அபாரத் திறமை!
By -ரமணி | Published On : 20th November 2021 12:00 AM | Last Updated : 20th November 2021 12:00 AM | அ+அ அ- |

குறும்புக்கார செல்வந்தர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த வேலையாளிடம் ஒரு காலியான குடுவையைக் கொடுத்து, ""இதில் திராட்சை ரசம் வாங்கி வா'' என்றார்.
வேலையாளோ, ""சரி, பணம் கொடுங்கள்... வாங்கி வருகிறேன்'' என்றார்.
அதற்கு அந்தச் செல்வந்தர், ""காசு இருந்தால் எந்த முட்டாளும் பழரசத்தை வாங்கி விடுவானே!...காசே கொடுக்காமல் பழரசம் வாங்கி வருபவன்தான் திறமைசாலி!'' எனக் குறும்பாய் பதில் சொன்னார்.
"சரி' என்று கூறிவிட்டு வேலையாளும் குடுவையை வாங்கிக்கொண்டு போனார். சிறிது நேரம் கழித்து வந்த வேலையாள், ""இந்தாங்க... நீங்க கேட்ட திராட்சை ரசம்!'' என்றவாறு காலிக் குடுவையை நீட்டினார்.
அதை வாங்கிப் பார்த்தார் செல்வந்தர். குடுவை காலியாய் இருந்ததைக் கண்டு கோபமுற்றார். வேலையாளிடம், ""என்ன இது... குடுவை காலியாய் இருக்கிறது... எங்கே நான் கேட்ட திராட்சை ரசம்...?'' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.
அதற்கு வேலையாள், ""என்ன நீங்கள்... திராட்சை ரசத்தைக் குடிக்காமல் ஏதேதோ பேசுகிறீர்களே...! குடுவையில் திராட்சை ரசம் இருந்தால் ஒரு முட்டாள்கூட அதைக் குடித்துவிடுவான்...! திராட்சை ரசமே இல்லாமலிருந்தால்கூட அதைக் குடிப்பதற்குத் திறமையாலிகளால் மட்டும்தான் முடியும்!'' என்று செல்வந்தரின் பாணியிலேயே குறும்பாகச் சொன்னான் வேலையாள்.
அதைக் கேட்ட செல்வந்தரின் முகம் சுருங்கிப்போனது!