரம் தேறிச்சு. அப்பாவைக் கையோட ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் கண்ணாடியப் போட்டு விட்டேன். அவருக்கு ஒரே சந்தோஷம். இப்ப அவர் பேப்பர்ல எந்த ஒரு வரியையும் படிக்காம விடுறதில்லை.
சாந்தா: நித்யா உனக்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும் ! எங்கப்பா வேலை செய்யும் தொழிற்சாலையில் திடீரென்று ஸ்டிரைக். இரண்டு மாதம் சம்பளம் அம்பேல்!.. பணத்திற்கு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். வேறு வழி தெரியாமல் கடைசியில் என்னுடைய உண்டியலை உடைத்துப் பார்த்தோம். மூவாயிரம் ரூபாய் தேறிச்சு. எப்படியோ ஒரு மாத மளிகை சாமான்களை வாங்கி சமாளிச்சோம்.
கோகிலா: எங்கப்பாவும் அதே தொழிற்சாலையில் தான் வேலை செய்கிறார். என் தம்பிக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். கையில் தம்பிடி காசு கூட இல்லை. உண்டியலை ஒடச்சி பார்த்தோம், மூவாயிரம் தேறிச்சு. இப்ப என் தம்பி தடங்கலில்லாமல் ஸ்கூலுக்கு போய்விட்டு வர்றான்.
சகஸ்ரா: எங்கள் வீட்டில் தேவையில்லாமல் இரண்டு கார்கள் கராஜில் நின்னுகிட்டிருந்தது. ஒரு காரை வித்துட்டு அந்தப் பணத்தை வங்கியில் பிக்சட் டிபாசிட்டில் போட்டார் என் அப்பா. மாசா மாசம் எங்களுக்கு இப்ப வங்கியிலிருந்து வட்டி தவறாம வந்துகிட்டிருக்கு. என்னோட அப்பா சொல்றாரு, அந்தப் பணம் என்னுடைய கல்யாணச் செலவுகளுக்காம்.
வசந்தி: இப்ப நாங்க எல்லோரும் கடை, கண்ணி
மற்றும் கோயில்களுக்குப் போனால், நடந்தே போகிறோம். வாக்கிங் போனா மாதிரியும் ஆகுது. பெட்ரோல் செலவுகளும் குறைகிறது. இரண்டு சக்கர வாகனங்களை தேவையில்லாமல் வெளிய எடுக்கறது இல்லை.
மிச்சம் பண்ண காசை, எங்கப்பா வங்கியில் ரிக்கரிங் டிபாசிட்ல போட்டுட்டு வர்றாரு. அது என்னோட கல்லூரி படிப்பு செலவுகளுக்காம்.
வித்யா: போன தீபாவளிக்கு எங்கப்பாவை நான் தொந்தரவே பண்ணல! அப்பாகிட்ட கேக்காம என்னோட உண்டியலை ஒடச்சேன். ஐயாயிரம் தேறிச்சு. என் தம்பிக்கும் எனக்கும் இரண்டு செட் துணி எடுத்தேன். எங்கப்பாவுக்கும் எங்கம்மாவுக்கும் கூட துணிகள் எடுத்து கொடுத்தேன். அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அது எங்களுக்கு ஸ்பெஷல் தீபாவளியா மாறிச்சு!
சரண்யா: இஞ்சினீயரிங் காலேஜுல படிக்கற என் தம்பிக்கு நிறையப் புத்தகங்கள் வாங்கணும். புக்ஸ் விலைகளோ ரொம்ப அதிகம்.. என் அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு தொந்தரவு கொடுக்க கூடாதுனு, என்னோட உண்டியலை ஒடச்சி அதுல சேர்ந்திருந்த பணத்தை வெச்சு அவனுக்குத் தேவையான புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுக்க முடிஞ்சுது. அதைப் பார்த்துட்டு எங்கப்பாவும் அதிக மகிழ்ச்சியடைந்தார். இதனால எனக்கும் என் தம்பிக்கும் உள்ள உறவுப் பாலம் இன்னும் பலப்பட்டது.
மாலதி: நித்யா!. ஒன்னெ எங்களால மறக்கவே முடியாதுடி!சேமிப்பு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த எங்களுக்கு, ஒரு உண்டியலை கொடுத்து, சேமிக்கச் சொன்ன ! இப்ப எங்க எல்லோருக்கும் அது சரியான நேரத்துக்கு உதவி கிட்டிருக்கு. "மூணு மாசத்துக்கு முன்னாடி, எங்க தாத்தா, குளிக்கும்போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாரு. அந்த சமயம் பார்த்து எங்கப்பா வேற ஆபிஸ் டூர்ல இருந்தாரு. தாத்தாவுக்கு நல்ல அடி!. உடனே மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயாகணும். அம்மா கிட்ட ஏ.டி.எம் கார்டு கூட இல்லை. அன்னிக்கு பார்த்து வங்கி விடுமுறை வேற!. எங்களுக்கு என்ன செய்யறதுனே தோனல!.அம்மா கையில சுத்தமா காசு வேற இல்ல. எங்க கிட்ட இன்சூரன்சு கூட இல்ல. யாரு கிட்ட கடன் கேக்கறதுனு அம்மா முழிச்சுகிட்டிருந்தாங்க. உடனே எனக்கு என்னோட உண்டியல் ஞாபகம் வந்திச்சு. மடமடன்னு ஒடச்சுப் பார்த்தேன். எட்டாயிரம் ரூபாய் தேறிச்சு. உடனே ஒரு ஆட்டோவை பிடிச்சிட்டு தாத்தாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்து, தேவையான முதலுதவி பண்ணிட்டு அவரைக் காப்பாத்த முடிஞ்சுது. அது யாரால, உன்னாலத்தான் நித்யா!.! எங்கப்பா அதுக்கப்புறம் தான் சென்னைக்கே வந்து சேர்ந்தாரு.
(அனைவரும் கைதட்டி நித்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகின்றனர்)

ப்ரியா: நித்யா, இந்த வருடம் உன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு வந்திருக்கும் எங்களுக்கெல்லாம் என்ன தரப்போகிறாய் ?
கண்ணன்: குழந்தைகளா!.உங்களுடைய உண்டியல்களை எல்லாம் அவசரத் தேவைகளுக்காக நீங்கள் உடைத்து விட்டீர்கள். அதனால் உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒரு புதிய உண்டியலைக் கொடுக்கப் போகிறேன்.
நித்யா: நண்பர்களே, இந்த வருடம் அதற்கும் மேலே ஒரு படி செல்லப்போகிறேன். உண்டியல் சேமிப்பு என்பது சிறு சேமிப்பு மட்டுமே! உங்களால் அதிகமாக சேமிக்க முடியாது. மேலும் என் தந்தை ஒரு வங்கி அதிகாரியென்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். உங்களுடைய எதிர்க்கால நன்மையைக் கருதி, அவர் மூலமாக வங்கியில் உங்களுக்கெல்லாம் ஒரு சேமிப்பு கணக்கைத் தொடங்கி வைக்கப் போகிறேன், வீண் செலவுகளைத் தவிர்த்து, நாம் நம்முடைய எதிர்க்காலத் தேவைகளுக்காக சேமித்தால், அவை நமக்கு பல விதங்களில் உதவிடும் என்பதை நீங்கள் எல்லோரும் உணர்ந்து விட்டீர்கள். ரொம்ப மகிழ்ச்சி !.
(ஹைய்யா ஜாலி! நாங்க எல்லோரும் வங்கி கணக்கை திறக்கப் போகிறோம் என்று கரகோஷம் எழுப்பி, தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திக் கொண்டனர் நித்யாவின் தோழிகள் அனைவரும்)

திரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com