அரங்கம்: ஊசி

அப்பா கோபாலன் - தடுப்பூசி போடக் கிளம்பு கமலா, போய் போட்டுக்கிட்டு வந்திடலாம்.
அரங்கம்: ஊசி

காட்சி -  1
இடம் -  இல்லம்
மாந்தர் - அப்பா கோபாலன், அம்மா கமலா, மகன் ராஜேஷ், மகள் ரம்யா

அப்பா கோபாலன் - தடுப்பூசி போடக் கிளம்பு கமலா, போய் போட்டுக்கிட்டு வந்திடலாம்.
கமலா -  எந்த ஊசிங்க? எங்கே  போடப் போறோம் ?
அப்பா - அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் போகலாம். எது போடறாங்களோ அதையே போட்டுக்கலாம்.
ராஜேஷ் - அப்பா கோவிஷீல்டு போட்டுக்குங்க
ரம்யா - அப்பா கோ வேக்ஸின் போட்டுக்குங்க
கமலா - என்னங்க இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் ? எது அதிக பலன் தரும் ?
அப்பா - கோவிஷீல்டு சிம்பன்ஸிக்கு ஜலதோஷம் வரவழைக்கும் கிருமியை எடுத்து ஆராய்ந்ததில் அது கோவிட் 19 மரபணுவை ஒத்திருப்பதை அறிந்தனர். அதை பல்கிப் பெருகும் தன்மையை இழக்க வைத்து நம் உடலில் செலுத்தும் போது நம் உடல் கொரோனா கிருமி நுழைந்து விட்டதாக நினைத்துக் கொண்டு எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.
ராஜேஷ் -  கோவேக்ஸின் எப்படி செயல்படும் அதன் அடிப்படை என்ன அப்பா ?
அப்பா -  கொரோனா கிருமியே தான் செலுத்தப்படும். ஆனால் அதன் பல்கிப் பெருகும் அமைப்பை மட்டும் வெட்டி எடுத்து விடுவர்.  உடலில் செலுத்தியதும் கிருமியை எதிர்க்க சக்தியை உடல் தயாராக்கும்.  ஆனால் பல்கிப் பெருகும் தன்மையை இழந்துவிட்ட நுண் கிருமி பெருகவே பெருகாது.  எதிர்ப்பு சக்தி உண்டானதும் அந்த டம்மி பீஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து வெளியேறி விடும்.
கமலா - ஏங்க ஒரு தரம் ஊசி போட்டுக்கிட்டால் போதுமில்லே?
அப்பா - இல்லே இரண்டாவது டோஸ் நாலு வாரம் கழித்து அவசியம் போடணும்.  கோவிஷீல்டுக்கு 6 வாரம் கழித்து 90 நாள்களுக்குள் இரண்டாம் டோஸ் போடணும்.
அம்மா கமலா - இன்னிக்கு புதன் கிழமை நாள் நல்லா  இருக்கு வாங்க நாம ரெண்டு பேரும் போய் போட்டுக்கிட்டு வந்திடலாம்.
ராஜேஷ், ரம்யா இருவரும் - நாங்களும் வர்றோம் சும்மா வேடிக்கை பார்க்க!
அம்மா - நீங்க வீட்டிலேயே இருங்க. அது என்ன திருவிழாவா.. ஆஸ்பத்திரி.  மாஸ்க் போட்டுக்கிட்டு கிளம்புறோம்.  பசங்களா, வீட்டில் ஜாக்கிரதையா கதவை சாத்திக்கிட்டு இருங்க.

காட்சி 2
இடம்  -  மருத்துவமனை
மாந்தர் - கோபாலன்,  கமலா,  நர்ஸ்கள்.
(நர்ஸ், கமலா கோபாலன் இருவரிடமும் ஆதார் அட்டை செல் போன் விவரங்கள் குறித்துக் கொள்கிறார்.)


நர்ஸ் - அம்மா உங்களுக்கு ஏதாவது அலர்ஜி மாதிரி உண்டா ?
கமலா - இல்லே,...  ஆனா தலைவலி மாத்திரை எதுவும் சாப்பிட்டால் உடல் அரிக்கும்...
கோபால் - அது பல வருடங்களுக்கு முன்னால் தான். இப்போ அப்படி எதுவும் வர்றதில்லே  இல்லே கமலா...
கமலா -  ஆமாங்க  இப்போ இல்லே...
(நர்ஸ் இருவருக்கும்  ரத்த அழுத்தம் சோதிக்கிறார். -- மற்றொரு நர்ஸ் இருவருக்கும் வலது கையில் தோள்பட்டைக்குக் கீழ் பஞ்சால் ஸ்பிரிட் தடவி ஊசி போடுகிறார்--டாக்டர் அப்போது வருகிறார்.)
டாக்டர் - சிஸ்டர் இருவருக்கும் ஊசி போட்டாச்சா? போய் அரை மணி நேரம் வெயிட் பண்ணச் சொல்லுங்க...
(அரை மணி கழித்து)
நர்ஸ் - எதுவும் மயக்கம், மாதிரி வருதா ?
இருவரும் -  இல்லே...
நர்ஸ் - டாக்டர் இதில் 10 மாத்திரை எழுதி இருக்கார். அது பாரசிட்டமால். ஜுரம் வரும் அறிகுறி இருந்தா மட்டும்  போட்டுக்குங்க.  ஃபார்மஸி கீழே இருக்குஅங்கே வாங்கிப் போங்க.
(இருவரும் நர்ஸூக்கு நன்றி தெரிவித்து விட்டு  மாத்திரை வாங்க கோபாலன் செல்கிறார்.)
 

காட்சி 3
இடம் மருத்துவமனை மருந்தகம்
மாந்தர்  - கோபாலன், மற்றும் பார்மஸி ஊழியர்கள்,  மருந்து வாங்க வந்திருக்கும் நபர்கள்
பார்மஸி ஊழியர்- (டாக்டர் சீட்டை கோபாலனிடம் இருந்து பெற்று) -  உட்காருங்க கூப்பிடறேன்
(அப்போது இன்னொரு நபரும் சீட்டை நீட்ட ) 

ஊழியர் (அதை வாங்கிக் கொண்டு) - உட்காருங்க.
வந்தவர் - சார் இன்னும் பத்து நிமிஷத்துக்குள் நான் பஸ்ûஸ பிடிக்கணும். கொஞ்சம் சீக்கிரம் தாங்க.
ஊழியர் - சரி உட்காருங்க.
(அப்போது கோபாலனுக்குத் தர வேண்டிய மாத்திரை கவர் மாறிப் போய் மற்றொரு நோயாளிக்கும், அவருக்குத் தர வேண்டிய தூக்க மாத்திரை கவர் தவறுதலாக கோபாலனிடமும் தந்து விடுகிறார்--கோபாலன் சென்றதும் - அந்த மற்றொரு நபரிடம்  கோபாலனுடைய கவர் செல்ல அந்த நபர் பிரித்துப் பார்த்துவிட்டு...) 
மற்றொரு நபர் - ஐயா.. என் மாத்திரை சின்னதா இருக்கும்.... தூக்க மாத்திரை... இது பெரிசா இருக்கே?...
ஊழியர் -  அடடே!...  இது வேறொருத்தருக்குத் தரவேண்டியதாச்சே!...வாட்ச்மேன் தம்பி.. இப்போ மாத்திரை வாங்கிப் போனவர் வெளியே நிக்கிறாரா பார்!...
(அவர் வெளியில் போய் தேட ....கோபாலனும் கமலாவும் டூ வீலரில் கிளம்பி விட்டனர்)
ஊழியர் - டாக்டர் சார்!... பாரசிட்டமாலுக்குப் பதில்தூக்க மாத்திரை கவர் மாறிப் போயிட்டுது!...
டாக்டர் - சிஸ்டர், சீக்கிரம்!... இப்போ தடுப்பூசி போட்டுக்கிட்டுப் போன நபர்களை செல்பேசியில் கூப்பிட்டு உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்க!...
(நர்ஸ் சமீபத்தில் ஊசி போட்ட ஒவ்வொருவராக போனில் அழைக்கிறார்)
கமலா - என்னங்க உங்க ஃபோன் அடிக்குது ஓரமா நிப்பாட்டி யாருன்னு பாருங்க!...
ஓரமாக நிறுத்தி பார்த்து கோபாலன் - ஏதோ புது நம்பரா இருக்கு. வீட்டுக்குப் போய் கூப்பிடறேன்...
நர்ஸ்  (டாக்டரிடம்) - எல்லோருக்கும் ஃபோன் பண்ணிட்டேன் எல்லோரும் மாத்திரையை சரி பார்த்து சரியா இருக்குன்னு சொல்றாங்க... கோபாலன் கமலா இரண்டு பேர் நம்பர் மட்டும் எடுக்கலே.....
டாக்டர் - சரி மருத்துவமனை வேனை ரெடி பண்ணச் சொல்லுங்க.  நானே நேரே போய் விசாரிச்சு மாத்திரையை திரும்ப வாங்கி வந்திடறேன்.
(நர்ஸ், கோபாலன் வீட்டு முகவரியுடன் வர, டாக்டர் வேனில் கிளம்புகிறார்)

காட்சி 4
இடம் - கோபாலன் இல்லம்
மாந்தர் - கோபாலன், கமலா, குழந்தைகள்

கோபாலன் -  ஊசி போட்டு ஒரு மணி நேரம் ஆவுது. அப்பப்போ வென்னீர் குடிக்கச் சொன்னாங்க.  ஜுரம் வந்தால் பாரசிட்டமால் போடச் சொன்னாங்க.....எனக்கு ஒண்ணும் தெரியலே... உனக்கு கமலா?
கமலா -  லேசா காய்ச்சல் மாதிரி இருக்குங்க.  பக்கத்து வீட்டு கோமளா கிட்டே சொன்னேன்  அவங்களுக்கும் ஒரு மணி நேரத்தில் காயற மாதிரி இருந்திச்சாம்.
கோபாலன் - சரி, பாரசிட்டமால் போட்டுக்கோ இந்தா...
(அப்போது ராஜேஷ்  மாத்திரை சைûஸ பார்த்திட்டு)
ராஜேஷ் - அப்பா இது பாரசிட்டமால் மாதிரி இல்லியே. அது பெரிசா இல்லே இருக்கும்... இது சின்ன மாத்திரையா இருக்கே?...
கமலா - இப்ப தான் எல்லாம் சைஸ் குட்டி ஆயிட்டுதே. மாத்திரையும் குட்டியா போட ஆரம்பிச்சிருப்பாங்க.
ரம்யா - அம்மா, அண்ணன் சொல்றதுதான் கரெக்ட்.  அவனுக்கு ஜுரம் வந்தப்போ பாரசிடமால்ன்னு தந்த  மாத்திரை  பெரிசா இருந்திச்சு!...
கோபாலன் - இரு, லென்ஸ் வச்சு பெயர் பாக்கறேன். ஏதோ ùஸால்பிடெம் ன்னு பெயர் இருக்கே?...
(அப்போது காலிங் பெல் ஒலிக்க... -- கோபாலன் எட்டிப் பார்க்கிறார்-  டாக்டர், நர்ஸ் இருவரும் வர ) வாங்க டாக்டர்
டாக்டர் - நீங்க மிஸ்டர் கோபாலன் தானே...? அவங்க கமலா மேடமா?
கோபாலன் - ஆமாம் சார்
டாக்டர் - ஜுரம் வந்தால் போட்டுக்க பாரசிடாமால் தந்தேன்,  பார்மஸியில் கவர் மாத்தி தந்திட்டாங்க!....இந்தாங்க, பாரசிடமால். அந்த மாத்திரை கவரைத் தாங்க...
கோபாலன் - கவரை நீட்டி ரொம்ப நன்றி டாக்டர். போனில் சொல்லி இருந்தா நானே வந்திருப்பேன்
டாக்டர் - போன் எடுக்கலே,.... அதான் நான் நேரில் வந்திட்டேன். அந்த தூக்க மாத்திரை ஒண்ணுக்கு மேல் சாப்பிட்டா ரொம்ப அபாயம்!... அதான் ஓடி வந்தோம்!...சாப்பிட்டிருந்தால் கையோடு அதை வாமிட் பண்ண வைக்கணும்!
கோபலன் - ரொம்ப நன்றி டாக்டர். உங்க கடமை தவறாத நற்பண்புக்கு தாங்க்ஸ்.  உட்காருங்க காபி சாப்பிட்டு போகலாம்...
டாக்டர் - இல்லே, அங்கே பேஷண்ட்ஸ் கூட்டம் நிறைய இருக்கு.... மறந்திடாம ஒரு மாசம் கழிச்சு செகண்ட் டோஸ் போட்டுக்குங்க...
(டாக்டர் போனதும் ராஜேஷ் பாரசிட்டமால் மாத்திரை பெயர் சரிதானா என படித்து விட்டு ஒரு மாத்திரை பிரித்து அம்மாவிடம் நீட்ட ரம்யா ஒரு டம்ளர் வென்னீரை நீட்டி) 
ரம்யா -  அம்மா மாத்திரை போட்டுக்குங்க.

 திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com