குருவின் பெருங்குணம்!

பள்ளி உணவு இடைவேளை. ரகுவும் ராகுலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தலைமையாசிரியர், சண்டைக்கான காரணத்தைக் கேட்டார்.
குருவின் பெருங்குணம்!


பள்ளி உணவு இடைவேளை. ரகுவும் ராகுலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த தலைமையாசிரியர், சண்டைக்கான காரணத்தைக் கேட்டார்.

"வகுப்பு ஆசிரியரைப் பற்றி ராகுல் தப்பாப் பேசறான் சார்...' என்றான் ரகு.

"சார்... நான் உண்மையைத்தான் சொல்றேன்...' என்றான் ராகுல்.

"அவர் உனக்கும் வகுப்பாசிரியர்தானே... ஏன் இப்படிப் பேசுகிறாய்?' என்றார் தலைமையாசிரியர்.

"ஹெட்மாஸ்டர் சார்... அவர் சொன்னதைக் கேட்கிற மாணவர்களுக்கு மட்டும் அதிக மார்க் போடறார்....'

"போட்டால் என்ன? குரு சொல்வதைக் கேட்பதுதான் வாழ்க்கைக்கு நல்லது. அவர் உன் வாழ்க்கைக்குக் வெளிச்சம் காட்டப்போகும் குரு. அதை மறந்துவிடாதே'
"அப்படின்னா... ஆசிரியர் என்னவேனா தப்பு பண்ணலாமா சார்...?'

"ஏன் கூடாது? அதற்கும் ஒரு காரணம் இருக்கும். குரு புனிதமான கங்கை நதிக்குச் சமமானவர். அந்த நதியில் மக்கள் குப்பைக் கூளங்களை எறிந்து அசுத்தப்படுத்தினாலும் அதனால் அந்த நதியின் புனிதம் கெட்டுப் போகாது. குருவும் அப்படித்தான். நிந்தனைகளாலும் வசைகளாலும் குரு ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.

உன்னைப் போலவே ஒருவன் தன் குருவைப் பற்றி குறை கூறி, வாதாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனைப் பார்த்து பகவான் ராமகிருஷ்ணர் "ஏன் இப்படிப் பயனற்ற வாக்குவாதத்தில் காலத்தை வீணாக்குகிறாய்? முத்தை எடுத்துக்கொண்டு சிப்பியை அப்பால் எறிந்துவிடு. முத்துதான் முக்கியமே தவிர, சிப்பியல்ல... குரு உனக்கு உபதேசித்த மந்திரத்தை மட்டும் தியானம் பண்ணு. அவருடைய குற்றம் குறைகளைப் பற்றி சிந்திக்காதே. அதேபோல, உன் குருவைப் பற்றிய நிந்தனை மொழிகளை யார் சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்காதே. அவர் உன் தாய்- தந்தையருக்கும் மேம்பட்டவர். உன் எதிரிலேயே உன் தாய் -தந்தையரை யாரேனும் நிந்தித்தால் நீ பொறுத்துக் கொண்டிருப்பாயா? அவசியமானால் அப்படிப் பேசுபவர்களுடன் சண்டை போட்டாவது உன் குருவின் புகழைக் காப்பாற்று' என்றாராம். உன் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க வேண்டுமே தவிர, அவரது குற்றம் குறையைப் பற்றிப் பேசுவது தவறு.

"சாரி... சார்...' என்ற ராகுல் தலைகுனிந்து நின்றான்.

அப்போது அவ்வழியே வந்த ராகுலின் வகுப்பாசிரியர், "என்ன ஹெட்மாஸ்ட்டர் சார்... என் வகுப்புப் பசங்களை நிக்கவச்சி விசாரிக்கிறீங்க போலிருக்கே...? ரொம்ப நல்ல பசங்க சார். எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டாங்க... புத்திசாலி பசங்க...' என்று பெருமிதத்தோடு நற்சான்றிதழ் தந்ததைக் கேட்ட ராகுல், மேலும் வெட்கப்பட்டு, ஆசிரியரின் பெருந்தன்மையையும், பெருங்குணத்தையும் நினைத்து முதன்முறையாக அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com