அரங்கம்: பிள்ளைக்கடன்

(சங்கரனுடைய கைப்பேசிக்கு மின்சார வாரியத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது)
அரங்கம்: பிள்ளைக்கடன்

காட்சி - 1
இடம்: சங்கரனின் வீடு
மாந்தர்கள்: சங்கரன், அவருடைய மனைவி 
சங்கீதா, மகன் சந்துரு.

(சங்கரனுடைய கைப்பேசிக்கு மின்சார வாரியத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது)

சங்கரன்: (மனைவியை நோக்கி) சங்கீதா... மின்சாரக் கட்டணத்தை நாம் இன்னும் கட்டவில்லையாம். உடனடியாகக் கட்டவில்லையென்றால், நம் வீட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று செய்தி வருந்திருக்கு. சங்கீதா: ஆமாங்க, நானும் உங்களுக்கு நினைவுபடுத்த மறந்துட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.
சங்கரன்: சரி, அதை விடு. என்னோட இரண்டு காலும் ரொம்ப வலிச்சிக்கிட்டே இருக்கு. பலூன் மாதிரி வீங்கிக் கிடக்கு பார்... என்ன ஆச்சுனே தெரியல? இப்ப இருக்கற நிலைமையில் என்னால அவ்வளவு தூரம் நடந்து போய் மின்சாரக் கட்டணத்தைக் கட்டிவிட்டு வர முடியுமான்னு தெரியல?
சங்கீதா:  சரிங்க, நீங்க கவலைப்படாதீங்க... சந்துரு இருக்கானே... அவனைப் போய் கட்டிட்டு வரச்சொல்லலாமே... 
(சந்துருவை கூப்பிட்டுச் சொன்னார்) 
சந்துரு: போங்கம்மா... எனக்கு நேரமில்லை. பேசாம அப்பாவையே  கட்டிட்டு வரச் சொல்லுங்க.
சங்கரன்: இல்லப்பா... உடனே கட்டலைன்னா பியூசைப் பிடுங்கிட்டுப் போய்டுவாங்க. அப்புறம் நமக்குத்தான் நஷ்டம்.
சங்கீதா: அவன்தான் போகமாட்டேங்கறானே... மெதுவா நடந்து போய் நீங்களே கட்டிட்டு வந்துடுங்க. நா வேணா துணைக்கு வரேன்.
சங்கரன்: ஆமாம்!... நீ அவனுக்கு அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கே... அதான் எதை செய்யச் சொன்னாலும் மாட்டேங்கறான்...
சங்கீதா:  ஏங்க அவன்தான் நிறைய வேலையிருக்குன்னு சொல்றானே...
சங்கரன்: எனக்கு இப்ப இருக்கற வலியில, ரெண்டு அடிகூட எடுத்து வைக்க முடியாது. அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல...
சங்கீதா: அப்ப வாங்க, நாம ரெண்டு பேரும் பேசாம ஆட்டோவுலப் போயுட்டு வந்துடலாம். 
சங்கரன்: (மனம் நொந்தபடி) சரி விடும்மா... நடக்கறது நடக்கட்டும். ரெண்டு மூணு நாள்ல என்னுடைய கால் வலி சரியாயிடுச்சுன்னா நானே போய்க் கட்டிட்டு வந்துடறேன். என்ன... கூடுதலா பணம் கட்ட வேண்டியிருக்கும்.
    

காட்சி - 2
இடம்: சங்கரனின் வீடு
மாந்தர்கள்: சங்கரன், சங்கீதா, சந்துரு.

சங்கீதா: (காலை 8.30-க்கு) ஏங்க, மளிகைப் பொருள்கள் தீரப்போறதுங்க. லிஸ்ட் போட்டுத் தர்றேன். அண்ணாச்சிக் கடையில கொடுத்துட்டு வந்துட்றீங்களா? அவரே மளிகைச் சாமான்களை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்துடுவாரு.
சங்கரன்: என்னால முடியாதம்மா. என் உடல் நிலை தெரிஞ்சும் என்னையே போகச் சொல்றியே...

சங்கீதா: (மகனை நோக்கி) டேய், இந்த மளிகை லிஸ்டை ஓடிப்போய் அண்ணாச்சி கடையில கொடுத்துட்டு வாடா... 
சந்துரு: போம்மா... ஒனக்கு வேற வேலையே இல்லை. நீயே போய்க் கொடுத்துட்டு வா.  என் நண்பன் சேகர் இப்ப வீட்டிற்கு வரேன்னு சொல்லியிருக்கான்.
சங்கீதா: டேய், மளிகைப் பொருள்கள் சுத்தமா தீரப்போகுது.. தயவு பண்ணி இந்த லிஸ்டை கொடுத்துட்டு வாடா.
சந்துரு: எனக்குப் பள்ளிக்குப் போக நேரமாச்சு. பத்து மாசம் கழிச்சு இப்பத்தான் திறந்திருக்காங்க. நேரத்தோட போகணுமா, வேண்டாமா?
சங்கீதா (மனம் நொந்தபடி) யார் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கறானே! இன்னிக்கு எப்படி சமைப்பது?
சங்கரன்: சங்கீதா... அந்த லிஸ்டை எங்கிட்ட கொடு. நானே இந்த வலியோட மெதுவா போய் கொடுத்துட்டு வரேன்.
(லிஸ்டை பெற்றுக் கொண்டு மளிகைக்கடையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பிக்கிறார்). 

காட்சி - 3
இடம்: - சங்கரனின் வீடு 
காலம்: மறு நாள்
மாந்தர்கள்: சங்கரன், சங்கீதா, சந்துரு.

(சங்கரனது கைப்பேசியில் பேசும் கட்டணத்தைச் செலுத்தி, தொடர்பைப் புதுப்பிக்க வேண்டுமென்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டே 
இருந்தன)

சங்கரன்: சங்கீதா, என்னுடைய ஃபோனுக்குக் கட்டிய கட்டணமும் இன்னியோட முடியுது போல...  செய்தி வந்துகிட்டே இருக்கு. உடனே ரீசார்ஜ் பண்ணனுமே...
சங்கீதா: ஆமாங்க... அப்புறம் ஆபத்து அவசரத்துக்கு யார் கிட்டயும் பேச முடியாது... 
(சந்துருவைப் பார்த்து) டேய், இந்த ஒரு வேலையாவது பண்ணுடா சந்துரு! உடனே ஓடிப்போய் அப்பாவோட ஃபோனுக்குப் பணம் கட்டிட்டு வாடா!
சந்துரு: உங்க ரெண்டு பேருக்கும் என்னை வேலை வாங்குறதே வேலையாப் போச்சு. (அலுத்துக் கொண்டான்)
சங்கரன்: அப்படிச் சொல்லாதடா... இது நம்ம வீட்டு வேலைதான. நீ செய்யாட்டி வேறு யாரு செய்வா சொல்லு?
சந்துரு: அப்பா எனக்குப் படிக்கறதுக்கே நேரம் இல்லை. நீங்க வேற அப்பப்பா...  இப்ப என்னை விட்டுடுங்க பிளீஸ்...
சங்கரன்: சரிப்பா... 

காட்சி - 5  
இடம்: சங்கரனின் வீடு
மாந்தர்கள்: சங்கரன், சங்கீதா, சந்துரு, நண்பன் சேகர்.

(சந்துரு, நண்பர் சேகருடன் பள்ளியிலிருந்து திரும்புகிறான். வெயிலில் வந்ததால் அவனது உடல் வியர்த்து விறுவிறுத்தது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் மின்சார விசிறியைச் சுழலவிட பட்டனைத் தட்டினான்.  விசிறி சுழலவில்லை. அதிர்ச்சியுடன் அம்மா அப்பாவைப்  பார்க்கின்றான்)    
சங்கரன்: என்னை எதுக்குடா அப்படிப் பாக்கற? நாமதான் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தல... வந்து பியூசைப் பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. 
சந்துரு: அம்மா... சேகர் வந்திருக்கான். இரண்டு பேருக்கும் ரொம்ப பசி. சாப்பிட எதாவது இருந்தா குடுங்க.
சங்கீதா: சந்துரு, உனக்குத்தான் தெரியுமே, நேத்தோட மளிகைச் சாமான் தீர்ந்துடுச்சுன்னு... அப்பாவும் நடக்க முடியாமல் நடந்து போய் லிஸ்டைக் கொடுத்துட்டு வந்துவிட்டார். ஆனால், சாமான்கள்தான் இன்னும் வீட்டுக்கு வந்தபாடில்லை. அதனால சமையல் பண்ணல...  
சந்துரு: ஏம்மா... அப்பாகிட்டதான் ஃபோன் இருக்கே... ஃபோன் பண்ணி மளிகைச் சாமானை வீட்டுக்குக் குடுத்துவிடச் சொல்லலாம்ல... எதுக்கு வீணா புலம்பிக்கிட்டிருக்கீங்க...
சங்கரன்: சந்துரு... செல்போன்ல காசு இல்லேன்னு உனக்குத் தெரியாதா? அவுட் கோயிங்கைக் கட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் பொறுத்துக்கோ, கால் வலி தீர்ந்ததும் எல்லா வீட்டு வேலைகளையும் நானே செய்யறேன். நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம். 
(அப்போது சேகருக்கு  அவனுடைய அப்பாவிடமிருந்து ஃபோன் வந்தது. எடுத்துப் பேசியவுடன் பதறினான்.)
சேகர்: அப்பா... உடனே கிளம்பி வர்றேம்பா.... நீங்க கவலைப்படாதீங்க.
சந்துரு: (கவலையுடன்) போன்ல யாரு சேகர்?
சேகர்: எங்கப்பாதான் சந்துரு! அவருக்கு திடீர்னு உடல் நிலை சரியில்லாமப் போச்சாம். கையில பணம் இல்லாததுனால ஏடிஎம் போய் பணம் எடுக்கணுமாம். எங்கப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணுன்டா... நான் கிளம்பறேன்....
(சந்துரு சேகர் கிளம்பிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்) 
சந்துரு: (தனக்குள்) சேகர் அப்பா மீது எவ்வளவு மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறான். அப்பாவுக்கு எவ்வளவு உதவியா, ஒத்தாசையா இருக்கிறான். இந்தக் கரிசனத்தை நான் என் பெற்றோர் மேல் என்னிக்காவது காட்டியிருக்கிறேனா... இன்று வீட்டில் தலைகீழாக நடப்பதற்குக் காரணம்  எனது பொறுப்பின்மைதானே... பெற்றோருக்குப் பிள்ளை செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அலட்சியப்படுத்தியதால்தானே...
(சந்துருவுக்குத் தன் தவறுகள் புரியத் தொடங்கின).
""அம்மா... நானே அண்ணாச்சிக் கடைக்குப் போய்ட்டு வரேம்மா. அப்பா... காசு குடுங்க, அப்படியே உங்க ஃபோனுக்கு ரீ-சார்ஜ் பண்ணிட்டு வர்றேன். கூடவே  இ.பி. பில்லையும் கட்டிட்டு வரேன். 
(சந்துரு சொன்னதைக் கேட்டு இருவரும்  மகிழ்ச்சி அடைந்தனர். சேகர் வெளியில் சென்றவுடன்) 
சங்கீதா: சேகர் மாதிரி நல்ல நண்பன் கிடைத்ததனால்தான், சந்துரு சரியான பாதைக்கு இப்பத் திரும்பியிருக்கான்!
சங்கரன்: ஆமாம் சங்கீதா. நல்ல நண்பர்கள்தான் சிறந்த பொக்கிஷம். இதை சந்துருவுக்கு உணர்த்திய சேகருக்கு நன்றி சொல்வோம்!   

-திரை- 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com