அரங்கம்: கடமை!

அம்மா, என்னம்மா நீங்க?.... ஃபிரிட்ஜைப் பூட்டிப் பூட்டி வைக்கிறீங்க?.... சாவியைக் கொடுங்க....
அரங்கம்: கடமை!

காட்சி - 1
இடம் - ரகு வீடு
மாந்தர் - ரகு , அம்மா

(ரகு குளிர்சாதனப் பெட்டியைத் திறக்க முயல்கிறான். அது பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.)

ரகு : அம்மா, என்னம்மா நீங்க?.... ஃபிரிட்ஜைப் பூட்டிப் பூட்டி வைக்கிறீங்க?.... சாவியைக் கொடுங்க....
அம்மா : கொடுக்க மாட்டேன்.... உனக்கு அதிலேந்து ஐஸ்க்ரீம் எடுக்கணும்.... அதானே?
ரகு : அதுவேதான்!...
அம்மா : தெரியும்.... இது வரைக்கும் பெரிய கப் நிறைய ரெண்டு தடவை சாப்பிட்டாச்சு.... போதும்!
ரகு : போம்மா,.... இன்னும் ஒரே ஒரு கப்! ப்ளீஸ்!
அம்மா : "கப்சிப்' புன்னு வாயை மூடிக்கிட்டுப் போ! எல்லாத்துக்கும் அளவிருக்கு.... போய் தோட்டத்துக் காய்கறிச் செடிகளை கவனி! இத்தனை நாளா நான், அப்பா, தாத்தா, பாட்டி கண்ணுங்கருத்துமா பாத்துக்கிட்டிருந்த செடிகளை,  "நானே கவனிக்கறேன்' ன்னு கிளம்பியிருக்கே!.... நீயா ஒரு வேலை செய்ய விரும்பினா அதுக்குப் பின்னாலே ஏதோ ரகசியம் இருக்குன்னு அர்த்தம்.
ரகு : ஆமாம்!....எனக்குச் செடியிலே காய்ச்சுப் பழுக்கற முழு சிவப்புத் தக்காளிப் பழங்களை அப்படியே பறிச்சுச் சாப்பிடறதுன்னா ரொம்பப் பிடிக்கும்!....என் கவனிப்பிலே இருந்தால் எப்பவேணும்னாலும் பறிச்சுத் திங்கலாம்!
அம்மா : அதானே கேட்டேன்!
ரகு : அம்மா இந்த ஃபிரிட்ஜ் சாவியை இன்னிக்குள்ளே கண்டுபிடிச்சு.....டாண்டாண்!... டண்டடாண்!....
அம்மா : ஏய்!....நீ ஒதை வாங்கப்போறே!....

காட்சி - 2
இடம் - ரகு வீடு
மாந்தர் - ரகு, அம்மா, அப்பா, பாட்டி, கடைக்காரர்.

அம்மா : ரகு, இன்னிக்குப் பாயசம் பண்ணணும்.... தெருக்கோடிக் கடைக்குப் போய் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் கிட்டு வா! இந்தா காசு!
ரகு : அம்மா நீங்க ஏன் "பர்த் டே' கேக்கைச் சாப்பிட விடாம, ஃபிரிட்ஜைப் பூட்டியே வெச்சிருக்கீங்க?... 
அம்மா : தொந்திரவு பண்ணி,தொந்திரவு பண்ணி, நேத்துத்தான் ஐஸ்க்ரீமை காலி பண்ணே!....பர்த் டே கேக்குலே பாதி கேக்கையும் நீயே நேத்து காலி பண்ணிட்டே!.... சரி, சீக்கிரம் போய் வெல்லம் வாங்கிட்டு வா!....  
ரகு : முடியாது போ!...எனக்கு கேக் வேணும்!....அப்பதான் கடைக்குப் போவேன்!....
அம்மா : ரகு, இது என்ன கெட்ட  பழக்கம்! இதைக் கொடுத்தாதான் இதைச் செய்வேன்னு சொல்றது ரொம்பத் தப்பு!....நீ என்ன வீட்டு வேலைக்காரனா?.... அவங்க கேக்கறது நியாயம்!.... கூலிக்காக வேலை செய்யறவங்க...
கடைக்காரர் : (உள்ளே நுழைந்தபடி) இந்தாங்க வெல்லம்!....நீங்க நேத்து கொடுத்த லிஸ்டுலே இது விட்டுப்போச்சு! இந்தாங்க...
பாட்டி : ரகு, நாங்க உன்னை மாதிரி சின்னப்பிள்ளைகளா இருந்தப்போ, வீட்டுப் பெரியவங்க என்ன வேலை சொன்னாலும் உடனே சந்தோஷமா செய்வோம். அதுதான் அழகு!....... சரி, எனக்கு ஒரு ரூல்டு நோட்புக் வாங்கிண்டு வா! ஒரு புது நோட் வெச்சிருந்தேன். காணாமப் போச்சு!.... இந்தா நோட்புக் வாங்க காசு!.... 

(பாட்டி ஒரு சிறு பெட்டியைத் திறக்க, அதனுள் தெரிந்த ஃபிரிட்ஜ் சாவியை கவனிக்கிறான் ரகு.)

ரகு : ஹை!....இதோ ஃபிரிட்ஜ் சாவி!....  (என்றபடி  அதை எடுக்கப்போக பாட்டி பட்டென்று பெட்டியை மூடிவிடுகிறாள்) 
பாட்டி, கொடுங்க பாட்டி அந்த சாவியை!....
பாட்டி : கொடுக்க மாட்டேன்.... உங்க அம்மாதான் அதை எங்கிட்டே ஒப்படைச்சிருக்கா!
அம்மா : அம்மா, அவன் கிட்டே சாவியைக் கொடுத்துடாதீங்க!....
ரகு : அப்படீன்னா நான் நோட்புக் வாங்கித்தர மாட்டேன்.....
அப்பா : (அங்கே வந்தபடி) இந்தாம்மா, உன்னோட புது நோட்புக்!.....தவறுதலா நீ படிச்ச செய்தித்தாள் நடுவிலே வச்சிருக்கே!.....இந்தா ரகு!.... தெருக்கோடியிலே செருப்புத் தைக்கிறவர் உட்கார்ந்திருக்கார்.... ரெண்டு மூணு செருப்புகள்லே மேல்பட்டையை அவசரமா தெச்சாகணும்!....போய்க் கூப்பிட்டுக்கிட்டு வா, வருவார்....
ரகு : அப்பா!....எத்தனை நாளா உங்களைக் கேட்டுக்கிட்டிருக்கேன்.... ஸ்கேட்டிங்குலே சேர்த்துவிடுங்கன்னு!....
அப்பா : இப்ப முடியாது ரகு!.... கொஞ்சம் பொறு!.....
ரகு : அதெல்லாம் முடியாது!....ஸ்கேட்டிங் கத்துக்க சேர்த்துவிட்டாதான் நீங்க சொல்ற வேலையைச் செய்வேன்!
அப்பா : ரகு, ப்ளீஸ் ஸ்டாப் இட்! ..... இந்த மாதிரி பேச்சு சரியில்லே.... இதே பழக்கம் எதிர்காலத்துலே நீ வேலை பார்க்கிற இடத்துலேயும் தொடரும்.... அதனால உனக்குக் கெட்ட பேர்தான் கிடைக்கும்.... இந்தப் பழக்கத்தை மாத்திக்கோ!
ரகு : போப்பா நீங்க எல்லாரும் ஒரே கட்சி!
அம்மா : சரி, பேசிக்கிட்டிருக்காதே! பத்து நாளா நீதானே காய்கறிச் செடிகளை கவனிச்சுக்கிட்டு வரே..... நாளைக்குக் காலையிலே தக்காளிச் செடியிலேந்து பத்து காயைப் பறிச்சுக் கொடு.... உனக்குப் பிடிச்ச தக்காளி மசியல் பண்றேன்.... செடியிலே காய் இருக்குமில்லே.....
ரகு : இருக்கும்! இருக்கும்! நானே ஒரு வாரமா தோட்டம்பக்கம் போகலே!.... 

காட்சி - 3
இடம் : ரகு வீடு. 
மாந்தர் : ரகு, அம்மா, செடிகள்
(ரகு தோட்டச் செடிகள் முன் நிற்கிறான். அவற்றைப் பார்த்து அதிர்ச்சியுடன்....)

ரகு : ஆ!.....அம்மா!....இங்கே தோட்டத்துக்கு வந்து பாருங்க!..... தக்காளி, வெண்டை, கத்தரிச் செடிக்கெல்லாம் என்னவோ ஆயிட்டுது!....ஒரு செடியிலேயும் ஒரு பூ, பிஞ்சு, காய் எதையுமே காணோம்! காயை எல்லாம் யாரோ பறிச்சுக்கிட்டுப் போயிருக்காங்க!
தக்காளி : ரகுத்தம்பி!.... யாரும் எதையும் பறிச்சுக்கிட்டுப் போகலே..... எதுக்கு வீணா அம்மாவைக் கூப்பிடறே?.... 
ரகு : ஏய்!.... யாரு பேசறது?.... குரலே வித்தியாசமா இருக்கு!....
மூன்று செடிகளும் : நாங்களேதான்!....உன் முன்னால நிக்கற செடிகளேதான் பேசறோம்!.... நாங்க யாரும் பத்து நாளா பூவும் விடலே...... இனிமே விடவும் மாட்டோம்!.... 
ரகு : ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு?..... நல்லாத்தானே பூவிட்டு நிறையதானே காய்ச்சுக்கிட்டிருந்தீங்க!.... இந்தப் பத்துநாளா மட்டும் ஏன் காய்க்கிறதை நிறுத்திட்டீங்க?....
தக்காளி : ஆமாம்!.... பத்து நாள் முன்னால் வரைக்கும் உன் அப்பா, அம்மா, சில சமயம் தாத்தா, பாட்டி இவங்க எங்களை கவனிச்சுக்கிட்டிருந்தாங்க.... அவங்க மனசு நல்ல மனசு.... அதனாலே மகிழ்ச்சியா பூ பூத்து, காய் காய்ச்சுக்கிட்டிருந்தோம்.... 
ரகு : ஏன்.... நானும்தான் உங்களை நல்லா கவனிச்சுக்கிட்டு வரேன்... ஒரு வாரம் முன்னால கூட எரு போட்டேன்!.... பூச்சி மருந்து தெளிச்சேன்.... விடாம தண்ணியும் விட்டுக்கிட்டு வந்தேன்..... இப்போ ஒரு வாரமா நல்ல மழை.... அதனால நான் இந்தப் பக்கம் வரலே!.... அதான் கோபமா?.... 
தக்காளி : அதனாலே கோபம் இல்லே!..... எங்களுக்கு வேறே கோபம்! இனிமேல் நான் பூ பூத்துக் கொத்துக்கொத்தா காய் காய்க்கணும்னா நீ சாப்பிடற ஐஸ்க்ரீமை என் வேர்ப்பகுதியிலே வைக்கணும்!
வெண்டை : அதே போல உனக்குப் பிடிச்ச கேக்கை என் அடித்தண்டு பக்கத்துலே வச்சு, பன்னீர் விட்டுக் கரைக்கணும்!.... 
கத்தரி : எனக்கும் நிறைய ஃபாரின் சாக்லெட்டை பொடிப்பொடியாக்கி வைக்கணும்!
மூன்றும் : அப்பத்தான் நாங்க முன்போல பூப்போம்,.... பிஞ்சு விடுவோம,.... காய் காய்ப்போம்!....
ரகு : ஏய்!....நில்லுங்க.... நானும் உங்களை நல்லா கவனிச்சுக்கிட்டு வரேன்..... இதுக்காகவே நீங்க நல்லா பூத்து நிறையக் காய்க்கணும்!..... நீங்க செய்ய வேண்டிய வேலை இது!.... காட்ட வேண்டிய நன்றி இது!
மூன்றும் : அதாவது எங்களோட கடமைன்னு சொல்றே!
தக்காளி : அப்படீன்னா நீ மட்டும் செய்யவேண்டிய வேலைகளைச் செய்ய மறுக்கலாமா?.... 
வெண்டைக்காய் : உன் அமமா சொன்ன வேலையைச் செய்ய ஐஸ்க்ரீம், கேக்குன்னு பிடிவாதமா கேட்டுக்கிட்டிருக்கே!....அப்பா சொன்ன வேலையைச் செய்ய ஸ்கேட்டிங் போகணும்கிறே.... பாட்டிகிட்டே ஃபிரிட்ஜ் சாவியைக் கேட்கிறே...
தக்காளி : உன் எதிர்காலம் நல்லாயிருக்க உங்க அப்பா உன்னைப் புகழ் பெற்ற பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்கார்.
கத்தரி : நீ ஆரோக்கியமா இருக்க உங்க அம்மா தினம் சத்தான உணவைத் தயாரிச்சுக் கொடுக்கறாங்க.... 
வெண்டைக்காய் : நீ சின்னக் குழந்தையா இருந்தப்போ, உங்க பாட்டி நிறைய தாலாட்டுப் பாடல்கள் பாடியிருக்காங்க.... எங்க பாட்டிச் செடி மூலமா இதெல்லாம் தெரியும்!
தக்காளி : இவங்களுக்கெல்லாம் கடமையா நீ செய்ய வேண்டிய வேலைக்குக் கூலி மாதிரி உனக்குப் பிடிச்சதையெல்லாம் வற்புறுத்திக் கேட்கிறே!.... அதனாலே நாங்களும் உன்னைப்போல கடமைக்குக் கூலி கேட்கப்போறோம்!
வெண்டைக்காய் : ஆமாம்!... சூரியன், சந்திரன், காற்று, மழை, இந்த பூமி, நெருப்பு, ஆகாயம் இதையெல்லாம் கொஞ்சம் நினைச்சுப் பாரு...
கத்தரி : இதெல்லாம் தத்தம் கடமையைச் செய்ய நம்மை ஏதாவது கேட்கிறதா ரகு?..... ஆனால் இதெல்லாம் இல்லேன்னா நாமில்லை!.... சரிதானே?...
தக்காளி : என்ன ரகு, ஆகாசத்தைப் பார்க்கிறே.... சரின்னு படுது இல்லே?.... இனிமேலாவது....
மூன்றும் : கடமையைச் செய்!.... கடமையைச் செய்!.... கடமையைச் செய்!..... (என உரத்த குரலெழுப்பு...)
ரகு : சரி, சரி.... செய்கிறேன்! சத்தம் போடாதீர்கள்!.... கத்தாதீர்கள்!...
அம்மா : (ரகுவின் படுக்கை அறைக்கு வந்து) ஏய் ரகு!.... என்னடா ஆச்சு?... தூக்கத்திலே யாரைப் பார்த்து இப்படி டகத்தாதே' ன்னு நீ கத்தறே!.... கண்ணைத் திற!... எழுந்து உட்காரு!.... என்ன ஏதாவது கனவா?... 
ரகு : ஆமாம்மா!....(என்று சிரித்தபடி  கண்ட கனவைப் பற்றிச் சொல்லிவிட்டு)...அம்மா, கடைக்குப் போய் ஏதாவது வாங்கிண்டு வரணுமா?... சொல்லுங்க!... 
(அம்மா சிரித்துவிட்டாள். ரகு ஜன்னல் வழியே தெரிந்த செடிகளைப் பார்த்தான். அவை மூன்றும் ரகுவிற்கு "நன்றி' சொல்வது போல் ஆடின.)

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com