உழைப்பே மூலதனம்!

உண்ணும் உணவுப் பொருளெல்லாம் உழவர் உழைப்பில் உருவாகும்!

உண்ணும் உணவுப் பொருளெல்லாம் 
உழவர் உழைப்பில் உருவாகும்!
நண்ணும் நல்ல ஆடையெல்லாம் 
நெசவாளர் தம் நல்லுழைப்பே!

எண்ணும் எழுத்தும் கற்பித்தல்
ஏற்ற ஆசான் அறிவுழைப்பே!
கண்ணும் கருத்துமாய்க் கற்று 
கடின உழைப்பால் உயர்ந்திடுவாய்!

அன்னை உழைப்பால் வயிராற 
அறுசுவை உணவை உண்டிடலாம்!
உன்னை வளர்க்க உடலுழைப்பால் 
உனது தந்தை முயல்வாரே!

சின்ன எறும்பு தேனீக்கள்
சிறப்பாய் உழைத்துச் சேமிக்கும்!
மன்னன் கூட உழைத்தால்தான் 
மக்கள் எல்லாம் நலம் பெறுவர்!

உழைக்கும் மாந்தர் யாவருமே
உலகைக் காக்கும் அச்சாணி!
உழைத்திடாமல் இருப்போர்க்கு 
உலகில் வாழத் தகுதியில்லை!

உழைப்பே உன்னை உருவாக்கும்;
உழைப்பே உன்னை உயர்வாக்கும்; 
உழைப்பே உன்றன் மூலதனம்;
உழைத்தே உலகை வென்று விடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com