முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
அணில்
By பொன்னியின் செல்வன் | Published On : 20th November 2021 06:00 AM | Last Updated : 20th November 2021 06:00 AM | அ+அ அ- |

எங்கள் வீட்டின் பின்புறத்தில்
எட்டு கொய்யா மரமிருக்குது
அங்கும் இங்கும் தலைவிரித்து
அய்ந்து மாதுளம் செடியிருக்குது
கொத்துக் கொத்தாய் பூப்பூத்துக்
குலைகு லையாய் காய்காய்த்து
கொத்தும் கிளிகள் அணில் கூட்டம்
கூடித் தின்னப் பழம்பழுக்குது
விடிந்து எழுந்து பார்ப்பதற்குள்
வேண்டும் பழங்கள் பறிக்கிறதே
கடித்துக் குதறிக் காய்கனியை
கனிந்தி டாமல் பிய்க்கிறதே
அணிலின் வால்த்தனம் வந்ததங்கே
அடுக்க டுக்காக பழம்விழுந்தது
துணிவாய் பறித்துத் தின்றதன்பின்
தூக்கனாங் குருவியைத் துரத்தியதே
கொய்யாப் பழத்தின் நறுமணத்தில்
குருவி விருந்து கேட்கிறது
கொய்யோ முறையோ ஓசையுடன்
குதித்து அணிலும் ஓடுதுகாண்
தம்பி, தங்கை காலையிலே
தாவி வந்துப் பார்க்கையிலே
எம்பிக் குதித்து துள்ளிவரும்
எல்லா அணிலும் பாய்ந்தோடும்
கிளிகள் எல்லாம் அணில்களிடம்
கெஞ்சி, தின்னப் பழம் கேட்கும்
பளிங்குக் கண்ணால் பார்த்துவிட்டு
பாவமாய்ச் சிரிக்கும் தேன்சிட்டு!