மரங்களின் வரங்கள்!: தோல் கசப்பு, உள்ளே இனிப்பு - ரம்புட்டான்  மரம்

நான்தான் ரம்புட்டான் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் நெப்போலியம் லப்பாசியம் என்பதாகும். நான் சாப்பின்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: தோல் கசப்பு, உள்ளே இனிப்பு - ரம்புட்டான்  மரம்


குழந்தைகளே நலமா?

நான்தான் ரம்புட்டான் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் நெப்போலியம் லப்பாசியம் என்பதாகும். நான் சாப்பின்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் மலேசியாவையும், இந்தோனேஷியாவையும் தாயகமாகக் கொண்டவன். இந்தியா, இலங்கை, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் நான் விளைந்து மக்களுக்குப் பல பலன்களைக் கொடுக்கிறேன். என் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை உடையது. இதன் மேல்பாகம் முள்ளு முள்ளாக இருக்கும். ரம்பூட்டான் என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த அதாவது ஹேரி என்று பொருள். 

உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் என் பழத்தில் சற்று கூடுதலாகவே இருக்கு. என் பழத்தை நீங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் உடல் சீரான வளர்ச்சி பெறுவதோடு, அன்றாட உழைப்புக்குத் தேவையான ஆற்றலையும் பெறுவீர்கள்.

உங்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை என் பழம் அதிக அளவில் கொண்டிருக்கு. ஏன்னா, என் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளது. நீங்கள் அத்தியாவசியமான ஊட்டச்சத்து பெற  வைட்டமின் ஏ அவசியம். என் பழத்தையும், என் பிற பாகங்களையும் மலேசியா,  இந்தோனேஷியா மக்கள் பலநூறு ஆண்டுகளாக  மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தி வந்திருக்காங்க.
குழந்தைகளே! என் பழத் தோலும், உள்ளிருக்கும் பழுப்பு நிற விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். ஆனால், இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் இனிமையான, வெண்மையான சாறு நிறைந்த சதைப் பகுதி மட்டுமே  நீங்கள் உண்ணத் தகுந்தது. என் பழங்கள் பிஞ்சாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தப் பின் மஞ்சள் அல்லது  சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதில் மாவுச் சத்தும், புரதச் சத்தும் அதிகம் உள்ளன. அதோடு, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், காப்பர், நார்ச்சத்து, இரும்புச் சத்து, நியாசின், ஆன்டி ஆக்ஸிடென்ட், கார்போஹைட்ரேட், புரதம் நிரம்ப உள்ளன. 

என் பழம் நீரிழிவு நோய்க்கு முதல் எதிரி.  உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, ஆஸ்துமா உள்ளவர்கள் என் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அந்நோய்கள் விட்டால் போதும் என்று ஓடிவிடும்.

கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும், உங்களுக்கு உடல் எடை அதிகரித்து விட்டால் வருந்தாதீங்க, என் பழத்தை சாப்பிடுங்க. உடல் எடை குறைந்து, புத்துணர்வு அடைந்து அதிக பலம் நிறைந்தவர்களாகக் காணப்படுவீர்கள். மேலும், உங்கள் உடம்பில் கெட்ட கொழுப்பு சேர விடாமலும் உங்களைக் காக்கும். இதனால், மாரடைப்பு அபாயம் ஏற்படாது.  என் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால், எலும்பை வலுப்படுத்துவதோடு, அது உங்கள் உடறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்க உதவுகிறது.

என் பழம் வயது முதிர்வையும் தடுக்கும். அதோடு தோலில் சுருக்கம் குறைந்து,  பளபளப்பும் கூடும். என் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நாக்கும் வறண்டு போகாது. ரம்புட்டானுக்கு புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்க உதவுகிறது. எனவே, என் பழத்தை உட்கொண்டால் புற்றுநோயின் அபாயம் குறையும். 

என் இலைகளைப் பயன்படுத்திதான் இப்போது நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகள் தயாரிக்கப்படுகின்றன என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை குழந்தைகளே. என் இலைகளை மைய அரைத்து, தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் உங்கள் முடி கருகருவென்று இருப்பதோடு, முடியும் உதிராது. என் பழ விதையிலிருந்து ஒரு வித மஞ்சள் நிற எண்ணெய் தயாரிக்கிறாங்க. இந்த எண்ணெய் சோப்பு, மெழுகுவர்த்திகள் தயாரிக்க பெருமளவில் பயன்படுது. 

மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com