நினைவுச் சுடர்; !: 'குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரம் என்ற ஊரில் வசித்து வந்தான் வள்ளியப்பன் எனும் சிறுவன். அவன் வசிக்கும் ஊரிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும்  நடந்துதான் செல்ல வேண்டும்.
நினைவுச் சுடர்; !: 'குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரம் என்ற ஊரில் வசித்து வந்தான் வள்ளியப்பன் எனும் சிறுவன். அவன் வசிக்கும் ஊரிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் நடந்துதான் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது வழியில் இருக்கும் மரம், செடி, கொடி, பறவைகளைத் தன் உற்ற நண்பர்களாகக் கொண்டு அவற்றுடன் பேசிப் பழகி மகிழ்ந்தான். அப்படிப் பேசியவை பாடலாக, கவிதையாக உருவெடுத்தது.

ஆரம்பக் கல்வியை "காந்தி பாடசாலை' எனும் பள்ளியில் பயின்றான். ஒரு நாள் பள்ளியில் சக மாணவன் ஒருவன் தட்டு, கிட்டு, லட்டு, கட்டு, மட்டு, வட்டு, விட்டு, பிட்டு என்று சொற்களை அடுக்கி சொல்லிக் கொண்டே இருந்தான். இதைக் கவனித்த வள்ளியப்பன் மனதில் உடனே ஒரு பாடல் தோன்றியது. (பாடல் கடைசிப் பக்கத்தில்) பள்ளியில் ஒரு நாள் தமிழாசிரியர் கட்டுரை எழுதச் சொன்னார். அக்கட்டுரையில் நாலடியார் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிய வள்ளியப்பாவுக்கு நான்காவது அடி மறந்து போய்விட்டது. கவிதை புனையும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்த வள்ளியப்பன் சந்தம் கெடாமல் தானே நான்காவது அடியை எழுதி பாடலைப் பூர்த்தி செய்துவிட்டான்.

மறுநாள் கட்டுரையைத் திருத்திய ஆசிரியர், "நம் வகுப்பில் ஒரு நாலடியார் இருக்கிறார். யார் அந்த நாலடியார் தெரியுமா?' என்று கேட்க, மாணவர்கள் வியப்புடன் பார்த்தனர். உடனே ஆசிரியர், "நம்ம வள்ளியப்பன்தான் அந்த நாலடியார்' என்று சொல்லி அவன் எழுதிய பாடல் வரிகளைப் படித்துக் காட்டிப் பாராட்டினார். அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பா. ஆயிரத்துக்கும் மேலாக அற்புதமான பாடல்களையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்தவர்!

அழ.வள்ளியப்பா எங்கு சென்றாலும் அவரைக் குழந்தைகள் சூழ்ந்துகொண்டு விடுவார்கள். அவர், குழந்தைகளோடு குழந்தையாக மாறி பேசிப் பாடி மகிழ்வார். ஞாயிற்றுக்கிழமை மாலை கதை கேட்பதற்கு அவரது வீட்டுக்கு குழந்தைகள் பலர் வருவார்கள். அப்படி வந்தவர்களில் சிறுவன் ஒருவனுக்கு அன்று பிறந்த நாள். அவன் புதிய உடை அணிந்து வந்திருந்தான்.

அப்போது அந்தச் சிறுவனைப் பார்த்து, ""நீ ஞாயிற்றுக் கிழமை பிறந்தாயா? நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்'' என்றாள் சிறுமி ஒருத்தி. உடனே சிறுவன் ஒருவன் ""நான் புதன்கிழமை பிறந்தேன்'' என்றான். இப்படிக் குழந்தைகள் பேசிக் கொள்வதைக் கேட்ட அழ.வள்ளியப்பா உடனே ஒரு பாடல் எழுதினார்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்
திங்கட்கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்
செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்
புதன்கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்
வியாழக்கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்
வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்
சனிக்கிழமை பிறந்த பிள்ளை
சாந்தமாக இருந்திடுமாம்
இந்தக் கிழமை ஏழுக்குள்
எந்தக் கிழமை நீ பிறந்தாய்?

குழந்தைகளுக்காக இவர் எழுதிய ஏராளமான பாடல்களும் கதைகளும் பொழுதுபோக்குக்காக மட்டும் அமையாமல், குழந்தைகளை நல்வழிப் படுத்துவதாகவும் அமைந்தது. அவை இன்றும் சிறுவர் உலகில் வாசிக்கப்படுகின்றன. அவற்றை இவருடைய பிள்ளைகள் உருவாக்கியுள்ள இணையதளத்தில் கண்டும், கேட்டும் மகிழலாம். இவர் பிறந்த நாள் (7.11.2021) நூற்றாண்டு இப்போது தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com