நூல் புதிது

தேன் சிட்டு (சிறார் பாட்டு) - ஆசிரியர்:க.முரளிதரன், வெளியீடு: ஆரோ பதிப்பகம், 61, நியூ பாத்திமா நகர், 7-ஆவது தெரு, விளார் சாலை, தஞ்சாவூர்-613 006. 90808-01016.
நூல் புதிது


தேன் சிட்டு (சிறார் பாட்டு) - ஆசிரியர்:க.முரளிதரன், வெளியீடு: ஆரோ பதிப்பகம், 61, நியூ பாத்திமா நகர், 7-ஆவது தெரு, விளார் சாலை, தஞ்சாவூர்-613 006. 90808-01016.
இந்தச் சிறார் பாடல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர் குழந்தை
களோடு குழந்தையாக தினமும் பழகிப் பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர். மொத்தம் 132 பாடல்களைக் குழந்தைகளுக்குத் தந்திருக்கிறார்.
முயலும் செயலும், சேவல் சிறப்பு, காட்டுக்கு ராஜா, பசுவின் சிறப்பு, குட்டிக் குரங்கின் சேட்டை, வீட்டைக் காக்கும் செல்லக்குட்டி, வண்ணத்துப் பூச்சி, அணிலண்ணே அணிலண்ணே, பாம்பு, குட்டிப்பூனை, சுண்டெலியின் சேட்டை முதலிய காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் தொடர்பான பாடல்கள் அனைத்தும் அருமை.
அதுமட்டுமா? உடலுக்கு உறுதியளிக்கும் இயற்கை உணவுகள், தானிய வகைகள், சத்துள்ள காய்கறிகள் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பாடியிருப்பதோடு, பாட்டி வைத்தியம் குறித்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
மேலும், கால்பந்து, நொண்டி ஆட்டம், கிரிக்கெட், கபடி, சிலம்பம் முதலிய விளையாட்டுகள்; திருவிழாக்கள், பண்டிகைகள் பற்றியும்; குற்றாலம், கோட்டைகள், கோயில்கள், நூலகம், கப்பல், நவீன விவசாயம், இயற்கை வளம், தொலைக்காட்சி, தாய்நாடு, தாய்மொழித் தமிழ் எனப் பல்சுவைப் பாடல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நூல். சிறார்கள் படிக்கும் வகையில் எளிய நடையில் சந்தத்தோடு பாடியிருப்பது அதைவிடச் சிறப்பு.

------------------------------------------------------------------------------------

நீதிநெறி உரைக்கும் திருக்குறள் கதைகள் - ஆசிரியர்: சிவபாரதி, வெளியீடு: கோரல், 6, 6-ஆவது குறுக்குத் தெரு, 8-ஆவது முதன்மைச் சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், சென்னை -600 109. 90403-50666.

திருக்குறளில் 108 அதிகாரங்களைத் தேர்ந்தெடுத்து, அதற்குத் தகுந்த 108 சின்னஞ்சிறு கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர். கதைகள் அனைத்திலும் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைவரும் முழுக்க முழுக்கப் பள்ளி மாணவர்கள் என்பது தனிச்சிறப்பு.

சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதைத் தன் நண்பன் பாபுவுக்குக் கூறி, 10 வயதில் கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவன் குற்றாலீசுவரனின் சாதனையை எடுத்துக்காட்டி, அதேபோல தானும் மலை ஏறும் பயிற்சியில் சாதனை படைப்பேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறான் சுந்தர். இக்கதை, "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்' என்கிற 26-ஆவது குறளுக்கு விளக்கமாக அமைகிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற பாலு, தன் வெற்றிக்கு யார் காரணம் என்பதை ஆசிரியரிடம் கூறுவதுடன், அந்த வெற்றியை யாருக்கு சமர்ப்பிக்கிறான் என்பதுதான் 70-ஆவது குறளுக்கான கதையில் இருக்கும் ரகசியம். இவ்வாறு எல்லாக் கதைகளும் மாணவர்களுக்குப் பல்வேறு நீதிகளை எடுத்துச் சொல்லி, நல்வழிப்படுத்துகின்றன.

------------------------------------------------------------------------------------


பள்ளிக்கூட மைனாக்கள் (சிறுவர் பாடல்கள்) - ஆசிரியர்: ஆரிசன்; பக்.96; ரூ.50; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011. 044-25582552.

குழந்தைகள் மனம் கவரும் விதத்திலும், எளிமையாக மனனம் செய்யும் விதத்திலும் இதிலுள்ள பாடல்கள் அமைந்துள்ளன. ""குழந்தைகளின் கரங்களில் இந்த நூல், குழந்தைகளின் உலகில் பிரவேசிக்க தவழ்ந்து பாடிப் பரவசமானால், குழந்தைகளின் நெஞ்சாங்குழியில் இதை வித்திட்டால் அது இந்தப்பள்ளிக்கூட மைனாக்களின் வெற்றி'' என்கிறார் நூலாசிரியர்.

ஆசிரியரே உண்மையான திருக்கோயில், சேமிக்க வேண்டிய சொத்து அறிவுதான், மூன்று வகை தேனீக்கள், கலாம் மாமா, காக்கையின் பாசம், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார், உழைப்பே உயர்வு தரும், மைனாவின் கனவு, கண்ணாமூச்சி முதலிய பாடல்கள் படிக்கவும் பாடவும் இனிமை தருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com