சொன்னால் கேட்கணும்!

ஒரு வீட்டில் ஒரு மீன்தொட்டி இருந்தது. அதில் பல அழகிய வண்ண மீன்கள் இருந்தன. அந்த மீன்தொட்டி நீருக்குள் கூழாங்கற்கள் போடப்பட்டு, கடல் நீருக்குள் இருப்பதுபோல் சிறு செடிகள் போடப்பட்டு இருந்தது.
சொன்னால் கேட்கணும்!

ஒரு வீட்டில் ஒரு மீன்தொட்டி இருந்தது. அதில் பல அழகிய வண்ண மீன்கள் இருந்தன. அந்த மீன்தொட்டி நீருக்குள் கூழாங்கற்கள் போடப்பட்டு, கடல் நீருக்குள் இருப்பதுபோல் சிறு செடிகள் போடப்பட்டு இருந்தது. அதிலிருந்த மீன்கள் மகிழ்ச்சியாகத் துள்ளி நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும். அந்த மீன்களுக்கு அவற்றின் நிறத்திற்கு ஏற்ப அவ்வீட்டினர், ரோஸி, பிங்கி, பிளாக்கி, பிரெளனி எனப் பெயர் வைத்திருந்தனர்.

வயது முதிர்ந்த ஒரு தங்க மீனும் அந்தத் தொட்டியில் இருந்தது. இவற்றில் ரோஸி மீனும், பிங்கி மீனும் நெருங்கிய தோழிகள். அவற்றிற்கு எப்போதும் தொட்டிக்கு வெளியே பார்ப்பதில் மிகுந்த ஆசை. மீன்தொட்டி சுவரை முட்டி, முட்டி வெளியே பார்த்துக்கொண்டே இருந்தன.

அந்த வீட்டிலிருந்த பாப்பாவும் அடிக்கடி ஓடி வந்து அந்த மீன்தொட்டியில் உள்ள மீன்களைப் பார்த்து ரசிப்பாள். தொட்டியின் கண்ணாடிச் சுவரை ஒட்டிப் பார்க்கும் ரோசி மீனையும், பிங்கி மீனையும் வெளியிலிருந்தபடி விரலால் தொடுவாள். உடனே அவை பயந்துபோய் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிவிடும்!
ஒருநாள் அந்த இரண்டு மீன்களும் பேசிக்கொண்டன.

""நாம் ஒருநாள் இந்தத் தொட்டியை விட்டு வெளியே போய்ப் பார்த்தால் என்ன?.... வெளி உலகம் எவ்வளவு வெளிச்சமாகவும், பெரிதாகவும் உள்ளது?.... இங்கேயோ வெளிச்சம் குறைவாகவும், இடம் குறுகலாகவும் உள்ளதே?''

இதைக் கேட்டுக்கொண்டே வந்த அந்த வயதான தங்க மீன், அவைகளிடம், "" அதெல்லாம் போகக் கூடாது!..... அங்கெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது..... மூச்சுவிட முடியாது!'' என்றது.

இதைக் கேட்ட ரோசியும், பிங்கியும் முகத்தைத் திருப்பிக்கொண்டு, ""ம்க்கும்!.... இந்த வயசான மீனுக்கு வேலையே இல்லை... எதைச் சொன்னாலும் தடை சொல்லிக்கொண்டு,.... அறிவுரை சொல்லிக்கொண்டு!.... இதை யார் கேட்டார்கள்?...'' என்று முணுமுணுத்தபடி வேறு பக்கம் போய்விட்டன.

இருந்தாலும் அவை ஆசையை விடவில்லை. இரவில் அந்த வயசான தங்க மீனுக்குத் தெரியாமல் திட்டம் போட்டன. மறுநாள் காலை வழக்கம்போல் மீன்களுக்கு உணவு போட அந்த வீட்டுப் பாப்பா வந்தாள். உணவு போட்டதும் எல்லா மீன்களும் மேலே போய் உணவை உண்டன. திட்டம் போட்டபடி ரோஸியும், பிங்கியும் உணவு உண்ண மேல வருவதுபோல் வந்து ஒரே எகிறு எகிறி வெளியே குதித்து விட்டன. தரையில் விழுந்த துடிக்க ஆரம்பித்துவிட்டன.

""அச்சச்சோ!.... வெளியே வெளிச்சம் இருக்கிறது.... இடம் பெரிதாக இருக்கிறது.... ஆனால் நம்மால் நீந்த முடியவில்லை!.... மூச்சு விடவும் முடியவில்லையே!.... அந்த வயசான மீன் சொன்னதை கேட்காமல் போனோமே!.... செத்து விடுவோம் போலிருக்கிறதே!'' என எண்ணியபடி துடித்துக் கொண்டிருந்தன.

ஆனால் அவை வெளியே குதித்ததும் பாப்பா துடித்துப்போய் கத்த ஆரம்பித்துவிட்டாள்.

""அப்பா!.... ஓடி வாங்க!....ரோசி மீனும், பிங்கி மீனும் வெளியே குதிச்சிடுச்சிங்க!'' என சத்தம் போட்டாள்.

உடனே அவள் அப்பா விரைந்து வந்து துடித்துக் கொண்டிருந்த இரு மீன்களையும் வேகமாகக் கையிலெடுத்து மீன் தொட்டிக்குள் போட்டார்.

""அப்படா!...'' என்று இரு மீன்களும் உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் மீண்டும் நீந்த ஆரம்பித்தன.

இதையெல்லாம் உள்ளே இருந்த பார்த்துக் கொண்டிருந்த மற்ற மீன்கள் அவை இரண்டையும் சூழ்ந்து கொண்டன. ""வெளியே எப்படி இருந்தது?'' என்று கேட்டன. ரோசி மீன், அவைகளை நோக்கி, ""ஐயோ!....செத்துப் பிழைத்தோம்!.... வெளிச்சம் தேடி வெளியே போனோம்... ஆனால் நமக்குத் தேவையான மூச்சுக் காற்றும், நீந்துவதற்கான தண்ணீரும் இங்கேதான் உள்ளது!... யாரும் இனி இதுபோல செய்துவிடாதீர்கள்!'' என்றது படபடப்புடன்.

""இதைத்தானே நான் முன்பே சொன்னேன். அனுபவப்பட்டவர்கள், பெரியவர்கள் சொன்னால் கேட்கணும்.... அலட்சியப்படுத்தக்கூடாது!'' என்றது அந்த வயதான தங்க மீன்.

ரோசி, பிங்கி உட்பட அனைத்து மீன்களும் அதைக் கேட்டு தலையை அசைத்தபடி நீந்தின.

வெளியே இருந்து எல்லா மீன்களும் மீண்டும் மீண்டும் துள்ளி நீந்துவதைப் பார்த்து, பாப்பாவும் கைகொட்டிச் சிரித்தாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com