ரப்பர்!

மித்ராவின் சிறிய கைப்பைக்குள் ஒரு நீல மைப்பேனா, கருப்பு மைப்பேனா, பென்சில், ஸ்கேல், வண்ணப்பென்சில்கள், இவற்றோடு ஒரு குட்டி உருண்டை  ரப்பரும்இருந்தது.
ரப்பர்!

மித்ராவின் சிறிய கைப்பைக்குள் ஒரு நீல மைப்பேனா, கருப்பு மைப்பேனா, பென்சில், ஸ்கேல், வண்ணப்பென்சில்கள், இவற்றோடு ஒரு குட்டி உருண்டை ரப்பரும்இருந்தது.
ஒரே இடநெருக்கடி! ஒன்றோடொன்று இடித்துக்கொண்டிருந்த அவை தமக்குள் பேச ஆரம்பித்தன.
""என்ன ஒரு இட நெருக்கடி!... காற்றே வரவில்லை!'' என்றது நீலப்பேனா.
""ஆமாம்!... சிவப்பு நிறப்பேனா வேறே நம் நிறத்தையே மாற்றுகிறது!' என்றது ஸ்கேல்.
""இதிலே இவன் வேறே உருண்டு உருண்டு தொல்லை தருகிறான்!'' என்றது பென்சில்.
""இவன் எதற்குத்தான் இங்கே இருக்கிறானோ?'' என்று முனகியது சிவப்பு மைப்பேனா.
""இவன் பெயர் அழிப்பான்!.... எழுதுவதையெல்லாம் அழிப்பான்!'' என்று சிரித்தன பென்சில்கள்.
""சரியாச் சொன்னீங்க!... நாம படம் வரைகிறோம்.... எழுதுகிறோம்.... ஆக்கபூர்வமா செயல்படுகிறோம்!... இவனோ அழிக்கும் செயல் புரிபவன்!'' என்று எல்லாம் சேர்ந்து ரப்பரைப் பார்த்து கேலி செய்தன. குட்டி ரப்பருக்கு அழுகையே வந்துவிட்டது!
அப்போது மித்ரா அந்தப் பையின் ஜிப்பைத் திறந்து ஒரு பென்சிலை எடுத்தாள். மூலையில் ஒடுங்கி அழுதுகொண்டிருந்த ரப்பர் இதுதான் சமயம் என்று எகிறிக் குதித்தது! உருண்டோடிச் சென்று எங்கோ மறைந்து கொண்டது.
மித்ரா, ஓவியச் சுவடியை எடுத்து வரைய ஆரம்பித்தாள். ரப்பரை ஒழித்துக் கட்டிய பென்சில் மகிழ்ச்சியில் அவள் கையை மீறிக் குதித்துக் கிறுக்கிவிட்டது!
""ச்சே'' என்ற மித்ரா கைப்பையைத் திறந்து ரப்பரைத் தேடினாள். கிடைக்கவில்லை. பையைக் கொட்டிக் கவிழ்த்தாள். ம்ஹூம் காணவில்லை!
"" அம்மா!.... அம்மா'' என்று கத்தினாள்.
"" என்ன ... என்ன வேண்டும்?'' என்றபடி வந்த அம்மாவிடம், "" என் ரப்பரைக் காணோம்மா!.... நீ எடுத்தாயா?'' என்று கேட்டாள்.
""நான் ஏன் உன் ரப்பரை எடுக்கப்போகிறேன்?...
இங்கேதான் இருக்கும். இரு தேடிப்பார்ப்போம்...''
என்றவாறு சுற்றிலும் தேட ஆரம்பித்தாள்.
ரப்பரைக் கேலி செய்த பென்சில்கள், பேனா, ஸ்கேல் எல்லாம் திரு...திரு வென விழித்தன.
அறையின் மூலையில் உருண்டுபோய்க் கிடந்த
ரப்பரைத் தேடி எடுத்துக் கொடுத்தாள் அம்மா.
""ஹை!... என் ரப்பர் கிடைச்சிடுச்சி!...'' என்று
மகிழ்ச்சியோடு அதை அம்மாவின் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள். அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.
பிறகு மீண்டும் ஓவியச் சுவடியின் முன் அமர்ந்து பென்சில் கிறுக்கியதை எல்லாம் அழித்தபின் மீண்டும் பென்சிலை எடுத்து வரைய ஆரம்பித்தாள்.
பெரியதோ, சிறியதோ அனைத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆக்கல் மட்டும் அல்ல. அது தவறாகப் போனால் அழித்தலும் தேவை என்பதை உணர்ந்த பென்சில் அமைதியாக மித்ராவின் கைக்கேற்ப வளைந்து வரைய ஆரம்பித்தது.
மனவருத்தம் நீங்கிய ரப்பர் மற்ற எழுது பொருள்கள் நடுவில் போய்ப் பெருமையாக உட்கார்ந்து கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com