அரங்கம்: சேமிப்போம் உயர்வோம்

எழுந்திருய்யா. இத்தனை நேரம் தூங்கினா எப்படி? நீ எழுந்து நாஸ்தா பண்ணினாத்தானே நானு என்னோட வேலைக்குப் போக முடியும்.
அரங்கம்: சேமிப்போம் உயர்வோம்

காட்சி 1
இடம் : அஞ்சலை வீடு. நேரம் : காலை : 8 மணி
பாத்திரங்கள் : வீட்டு வேலை செய்யும் அஞ்சலை, அவள் கணவன் ஆட்டோ ஓட்டுநர் முத்து, மகள் செல்வி.

அஞ்சலை: எழுந்திருய்யா. இத்தனை நேரம் தூங்கினா எப்படி? நீ எழுந்து நாஸ்தா பண்ணினாத்தானே நானு என்னோட வேலைக்குப் போக முடியும்.
முத்து: நேத்து, சவாரி முடிச்சு வர நேரமாயிடுச்சு.  அதான் அசந்து தூங்கிட்டேன். ஆமாம், செல்வி எங்கே ?
அஞ்சலை: இன்னிக்கு பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வருதாம். அதனால ப்ரெண்ட்ஸ் கூட ஸ்கூலுக்குப் போயிருக்கு.
முத்து: செல்வி நல்லா படிக்குது அஞ்சலை. நிச்சயம் பாஸாயிடும். நாம வேலை செய்யற வீட்டுல, தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி அவங்க மூலமா அவ படிப்புக்கு ஏத்தமாதிரி வேலை கிடைச்சா, நம்ம பணக் கஷ்டம் கொஞ்சம் குறையும்.
அஞ்சலை: நீ இப்படி சொல்றே. உன்னோட பொண்ணு காலேஜ்ல மேலே படிச்சு டீச்சராப் போகணும்னு சொல்லிக் கிட்டிருக்கு.
முத்து: இது முடியுமா அஞ்சலை? நீயே சொல்லு. நீ நாலு வீட்ல  வீட்டுவேலை செஞ்சு சம்பாதிக்கிற. நான் வாடகை ஆட்டோ ஓட்றேன். நம்ம ரெண்டு பேருக்கும் கையில வரப் பணத்தில வீட்டு வாடகை, சாப்பாடு செலவுன்னு போயிடுது. எப்படியோ செல்வியை 12 வகுப்பு வரைக்கும் படிக்க வைச்சுட்டோம். நம்மால எல்லாம் காலேஜ் படிக்க வைக்க முடியுமா?
அஞ்சலை: எனக்கு புரியுதுய்யா. காலேஜ் சேர்ந்தா மூணு வருஷத்துக்கு பீஸ் கட்டணும். புத்தகம், நோட்டுப் புத்தகம் வாங்கணும். காலேஜ் போற பொண்ணுக்கு நல்ல துணிமணி வேணாமா? இந்த செலவுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போறது? செல்விக்குப் புரியற மாதிரி நீதான்யா எடுத்துச் சொல்லணும்.
(அம்மா, அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு செல்வி மிக வேகமாக உள்ளே ஓடி வந்தாள்)

அஞ்சலை: என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடி வரே?
செல்வி: நான் 12ஆவது பாஸ் பண்ணிட்டேம்மா. எங்க ஸ்கூல்ல நான் பர்ஸ்ட் ரேங்க்.
அஞ்சலை: (செல்வியை உச்சி முகர்ந்தபடி), கேட்கவே சந்தோஷமா இருக்கு செல்வி!...
முத்து: எனக்குத் தெரியும் கண்ணு உனக்கு நல்ல மார்க் கிடைக்கும்ன்னு.
செல்வி: இன்னொரு குட் நியூஸ் அப்பா. எங்க பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த காலேஜ் இருக்கு. எங்க ஸ்கூல்ல முதல் ஐந்து ரேங்க் வாங்கறவங்களுக்கு அந்தக் காலேஜ்ல அட்மிஷன் கொடுத்துருவாங்க. நம்ம காலேஜ் சீட்டுக்கு அலைய வேண்டாம்.
அஞ்சலை: அதெல்லாம் சரிதான் செல்வி.  காலேஜ் பீஸ் நிறைய ஆகும் இல்லையா.  மூணு வருஷ படிப்புக்கு நிறைய செலவு செய்யணும். நம்மாலே முடியுமா?
செல்வி: ஐந்து ரேங்க் வர வாங்கினவங்களுக்கு ப்ரீ அட்மிஷன். சம்பளம் கட்டாம மூணு வருஷம் படிச்சு டிகிரி வாங்கிடலாம். எங்க ஹெட்மிஸ்ட்ரஸ் அப்ளிகேஷன் பார்ம் கொடுத்திருக்காங்க. அந்த பார்ம்ல எல்லாத்தையும் எழுதி ஸ்கூல்ல கொடுத்துட்டா அவங்க மீதி எல்லாம் பார்த்துப்பாங்க. என்னை காலேஜ் படிக்க வைங்கப்பா. நான் நல்லா படிப்பேன்.
முத்து: நீ ஒன்னும் கவலைப்படாதே செல்வி.  நீ ஆசைபட்டபடி மேலே படி. நாங்க பார்த்துக்கறோம்.
செல்வி: அம்மா, அப்பா நான் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிட்டு வரேன்.
(கல்லூரி சேரப்போகும் ஆசையில் முகத்தில் மலர்ச்சியுடனும், துள்ளல் நடையுடனும் செல்வி வெளியே சென்றாள்.)

அஞ்சலை: (பெருமூச்சுவிட்டபடி) செல்விகிட்ட நீ சரின்னு சொல்லிட்டே. காலேஜ் பீஸ் வேணாங்கறது நல்ல செய்திதான். ஆனால் புத்தகம், நோட்டுப் புத்தகம், போட்டுக்க நல்ல துணிமணிகள், செல்போன் இதையெல்லாம் வாங்கறதுக்கே பத்தாயிரம் ரூபாய் வேணுமே. இந்த பணத்துக்கு எங்கே போறது.  நமக்கு வரவும் செலவும் சரியா இருக்கு.  சேமிச்சு வைக்க முடியலை. அடகு வைக்கலாம்னா அதுக்கு ஏத்தமாதிரி நகைகள் இல்லை. எப்படிய்யா சமாளிக்கப் போறோம்?
முத்து: வேறே வழி?.... கடன்தான்.  நான் எங்க முதலாளிகிட்ட கேக்கறேன். நீ வேலை செய்ற வீட்ல எல்லாம் கேட்டுப்பாரு. மாசமாசம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பித் தரோம்னு சொல்லு.
அஞ்சலை: (சலிப்புடன்) அது சரி. நம்ம மாச சம்பளத்திலே துண்டு விழுந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சியா.  தலை சுத்துதுயா.
முத்து: முதல்ல கடனுக்கு வழி பண்ணுவோம் அஞ்சலை. மாச செலவுக்குக் குறையும் போது என்ன பண்றதுன்னு அப்போ பார்த்துக்கலாம். சிவராமன் ஐயா சம்சாரம் நல்லா ஆதரவா பேசுவாங்கன்னு சொல்லுவியே.  அவங்க மூலமா ஐயாவை கேட்டுப் பாரு.
அஞ்சலை: அம்மா, ஐயா ரெண்டுபேரும் நல்லவங்கதான். ஆனா, ஐயா பண விஷயத்தில கறார். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாங்கன்னு என்னை கூட்டிப் போனீயே, அப்ப நடந்தது ஞாபகம் இருக்கு இல்லே.

காட்சி 2
.......மூன்று வருடத்திற்கு முன்னால்..........
இடம் : சிவராமன் வீடு.  காலம் : காலை பத்து மணி
பாத்திரங்கள்: சிவராமன், அவரது மனைவி 
மைதிலி, அஞ்சலை, முத்து, செல்வி

(முத்துவின் ஆட்டோவில் சிவராமன் பலமுறை பயணம் செய்திருக்கிறார். வீட்டு வேலை செய்ய நம்பகமான வேலைக்காரி வேண்டும். தெரிந்தால் சொல் என்று சிவராமன் கேட்க, தன் மனைவி அஞ்சலையை அழைத்து வருவதாகச் சொல்கிறான் முத்து.)

முத்து: இது என்னோட பொஞ்சாதி அஞ்சலை. பொண்ணு செல்வி.
மைதிலி: செல்வி என்ன பண்றா? படிக்கிறாளா இல்லை வேலைக்கு அனுப்பிச்சுட்டியா?
அஞ்சலை: செல்வி ஒம்பதாம் க்ளாஸ் படிக்கிறாம்மா. நல்லா படிப்பா. எப்போதும் பர்ஸ்ட் ரேங்க் வந்திடுவா.
சிவராமன்: வெரிகுட். நிறைய படிக்கவை. நல்லா படிச்சா பெரிய உத்யோகத்துக்கு போகலாம் செல்வி.
மைதிலி: அஞ்சலை இந்த வீடு மூணு ரூம், ஹால், சமையலறை. வீட்ல நாங்க நாலு பேர் இருக்கோம் – நான், அவரு, மகன், மருமகள். வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் தேய்ச்சு, வாஷிங் மெஷின் தோய்த்த துணியை உலர்த்தனும். இதுதான் வேலை. என்ன சம்பளம் எதிர் பார்க்கிற?
அஞ்சலை: மூவாயிரம் ரூவா கொடுங்கம்மா.
சிவராமன்: மூவாயிரம் கொஞ்சம் அதிகம். இரண்டாயிரத்து எழுநூறு தர்றோம்...எனக்கு பேரம் பேசறது பிடிக்காது. கடன், அட்வான்ஸ் கேட்கக் கூடாது. அடிக்கடி லீவு போடக் கூடாது. உனக்கு சம்மதம்னா எப்போ வேணுமானாலும் வேலையை ஆரம்பிக்கலாம்.
அஞ்சலை: நல்லதுங்கய்யா.  நான் இன்னிலேர்ந்தே வேலைக்கு வரேன்.

காட்சி 3
---- தற்போதைய காலம்-----
இடம் - சிவராமன் வீடு.
பாத்திரங்கள் : அஞ்சலை, மைதிலி, சிவராமன்

மைதிலி: என்ன அஞ்சலை..... ஆடி அசைஞ்சு மெள்ளமா வரே?. என்ன லேட் இன்னிக்கு?
அஞ்சலை: செல்வியோட பரிட்சை ரிசல்ட் வந்துதுமா. செல்வி ஸ்கூல்ல பர்ஸ்ட் ரேங்க் வாங்கி பாஸ் பண்ணியிருக்கா.
மைதிலி: நல்ல சேதி அஞ்சலை. காலேஜ்ல படிக்க வைக்கப் போறே இல்லையா. ரேங்க் வாங்கியிருக்கறதால நிச்சயமா அட்மிஷன் கிடைக்கும்.
அஞ்சலை: செல்வி படிக்கிற ஸ்கூல்ல அவங்களே காலேஜ் நடத்துறாங்க. பர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கறதால காலேஜ் அட்மிஷன் தரேன்னு சொல்லிட்டாங்க. மூணு வருஷம் சம்பளம் கட்டாம படிக்கலாம்.
மைதிலி: செல்வி நல்லா இருக்கணும். வீட்டுக்குப் போனதற்கப்புறம் பொண்ணுக்கு திருஷ்டி சுத்திப் போடு. இத்தனை நல்ல செய்தி சொல்ற. ஆனா முகத்தில ஏன் சந்தோஷத்தைக் காணும். இப்படி ஒரு நல்ல பொண்ணை பெத்த நீ சந்தோஷமா துள்ளிக் குதிக்க வேண்டாமா?
அஞ்சலை: எங்க சொந்தக்காரங்கள்ல மொதல்ல காலேஜ் படிக்கப் போற பொண்ணு செல்விதான். அதை நினைச்சா சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்குமா. முடியுமான்னு கவலையாவும் இருக்கு. சம்பளம் கட்ட வேண்டாம்னாலும் மீதி செலவை எப்படி சமாளிக்கப் போறோம்னு நினைச்சா தலை சுத்துதுமா.
மைதிலி: அப்படி வேற என்ன செலவு வரும்கிற?
அஞ்சலை: பொண்ணு காலேஜ் போகப் போவுது. பெரிய வீட்டுப் பொண்ணுங்களும் படிக்க வரும். நம்ம பொண்ணு ஓரளவு நல்ல ட்ரஸ் போட்டுகிட்டு போனாத்தான் நல்லா இருக்கும். துணிமணி தவிர புத்தகம், நோட்டுப்புத்தகம் அப்படின்னு செலவு இருக்கு. பத்தாயிரம் ரூவா இருந்தா செலவுக்கு வசதியா இருக்கும். இத்தனை வருஷம் வேலை செஞ்சும் பணம் சேர்த்து வைக்கலை. யார்கிட்ட இத்தனை பெரிய தொகை கடன் கேக்கிறது? இதையெல்லாம் நினைச்சா கவலையா இருக்கு.
மைதிலி: நீ சொல்றது புரியறது அஞ்சலை. காலேஜ் முதல் வருஷம் செலவு கொஞ்சம் அதிகமாத் தான் ஆகும்.
அஞ்சலை: அம்மா, ஐயாகிட்ட பேசி மூவாயிரம் ரூபாய் கடன் கொடுத்தா உபயோகமா இருக்கும். மீதி வீட்லயும் கேட்டுப் பார்க்கிறேன்.  மாசாமாசம் சம்பளத்தில  கழிச்சுக்கிடலாம்.
மைதிலி: உனக்குத்தான் தெரியுமே அஞ்சலை. ஐயாவுக்கு கடன் கொடுக்கிறது, வாங்கிறது எல்லாம் பிடிக்காது. உன்னோட நிலைமையும் எனக்குப் புரியுது. நீ பொறுமையா இரு. நான் சமயம் பார்த்து, ஐயாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.
அஞ்சலை: (தனக்குள்) இவங்க கடன் கொடுத்தாங்கன்னா இதைச் சொல்லி மீதி வீட்ல வாங்கிரலாம். நம்ம ஐயா கொஞ்சம் கறார் பேர்வழி. அவர் மனசு வைக்கணும்.
(அஞ்சலை வீட்டு வேலையில் மூழ்கினாள். சற்று நேரத்தில் சிவராமன் வெளியே செல்வது தெரிந்தது.  மைதிலி அம்மா கேட்டாங்களா, கடன் கிடைக்குமா என்ற கவலை அவள் மனதை வாட்டத் 
தொடங்கியது.---வீட்டு வேலை முடிந்து அஞ்சலை புறப்படத் தயாரானாள்.)

அஞ்சலை: (தயங்கியபடி), ஐயாவை கேட்டீங்களாம்மா?
மைதிலி: உன்னோட விஷயத்தைப் பத்திப் பேசினேன். அவர் ஒன்னும் சொல்லலை. வெளியே போய்ட்டார். வந்தவுடன நான் கேட்டுச் சொல்றேன். நீ மேல் வீட்ல வேலை முடிச்சுட்டு வா.
(அஞ்சலை வீட்டு வாசலைத் தாண்டுமுன், உள்ளே நுழைந்தார் சிவராமன்)

சிவராமன்: செல்விக்கு காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருக்குன்னு மைதிலி சொன்னாள். ரொம்ப சந்தோஷம் அஞ்சலை.
(சிவராமன் ஸ்வீட் பாக்கட்டுடன் ஒரு தடித்த கவரை அஞ்சலையிடம் கொடுத்தார்)

சிவராமன்: கவரைப் பிரித்துப் பார், அஞ்சலை.
(அஞ்சலை கவரைப் பிரித்துப் பார்த்தாள். கவரில் நூறு ரூபாய் கட்டு ஒன்று இருந்தது, பத்தாயிரம் ரூபாய்)
அஞ்சலை : (உணர்ச்சி வசப்பட்டு) ரொம்ப நன்றி ஐயா.  நான் மாசாமாசம் ஐநூறு ரூபாயா திருப்பிக் கொடுத்துடறேன்.
சிவராமன்: உன்னோட வருமானத்துக்கும், செலவுக்கும் சரியா இருக்குன்னு சொல்லுவே. எனக்கு மாசம் ஐநூறு கொடுக்கும் போது செலவுக்குப் பணம் போறலைன்னா என்ன பண்ணுவே. மறுபடியும் கடன் வாங்குவியா. செலவை சமாளிக்க?
(அஞ்சலை ஒன்றும் பேசாமல் நின்றாள்)

சிவராமன்: இப்ப உன் கையிலே இருக்கற பத்தாயிரம் ரூபாய், நீ சம்பாதிச்ச பணம். எனக்கு திருப்பித் தர வேண்டியதில்லை.
அஞ்சலை: (ஆச்சரியத்துடன்) ஐயா, நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியலை.
சிவராமன்: மூன்று வருஷம் முன்னால வேலை கேட்டு வந்தப்போ சம்பளம் மூவாயிரம் வேணும்னு சொன்னே. நான் பேரம் பேசி இரண்டாயிரத்து எழுநூறுதான் தருவேன்னு சொன்னேன். நீயும் ஒத்துக்கிட்டே .  அன்னிக்கு என்னை திட்டிக்கிட்டே போயிருப்பே.
அஞ்சலை: அப்படீல்லாம் இல்லீங்கய்யா...
சிவராமன்: நீ வந்தப்போ செல்வியும் கூட வந்தாள். செல்வி நல்லா படிப்பா. அவளுக்கு காலேஜ் படிக்கணும்னு ஆசைன்னு சொன்னே. மூன்று வருஷம் கழிச்சு காலேஜ் செலவுக்குப் பணம் வேணும் போது நீ என்ன செய்வேன்னு யோசிச்சுப் பார்த்தேன். அதானால நீ கேட்ட சம்பளத்தில முன்னூறு ரூபாய் குறைச்சு சொன்னேன்.  நீயும் ஒத்துக்கிட்டே. செல்வி பேரில ஒரு பாங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சு, மாதா மாதம் முன்னூறு ரூபாய் போட்டுகிட்டு வந்தேன். அந்தப் பணம் மூன்று வருடத்தில வட்டியோட பன்னிரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் இருக்கு. அந்தப் பணத்திலேந்து தான் உனக்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். 
மைதிலி: நீ நாலு வீட்ல வேலை செஞ்சு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற. முத்துவும் இரவு, பகல்ன்னு வாடகை ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறான். வர பணத்தில கொஞ்சம் சேமிச்சு வைச்சா மத்தவங்க கிட்ட தலை குனிஞ்சு நின்னு கடன் கேட்க வேண்டாம். 
அஞ்சலை: நீங்க சொல்றது சரிதான் அம்மா. ஆனால் வீட்டுச் செலவு செஞ்சப் பிறகு சேமிக்க பணம் இருக்கிறதில்லை.
சிவராமன்: நாம அங்கேதான் தப்பு பண்றோம். செலவு போக மிஞ்சினா சேமிக்கலாம்னு நினக்கிறோம். அது இல்லாம நான் இத்தனை சேமிக்கணும், இது போக மிச்சம் என்னோட மாதச் செலவுக்குன்னு முடிவு பண்ணினா நிச்சயமா சேமிக்கலாம். முதலிரண்டு மாசத்தில கஷ்டமா இருந்தாலும், கையில இருக்கிற பணத்திலே செலவு பண்ணனும்னு பழக்கம் வந்திடும்.
அஞ்சலை: நீங்க சொல்றது நல்லாப் புரியுதுயா. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கணும்னா சேமிக்கற மனசு வரணும்னு புரியுது.
(சிவராமன் அஞ்சலையிடம் பாங்க் பாஸ் புக் 
கொடுத்தார்.)

சிவராமன்: சேமிப்பு பத்தி இப்ப உனக்கு புரிஞ்சிருக்கு.  அடுத்த மாசத்திலிருந்து உனக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் அதிகம் தரோம். இனிமே நீயே வங்கியில் மாதம் முன்னூறு ரூபாய் கட்டு. முடிஞ்சா அதுக்கு மேலேயும் சேமிச்சு வை.  உன் குடும்பத்துக்கு நல்லது.  மனசில 
சேமிப்போம் உயர்வோம் அப்படிங்கிற உறுதி எப்போதும் இருக்கணும்.

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com