மரங்களின் வரங்கள்!: மூர்த்தி சிறியது, கீர்த்திப் பெரியது -  ஆனை குன்றிமணி மரம்

நான் தான் ஆனை குன்றிமணி மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் அப்ரஸ் பிரிகட்டாரியஸ் என்பதாகும். நான் அடிநாந்திரா பவோனினா குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: மூர்த்தி சிறியது, கீர்த்திப் பெரியது -  ஆனை குன்றிமணி மரம்


குழந்தைகளே நலமா,

நான் தான் ஆனை குன்றிமணி மரம் பேசுகிறேன். என் தாவரவியல் பெயர் அப்ரஸ் பிரிகட்டாரியஸ் என்பதாகும். நான் அடிநாந்திரா பவோனினா குடும்பத்தைச் சேர்ந்தவன். அடிநாந்திரா என்றால் மகரந்தத் தண்டிலுள்ள சுரப்பியைக் குறிக்கும், பவோனினா என்றால் இலத்தீன் மொழியில் மயில் இறகைப் போன்றது என்று பொருள். நான் 18 மீட்டர் உயரம் வரை வளருவேன். என் கிளைகள் 10 மீட்டர் அளவில் பரவியிருக்கும்.  என் இலைகள் இரட்டைக் கூட்டிலை அமைப்பைக் கொண்டது. குப்பையில் எறிந்தாலும் குன்றிமணி சுருங்காது என்ற பழமொழி என் பெருமையைக் குறிக்கிறது. என்னை அக்கால மக்கள் மணிச்சிகை, பவளக்குன்றி என்று சொல்வாங்களாம். என் காய்கள் முற்றி, கீழே விழுந்து வெடித்தால், மரத்தின் அடியில் விதைகள் நிறைந்து காணப்படும்.

குழந்தைகளே, அக்கால மக்கள் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை  எடைப் போட என் மரத்திலிருந்து கிடைக்கும் குன்றிமணியைத் தான் பயன்படுத்தினார்களாம். உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, இரண்டு குன்றிமணிகள் என்பது தற்காலத்தில் உள்ள ஒரு கிராம் அளவாகும்.  அக்கால மக்கள் வீடுகளிலும், மர நிழல்களிலும் அமர்ந்து விளையாடும் பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளில் குன்றிமணிகளைப் பயன்படுத்தி விளையாடுவார்கள். இப்போ, ஹும் எல்லாம் மறந்து போச்சு. என்னையும் மறந்துட்டீங்க.

அக்காலத்தில் பெண்கள் அணியும் கழுத்து அணிகலன்களில் நான் கட்டாயம் இடம் பிடித்து அழகுக்கு அழகூட்டுவேன். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் மற்றும் தெய்வ வடிவவங்களின் கண்களுக்கு குன்றிமணி விதைகளையே பயன்படுத்துவார்கள். உங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தித் திருநாளின் போது, எல்லோர் வீட்டிலும் எழுந்தருளும் களிமண் பிள்ளையாரின் கண்களாக என் குன்றிமணிகள் தானே அருள் ஒளி வீசுகிறது.  என் இலைகள், பட்டைகள், விதைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. குழந்தைகளே. சித்தர்கள் உரைத்த அஷ்ட கர்ம மூலிகைகளில் குன்றிமணியும் உண்டு.

குழந்தைகளே, எனக்கு ஒரு சிறப்பு இருக்கு, சொல்லட்டுமா? திருக்குறளில் காணப்படும் ஒரே விதை நான் தான். குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். அதாவது குழந்தைகளே, மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமானச் செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர் என்பது இதன் பொருளாகும்.  எனவே, குழந்தைகளே, நீங்க, தாழ்வுக்குக் காரணமான செயல்களை எப்போதும் செய்யக் கூடாது, என்ன சரியா?

என் இலையை நன்கு  மசிய அரைத்து கை, கால்களில் தேய்த்து வந்தால் உங்களுக்கு வாத நோய் வரவே வராது.  அதையே கஷாயமாக்கி குடித்தால், சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சட்டென நின்று விடும், உடல்வலி தீரும், சளி, இருமல் தொல்லைகள், வயிற்றில் புண்ணால் ஏற்படும் வலியும் ஓடி விடும். என் இளம் தளிர்களை கீரையாகவும் சமைத்து உண்ணலாம்.  இதனால் உங்களுக்கு செரிமான பாதிப்புகள் விலகுவதுடன், உடலுக்கு நல்ல சத்துகளுடன், வயிறும் நலம் பெறும். என் விதையை நன்கு அரைத்து கட்டி, புண்கள் மீது தடவினால் வீக்கம் குறைந்து இருந்த இடம் தெரியாது, புண்கள் சீழ் பிடிக்காது. என் மரப் பட்டைத் தூளை நீரில் சுண்டக் காய்ச்சி பருகினால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு மறைந்து விடும்.

என் வேர்களை நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி பருகி வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், வெண் குஷ்டம், சொரி, சிரங்கு வரவே வராது.  குன்றிமணி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை சமைக்கவும் பயன்படுத்தினால்,  உங்கள் செரிமானத்தைத் தூண்டி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை வெளியேற்றி விடும்.  குழந்தைகளே, உங்கள் தலைமுடி உதிர்கிறதா? கவலையை விடுங்க. குன்றிமணி, வெந்தயம் இவற்றை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து பின் தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிரும் பிரச்னை உங்களுக்கு இருக்கவே இருக்காது.  சந்தோஷமா ? 
நான் பூச்சிகள் அரிக்காத உறுதியான மரம் என்பதால், என்னைக் கொண்டு மேஜைகள், நாற்காலிகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், வீடுகளில் உள்அலங்கார வேலைகள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com